Ad

வெள்ளி, 26 நவம்பர், 2021

Fact check : ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையம் உ.பி-யில் வருகிறதா?

உத்தரப் பிரதேசத்தின் நொய்டா அருகே ஜூவார் பகுதியில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு நவம்பர் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக இது அமைய உள்ளது. ''கட்டி முடிக்கப்பட்ட பிறகு இதுவே ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும்'' என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் கூறி வருகிறார்கள்.
ஆனால், இது உண்மையல்ல! சவூதி அரேபியாவின் தம்மம் விமான நிலையம், 'உலகின் மிகப்பெரிய விமான நிலையம்' என்ற கின்னஸ் சாதனையைத் தன்வசம் வைத்துள்ளது. 780 சதுர கி.மீ பரப்பளவில் இருக்கும் அந்த விமான நிலையம், நொய்டா நகரத்தைவிடவே நான்கு மடங்கு பெரியது. சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் உள்ள டாக்ஸிங் விமான நிலையமும் நொய்டா விமான நிலையத்தைவிட பரப்பளவில் பெரியது.
நொய்டா விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அதன் இரண்டு டெர்மினல்களும் சேர்த்து 4,88,000 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும். பெய்ஜிங் விமான நிலையத்தின் பரப்பளவு ஏழு லட்சம் சதுர மீட்டர்.

Fact check


2050-ம் ஆண்டில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நொய்டா விமான நிலையம் ஆண்டுக்கு 4,89,700 விமானப் பயணங்களைக் கையாளும் என்று கூறப்படுகிறது. சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் விமான நிலையங்கள் இப்போதே இதைவிட அதிக விமானப் போக்குவரத்தைக் கையாள்கின்றன.
பயணிகள் எண்ணிக்கையிலும்கூட நொய்டா விமான நிலையம் முதலாவதாக வராது. முழுமையாக முடிந்தபிறகு இது ஆண்டுக்கு ஏழு கோடி பயணிகளைக் கையாளும் என்று புள்ளிவிவரம் சொல்லப்படுகிறது.
ஆனால், சீனாவின் பெய்ஜிங் கேப்பிடல் சர்வதேச விமான நிலையம் இப்போதே ஆண்டுக்கு 9 கோடியே 43 லட்சம் பயணிகளைக் கையாள்கிறது. துபாய் சர்வதேச விமான நிலையத்தை ஆண்டுக்கு 8 கோடியே 36 லட்சம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக நொய்டா விமான நிலையம் மாறும். ஆனால், ஆசியாவின் பெரிய விமான நிலையமாக இருக்காது.

இதேபோல, 'நொய்டா விமான நிலையத்தின் மாதிரிப்படம் இதுதான்' என்று ஒரு விமான நிலைய மாதிரிப்படத்தை சமூக வலைதளங்களில் பலர் ஷேர் செய்து வருகிறார்கள். உ.பி அமைச்சர் சித்தார்த் நாத் சிங், மேற்கு உத்தரப் பிரதேச பா.ஜ.க தலைவர் மோஹித் பெனிவால் ஆகியோர் இதை ட்விட்டரில் பகிர்ந்து, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லியிருந்தார்கள். சில பத்திரிகைகளிலும் இது வெளியாகி இருந்தது.
ஆனால், இது தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தின் மாதிரிப் படம் என்று தெரிய வந்துள்ளது. தென் கொரியாவின் மிகப்பெரிய விமான நிலையமான இது, 20 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது.



source https://www.vikatan.com/oddities/miscellaneous/fact-check-article-about-uttar-pradesh-airport-news

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக