தமிழக பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்ற கையோடு, '2026 சட்டமன்றத் தேர்தலில், 150 எம்.எல்.ஏ-க்களைப் பெற்று கோட்டையில் அமர்வோம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டவர் அண்ணாமலை. அண்மையில், திருப்பூரில் நடைபெற்ற அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலும், இந்த உறுதிமொழியை மீண்டும் அழுத்தமாக உச்சரித்திருக்கிறார் அவர்.
வேல் யாத்திரை, கோயில் திறப்பு போராட்டம் என கடவுளை முன்னிறுத்தி கட்சி நடத்திவந்த தமிழக பா.ஜ.க அண்மைக்காலமாக மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தியும், போராட்டம் செய்ய ஆரம்பித்திருப்பது யாரும் எதிர்பாராத திருப்பம். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகான தமிழக அரசியல் களத்தில், 'தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி தமிழக பா.ஜ.க-தான்' என்று தாங்களாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க-வினர்.
அ.தி.மு.க-வில் நிலவிவரும் குழப்பநிலையைப் பயன்படுத்தி, தமிழக பா.ஜ.க-வை முன்னணி எதிர்க்கட்சியாக்கிவிடுவதற்கான அரசியல் வியூகங்களை தேசிய பா.ஜ.க வகுத்துவருகிறது என்று செய்திகள் வெளியாகிவரும் நேரத்தில், '2026-ல் ஆட்சி' என்ற அண்ணாமலையின் முழக்கம் அரசியல் விமர்சகர்களால் உற்று கவனிக்கப்படுகிறது.
இதுகுறித்து பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான எல்.பி.லட்சுமணன் கேட்டோம். ``தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், அண்ணாமலை அப்படிப் பேசியிருக்கிறார். தொண்டர்களை நிர்வகிக்கிற பொறுப்பிலிருக்கும் நிர்வாகிகளுக்கான கூட்டம். இதுபோன்ற கூட்டங்களின்போது, தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும்விதமாக இதுபோன்றுதான் எல்லா அரசியல் கட்சியினருமே பேசுவார்கள்.
இன்றைக்கு அ.தி.மு.க தோற்றுவிட்ட சூழலில், 'தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி தமிழக பா.ஜ.க-தான்' என்றதொரு கருத்தை அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பா.ஜ.க-வினர் பரப்பி வருகிறார்கள். தங்களுடைய ஊடக பலத்தை வைத்துக்கொண்டு, வெறுமனே இதுபோன்ற செய்திகளை வேண்டுமானால் வரவைக்க முடியுமே தவிர, உண்மையான கள நிலவரத்தை மாற்றிவிட முடியாது.
மக்கள் பலம், தொண்டர்கள் பலம், கட்சிக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கட்சி மட்டுமே பெரிய கட்சியாக அறியப்படும். அதுவே எதிர்க்கட்சியாக இருந்தால், 'நாங்கள் வானத்தை வளைத்துக் காட்டுவோம்' என்று எளிதாக சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால் ஆளுங்கட்சியாக இருந்தால், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். மாநில நலன்களைப் பாதுகாக்க வேண்டும்.
பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில், கடந்த 7 ஆண்டுகளாக மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்தாலும், இதுநாள் வரையிலும் தமிழக நலன்களைப் புறக்கணித்தே வருகிறார்கள். ஆக, 'தமிழ்நாட்டைத் தள்ளி வைக்கிறார்கள்' என்ற சந்தேகப் பார்வை மக்களிடம் ஆழமாக வேரூன்றிவிட்டது. மக்களின் இந்த மனநிலையை மாற்றுவதற்கான எந்த முயற்சிகளையும் பா.ஜ.க இதுவரை செய்யவில்லை. இதைச் செய்யாமல், தமிழக ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.க பிடித்துவிடும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இதுவரையிலும் மாநிலத்திடமிருந்து பறித்த உரிமைகளை திருப்பிக் கொடுத்துவிட்டு, 'இனிமேல் அப்படி செய்யமாட்டோம்' என்று தங்கள் செயல்பாடுகளால் பா.ஜ.க நிலைநாட்ட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்றைய தேதிவரை ஒரு காம்பவுண்ட் சுவர்கூட கட்டவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு லைசென்ஸ் கொடுக்கிறார்களே தவிர, அதை மூடுவதற்கான எந்த முயற்சிகளையும் அவர்கள் எடுக்கவேயில்லை. இதேபோல், காவிரி விஷயத்திலும் நாம் கேட்டதற்கு மாறான விஷயங்களைத்தான் அமைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துவிடும் என்பதெல்லாம் எட்டாக்கனிதான்!.
'பெட்ரோல் விலையைக் குறைக்கவேண்டும்' என்று மாநில அரசுக்கு எதிராக அண்மையில்கூட போராட்டம் நடத்தியது தமிழக பா.ஜ.க. மத்திய அரசு வரியைக் குறைத்தால், தானாகவே பெட்ரோல் விலை குறையப்போகிறது. ஆனால், இந்த உண்மையை மறைத்து மாநில அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாக தமிழக பா.ஜ.க வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறவரை, தமிழக மக்கள் அவர்களை நம்பப் போவதில்லை.
அதேசமயம், 'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்ற கதையாக தமிழக பா.ஜ.க-வும் ஒருகாலத்தில் இங்கே ஆட்சியைப் பிடிக்கலாம்தான். அதற்கு, 'வேல் யாத்திரை' போன்ற விஷயங்களைக் கையில் எடுத்துப் போராடாமல், உண்மையாகவே மக்கள் நலன் சார்ந்த விஷயங்களைக் கையிலெடுத்துப் போராட வேண்டும். எது எப்படியிருந்தாலும் 2026-ல் தமிழக பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வரும் என்பது நூறு சதவிகிதம் சாத்தியம் இல்லை!'' என்றார் உறுதியாக.
இதையடுத்து, தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனிடம், 2026-ல் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக தமிழக பா.ஜ.க வகுத்திருக்கும் வியூகங்கள் குறித்தும், தமிழக பா.ஜ.க மீதான அரசியல் விமர்சனங்கள் குறித்து கேட்டோம். ``அரசியல் களத்திலிருக்கும் ஒவ்வோர் இயக்கமும் 'தாங்கள் வளரவேண்டும்; தங்களுடைய ஆட்சிதான் பொறுப்புக்கு வரவேண்டும்' என்றெல்லாம் எண்ணுவது இயல்பானது. அதற்கான முயற்சியாக அந்தந்த இயக்கங்களும் கொள்கைகளை வகுத்து இயங்கிவருவதும் சரியான நடைமுறைதான்.
அந்தவகையில், மத்திய பா.ஜ.க அரசு, தமிழக நலனுக்காகத் தருகிற நிதியாதாரங்கள், திட்டங்கள், தமிழ் மொழிக்காக உலக அரங்கில் ஒலித்துவரும் பிரதமர் நரேந்திரமோடியின் குரல், தமிழ்ப் பண்பாடு - பாரம்பரியம் பற்றிய பெருமிதம் ஆகியவை எல்லாம் தமிழக பா.ஜ.க-வினரால் உலக அளவில் எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. இவை தமிழக மக்களிடையே ஓர் உத்வேகத்தை உருவாக்கி, அவர்கள் கவனத்தை தமிழக பா.ஜ.க-வை நோக்கித் திருப்பியிருக்கிறது.
Also Read: முதல்வர் வீட்டிலிருந்து கிளம்பும் சென்னை மேயர்; இந்தியில் பேசிய சைலேந்திர பாபு! -கழுகார் அப்டேட்ஸ்
பாரத தேசத்தினுடைய வட பகுதியிலிருந்து வந்து, 'சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தமிழ்தான் தொன்மையான மொழி' என்று பேசிய ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க ஆட்சியின்போதுதான் தமிழகத்தின் நலன் புறக்கணிக்கப்பட்டது என்று ஏதாவது ஒரு விஷயத்தையாவது குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா? சேலம் முதல் சென்னை வரையிலான 8 வழிச் சாலைத் திட்டத்தை வேண்டாம் என்று சொல்கிறார்கள். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமா?
முல்லைப்பெரியாறு அணையில், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சரை அழைத்துவந்து நீர் திறந்தார்களே அதுபோலவா தமிழக உரிமையை பா.ஜ.க விட்டுக்கொடுத்தது?. ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்யப்பட்டதற்கு யார் காரணம்? மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைமுறைக்கு வந்ததற்கு யார் காரணம் என்ற உண்மையெல்லாம் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை என்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வரும் அளவுக்கு மத்திய அரசு செயல்பட்டிருக்கிறதே... இதை யாராவது பாராட்டியிருக்கிறார்களா? தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை என்ற விஷயத்தை சாத்தியப்படுத்தியதற்கே பிரதமர் மோடிதான் காரணம்.
Also Read: `அதிமுக-வில் தொடரும் ஆடு புலி ஆட்டம்!' - பின்னாலிருந்து இயக்குவது யார்?
முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டிருக்கும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையை தமிழக அரசு நிர்வகித்துவருகிறது. இந்த இ.எஸ்.ஐ மருத்துவமனைதான் கொரோனா பேரிடரின்போது, மிகச் சிறப்பாக செயல்பட்டு எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது. இதுமட்டுமா... 'தடுப்பூசியே போடாதீர்கள்' என்றெல்லாம் பிரசாரம் செய்தவர்களே, பின்னாளில் 'தமிழ்நாட்டுக்கு தடுப்பூசி தராமல், குஜராத்துக்கே கொடுத்துவிட்டார்கள்' என்றெல்லாம் மத்திய பா.ஜ.க அரசு மீது பழி போட்டார்கள். ஆனால், மோடி தமிழ்நாட்டுக்கு அள்ளித்தந்த இலவச தடுப்பூசிகளால்தான் தமிழகமே கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து இன்று காப்பாற்றப்பட்டிருக்கிறது.
காவிரி விவகாரத்திலும்கூட, நதி நீர் ஆணையத்துக்கு அதிகாரம் தந்தவர் பிரதமர் மோடி. இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழகத்துக்கு தேவையான நீரை கர்நாடகாவிலிருந்து பெற்றிருக்கிறோம். இதுநாள்வரை கர்நாடகாவிலிருக்கும் அணைகள் நிரம்பி வழிந்த நீரை மட்டும்தானே தமிழகத்துக்குத் தந்துகொண்டிருந்தன. ஆனாலும்கூட, கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பில் இருந்துவருவதால், எங்கள் மீது வேண்டாத வீண்பழியை போடுகின்றன இங்கிருக்கும் அரசியல் கட்சிகள்.
தமிழக பா.ஜ.க-வின் உழைப்பு, நேர்மை, தமிழக நலனிலிருக்கும் அக்கறை ஆகியவற்றையெல்லாம் தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எங்கள் செயல்பாடுகளை வகுத்து செயல்பட்டுவருகிறோம். எங்களை நோக்கி வைக்கப்படும் போலி வாதங்களுக்கு எதிராக, எங்கள் வாதங்களை நெறியோடும், பண்போடும் தமிழக மக்கள் முன் எடுத்துவைக்கிறோம். இந்த அம்சங்கள் எல்லாம் ஒன்றுகூடி தமிழக மக்கள் அனைவரையும் தமிழக பா.ஜ.க-வை நோக்கித் திருப்பும்!'' என்றார்.
Also Read: ``2026-ல் 150 எம்.எல்.ஏ-க்களுடன் கோட்டையைப் பிடிப்போம்” - அடித்துச் சொல்கிறார் அண்ணாமலை
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-explaining-bjps-position-in-tamilnadu-and-its-chances-of-winning-in-coming-polls
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக