Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

Doctor Vikatan: மொபைல் உபயோகிப்பதால் கை விரல்கள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன; சரிசெய்ய முடியுமா?

மொபைலை ஒரே கையில் பிடித்துக்கொண்டிருந்தால் விரல்கள் இழுத்துப் பிடித்துக்கொள்கின்றன. இதற்கு என்ன காரணம்... சரிசெய்ய முடியுமா?

- சதீஷ் (விகடன் இணையத்திலிருந்து)

நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுனில் கபிலவாயி.

``செல்போனை பிடித்தபடி பேசும்போது அதன் ஒரு முனை மணிக்கட்டுப் பகுதியில் படும். மணிக்கட்டின் நடுப்பகுதியில் மீடியன் நரம்பு என ஒன்று இருக்கும். மொபைல்போனில் பேசும்போது அந்த நரம்பு அழுத்தப்படலாம்.

அந்தப் பகுதியின் மேல் பகுதியைப் பாதுகாக்கும்படி எலும்பு எதுவும் இருக்காது. மென்மையான திசுக்கள் மட்டுமே இருக்கும். மீடியன் நரம்பு அழுத்தப்படுவதால் கட்டைவிரல் மற்றும் அதையடுத்து மோதிரவிரல் வரைகூட இந்த இழுத்துப் பிடிக்கும் உணர்வு வரும். ஹைப்போ தைராய்டு பாதிப்புள்ளவர்களுக்கு விரல்கள் பிடித்துக்கொள்ளும் இந்த பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம்.

செல்போனை கையில் வைத்துப்பேசும்போது அதை விரல்களில் மட்டும் பிடித்தபடியும், மீடியன் நரம்பை அழுத்தாமலும் உபயோகிக்க வேண்டும். நீண்டநேரம் மொபைல் போனை கையில் வைத்துப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கு இது உதவும். நீண்டகாலமாக செல்போன் உபயோகித்ததன் விளைவாக, நீண்டகால வலியை அனுபவிப்பவர்களுக்கு சில டெஸ்ட்டுகள் தேவைப்படும். முதல் கட்டமாக `நர்வ் கண்டக்ஷன் ஸ்டடி' (Nerve conduction study) என்பது மேற்கொள்ளப்படும்.

Also Read: Doctor Vikatan: மழைக்காலத்தில் தொற்றுநோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

கரன்ட் ஷாக் கொடுத்து, நரம்பில் அது எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பது பதிவுசெய்யப்படும். மணிக்கட்டின் மேல் ரிசீவர் போன்ற ஒன்றை வைத்துவிட்டு, அதன் மேல் கரன்ட் வைத்து தூண்டப்பட்டு இது செக் செய்யப்படும். அந்த வேகம் குறைவாக இருக்கும்பட்சத்தில்தான் விரல்களில் இதுபோன்ற வலி, இழுக்கும் உணர்வு போன்றவை வரும்.

டெஸ்ட்டில் இது உறுதிசெய்யப்பட்டால், முதலில் வாழ்வியல் மாற்றம் பரிந்துரைக்கப்படும். அதாவது எந்த வேலையைச் செய்தாலும் கை மற்றும் விரல்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது. எழுதுவது, பைக் ஓட்டுவது என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். சமையல் வேலைகள் செய்வதால் பெண்களுக்கு இந்தப் பிரச்னை மிகவும் சகஜமாக வரலாம். அவர்களுக்கும் சமைக்கும்போது கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் விரல்களை மட்டும் உபயோகிக்கும்படி கற்றுக்கொடுக்கப்படும். இவற்றைக் கடைப்பிடித்தாலே வலி குறையத் தொடங்கும். அப்படிக் குறையாதவர்களுக்கு தற்காலிகமாக வலியைக் குறைக்கும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். அதையும் தாண்டி, வலி தீவிரமாக இருந்தாலோ, நரம்பு பாதிப்பு அதிகமிருந்தாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும். மீடியன் நரம்பை முடியிருக்கும் இடத்தை அறுவைசிகிச்சையின் மூலம் திறந்துவிட்டால் சரியாகிவிடும்.

gadgets in hands (Representational Image)

Also Read: Doctor Vikatan: மைக்ரேன் தலைவலிக்கு என்ன தீர்வு?

நடுத்தர வயதிலுள்ளோரையே இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கும். டீன் ஏஜில் மொபைல் பயன்பாடு அதிகம் என்பதால் அந்த வயதிலிருந்தே ஆரம்பிக்கும் பிரச்னை, மெள்ள மெள்ள அதிகரித்து, குறிப்பிட்ட வயதில் தீவிரமாகும். மொபைல் பயன்படுத்தும்போது கழுத்தின் பொசிஷன் சரியாக இல்லாவிட்டாலும் கழுத்து நரம்பும் பாதிக்கப்படும். அதன் காரணமாகவும் இழுக்கும் உணர்வு ஏற்படலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/how-to-get-rid-of-muscle-spasm-in-hands-caused-due-to-excessive-phone-usage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக