உயிருக்கான இன்ஷூரன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ்; உடைமைகளுக்கானது ஜெனரல் இன்ஷூரன்ஸ். நம் வாழ்வுக்குப் பிறகு, நம் குடும்பத்தாருக்கு உதவக்கூடிய லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிஸிகள் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். நாம் வாழும்போதே நமது உடைமைகளைப் பாதுகாக்கும் ஜெனரல் இன்ஷூரன்ஸால் ஏற்படக்கூடிய நற்பயன்களை இப்போது பார்க்கலாம்.
வீடு / வாகனம் / ஆரோக்கியம் / பயணம் போன்ற விஷயங்களில் இயற்கைச் சீற்றங்களாலோ, மனிதத் தவறுகளாலோ பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பூகம்பம், வெள்ளம், தீ, திருட்டு, விபத்து போன்றவை நமக்கும், நம் பொருள்களுக்கும் மிகுந்த சேதாரம் விளைவிக்க வல்லவை. இந்த சேதாரங்களை ஈடுகட்டுவது ஜெனரல் இன்ஷூரன்ஸ். அதில் மிக முக்கியமானது ஹெல்த் இன்ஷூரன்ஸ்.
Also Read: ஆயுள் காப்பீடு செய்யத் தயாராகிவிட்டீர்களா? இந்த பாலிசிகள் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள் - 49
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
`ஹெல்த் இஸ் வெல்த்’ என்ற ஆங்கிலப் பழமொழி பொய்யல்ல என்று கொரோனா நன்றாகவே நிரூபித்துவிட்டது. இதுவரை சேர்த்த பணத்தையும் இழந்து, மேற்கொண்டு கடனும் வாங்கி செலவழித்து கொரோனாவை எதிர்கொண்ட தலைமுறை நாம். சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் செயலற்றுப் போதல், கேன்சர், மாரடைப்பு போன்ற கொடும் வியாதிகள் ஆகியவை மிகுந்த செலவைத் தருபவை என்று நாம் அறிவோம். இந்த வரிசையில் கொரோனா, கறுப்புப் பூஞ்சை போன்ற வைரஸ்களும் சேர்ந்துவிட்டன. ஆறு லட்சம், ஏழு லட்சம் என்பது அதிக பட்ச ஆஸ்பத்திரி செலவு என்று நாம் எண்ணியிருக்க, கொரோனாவுக்கு பதினைந்து லட்சம், இருபது லட்சம் என்று செலவானதைப் பார்த்தோம்.
இது போன்ற தருணங்களில் டாக்டர் கன்சல்டேஷன், ஆம்புலன்ஸ் சார்ஜஸ், ஆஸ்பத்திரியில் சேர்க்கும் முன்னும், சேர்த்த பின்னும் ஆகும் செலவுகள் போன்ற செலவுகளை ஈடு செய்யும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகவும் உபயோகமான ஒன்று. உதாரணமாக க்ரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் நமக்கு கேன்சர் போன்ற பெரிய வியாதிகள் உள்ளன என்று தெரிந்த கணமே மொத்த இன்ஷூரன்ஸ் பணத்தையும் தந்துவிடுவார்கள்.
தனி நபரை மட்டுமன்றி, ஒரே பாலிசியில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரையும் கவர் செய்யும் ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசிகளும் உள்ளன. நிறைய கம்பெனிகள் பணியாளர்களுக்காக குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கின்றன. பொதுவாக ஹெல்த் இன்ஷூரன்ஸை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டியிருக்கும். நாம் இன்ஷூரன்ஸ் பணம் எதுவும் க்ளெய்ம் செய்யாத பட்சத்தில் ``நோ க்ளெய்ம் போனஸ்” என்று நமது கவரேஜ் அளவை இன்ஷூரன்ஸ் நிறுவனம் அதிகரிக்கும்.
Also Read: உங்கள் வாழ்க்கையின் பாதுகாவலர்கள் இந்த இரண்டு இன்ஷூரன்ஸ்கள்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 48
வாகனக்காப்பீடு
நம் நாட்டில் ஒவ்வொரு மணி நேரமும் 55 வாகன விபத்துக்கள் நடக்கின்றன. அவற்றில் 17 விபத்துகள் உயிரிழப்பில் முடிவதாக அரசு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் திருட்டு, கலவரம் போன்றவைகளும் வாகனங்களுக்கும், அவற்றில் பயணிப்பவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றை ஈடு செய்ய வாகனக்காப்பீடு உதவுகிறது.
இதில் தேர்ட் பார்ட்டி, காம்ப்ரிஹென்ஸிவ் என்று இரண்டு வகை உண்டு. தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் விபத்தில் காயம் பட்டவருக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் வழங்குகிறது. வாகனத்துக்கோ, ஓட்டுநருக்கோ கவரேஜ் இல்லை. மோட்டார் வெஹிகிள் ஆக்ட் 1988-ன் படி இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களும் தேர்ட் பார்ட்டி இன்ஷூரன்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
காம்ப்ரிஹென்ஸிவ் இன்ஷூரன்ஸ், வாகனத்துக்கும், ஓட்டுநருக்கும், காயம் பட்ட தேர்ட் பார்ட்டிக்கும் கூட கவரேஜ் தந்து எல்லாவித இழப்புகளையும் ஈடு செய்கிறது. இதிலும் `நோ க்ளெய்ம் போனஸ்’ உண்டு.
வீட்டுக்காப்பீடு
இயற்கைச் சீற்றங்களாலோ, மனிதத் தவறுகளாலோ வீட்டுக்கும் அதில் உள்ள நகைகள், ஆர்ட் வேலைப்பாடுகள், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் போன்றவற்றுக்கும் ஏற்படும் சேதத்தை ஈடு செய்ய இந்தக் காப்பீடு உதவுகிறது. வீட்டுக்கு ஏற்பட்ட சேதத்தால் வாடகை வராதபட்சத்தில் அதையும் சில பாலிசிகள் ஈடுகட்டுகின்றன இன்னும் சில பாலிசிகள், சேதமடைந்த வீடு சரியாகும் வரை வீட்டு உரிமையாளர்கள் வேறு இடங்களில் தங்க நேர்ந்தால் அந்த வாடகையையும் ஈடு செய்கின்றன.
Also Read: இன்னும் இன்ஷூரன்ஸை ஒரு முதலீடாகவே நினைக்கிறீர்களா?தவறு செய்கிறீர்கள்! - பணம் பண்ணலாம் வாங்க - 47
பயணக்காப்பீடு
இது வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் உபயோகமானது. லக்கேஜ் இழப்பு, பயணத் தாமதங்கள் மற்றும் ரத்து போன்றவை ஏற்படுத்தக்கூடிய இழப்புகளை பயணக் காப்பீடு ஈடு செய்கிறது. பயணத்தின்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற நேர்ந்தால் அதற்கான இழப்பீடு தரக்கூடிய பாலிசிகளும் உள்ளன.
மேற்கண்ட இன்ஷூரன்ஸுகளை வாங்க விரும்புபவர்கள் முதலில் அந்த பாலிசியைத் தரும் கம்பெனிகளில் எவையெவை பிரீமியத்துக்குத் தகுந்த நல்ல கவரேஜ் தருகின்றன, அவற்றின் க்ளெய்ம் செட்டில்மென்ட் ரேஷியோ என்ன என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். முக்கியமாக ஹெல்த் இன்ஷூரன்ஸில் கேஷ்லெஸ் வசதி தரும் நெட்வொர்க் ஆஸ்பத்திரிகள், வாகனக் காப்பீட்டில் கேஷ்லெஸ் வசதி தரும் கேரேஜுகள் நிறைய இருக்கின்றனவா, 24*7 கஸ்டமர் சப்போர்ட் உள்ளதா என்பதைக் கவனித்து வாங்குதல் நலம். இவற்றை அறிய ஆன்லைனில் கம்பெனிகள் பற்றிக் கிடைக்கும் விமர்சனங்கள் உதவும்.
- அடுத்து திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்
source https://www.vikatan.com/business/finance/types-of-general-insurance-policies-which-will-help-in-your-life
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக