Ad

திங்கள், 29 நவம்பர், 2021

திரிபுரா: உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி; மார்க்சிஸ்ட் கட்சிக்குப் பெரும் பின்னடைவு!

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடந்துவருகிறது. இந்த நிலையில், 13 மாநகராட்சி கவுன்சில் மற்றும் 6 நகரப் பஞ்சாயத்துகளில் உள்ள 334 இடங்களுக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவற்றில், 112 இடங்களில் பா.ஜ.க போட்டியின்றி வெற்றிபெற்றது. மீதமிருக்கும் 222 இடங்களுக்குக் கடந்த 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்துவந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகின. 222 இடங்களில் 217 இடங்களில் பா.ஜ.க மிக பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

பா.ஜ.க

வெறும் ஐந்து இடங்களில் மட்டும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அம்பாசா நகராட்சியில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் வெற்றிபெற்றிருக்கிறது. சி.பி.ஐ (எம்) மூன்று இடங்களிலும், திரிபுரா மோதா என்ற கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அகர்தலா மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 இடங்களையும் பா.ஜ.க முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது. திரிபுராவில் மொத்தமுள்ள 14 நகராட்சிகளையும், 6 மாநகராட்சிகளையும் ஆளும் பா.ஜ.க வாரிச்சுருட்டியிருக்கிறது. பாஜக-வின் இந்தத் தேர்தல் வெற்றி குறித்து, மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் தனது ட்விட்டர் பக்கத்தில், `மாண்புமிகு தலைமையின் மீது அபரிமிதமான நம்பிக்கையைக் காட்டியதற்காக அனைத்து மாநில மக்களுக்கும் மிக்க நன்றி. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 37 லட்சம் மாநில மக்களின் முன்னேற்றத்துக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றிவருகிறோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா, இடதுசாரிகள் கோலோச்சிய மாநிலம். இந்த மாநிலத்தில் 1993 முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி செய்துவந்த நிலையில், 2018 மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்று அந்தக் கட்சியை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கிவிட்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. பாஜக-வின் வெற்றியைத் தொடர்ந்து, திரிபுராவின் முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவி ஏற்றார்.

பிப்லப் குமார் தேப்

2023-ல் திரிபுராவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் அதற்கான முன்னோட்டமாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்பட்டது. முன்னதாக, திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் - சி.பி.எம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவிவந்தது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் திரிபுராவில் பாஜக-வின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை உணர்த்தியிருப்பதாகவும், இது பிரதமர் மோடிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும் பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர்.

கடந்த மாதம் தேர்தலின்போது, திரிபுராவில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு ஆளும் பாஜக-தான் காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சி.பி.எம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் சோனியா கோஷ் கைதுசெய்யப்பட்டார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை பா.ஜ.க-வினர் போலீஸாரின் துணையுடன் கொடூரமாகத் தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. அண்மையில் நடந்த 222 வார்டுகளுக்கான தேர்தலில் மொத்தம் 785 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர்.

திரிபுரா கலவரம்

ஏற்கெனவே 36 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜிதேந்திரா சௌத்ரி கூறும்போது, ``எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தி வேட்புமனுக்களை பா.ஜ.க-வினர் வாபஸ் வாங்கச் செய்திருக்கின்றனர். பா.ஜ.க-வால் அடைக்கலம் அளிக்கப்படும் குண்டர்கள், எங்கள் தொண்டர்கள் பலரைத் தாக்கியிருக்கின்றனர். ஐந்து நகராட்சிகள் மற்றும் இரண்டு நகரப் பஞ்சாயத்துகளில் எங்கள் கட்சியினர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய முடியவில்லை" எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

மம்தா பானர்ஜி

இந்த நிலையில், பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியைப் பதிவு செய்து, அரசியல் அரங்கை அதிரவைத்திருக்கிறது. திரிபுராவில் ஆதிக்கம் செலுத்திவந்த மார்க்சிஸ்ட் கட்சி இந்தத் தேர்தல் தோல்வியால் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. மாநிலத்தில், வலுப்பெற்றிருக்கும் பா.ஜ.க-வை சமாளிக்க முடியாமல் மற்ற எதிர்க்கட்சிகள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், மம்தா தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் திரிபுராவில் வலுப்பெறச் செய்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டிவருகிறார்.

- மு.விஜயா

(மாணவப் பத்திரிகையாளர்)

Also Read: வகுப்புவாத வன்முறை பாதிப்புகள் மறைக்கப்படுகின்றனவா?! - திரிபுரா சம்பவங்களும் பின்னணியும்



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-registers-big-win-in-tripura-civic-elections

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக