Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

இரவு நேரத்திலும் வெளியான `நீக்கம்’ அறிவிப்பு... திமுக செல்கிறாரா அன்வர் ராஜா?!

1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியதில் இருந்து அக்கட்சியில அங்கம் வகித்து வந்தவர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் தன்மை கொண்டவர். அ.தி.மு.க என்று பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததோ அன்று முதலே கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருந்தார் அன்வர் ராஜா. ஆலோசனைக் கூட்டம் நடக்கும்போதெல்லாம் தனது வருத்தத்தை பகிரங்கமாகப் பதிவு செய்யவும் அன்வர் ராஜா தவறியதில்லை. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், "யாராவது பேச விரும்பினால் பேசலாம்" என்று கட்சியின் இணை ஒருஙகிணைப்பாளர் எடப்பாடி சொல்லி முடிப்பதற்கு முன்பே எழுந்தார் அன்வர் ராஜா.

சி.வி.சண்முகம்

அன்வர் ராஜா எழுந்ததுமே சடாரென எழுந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அன்வர் ராஜாவை ஒருமையில் பேசியதாக தகவல்கள் வெளியானது. அங்கு ஏற்பட்ட அவமானத்தால் தலை குனிந்த அன்வர் ராஜா, ஊடகங்களில் ஒருஙகிணைப்பாளர்களை திட்டித்தீர்த்தார். இந்தச் சூழலில் டிசம்பர் ஒன்றாம் தேதி(இன்று) அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளது.

Also Read: உள்ளே பன்னீர் , செங்கோட்டையன்... வெளியே பாஜக! - மிரட்டப்படுகிறாரா இபிஎஸ்? | Elangovan Explains

செயற்குழுக் கூட்டத்திலும் வேண்டாததைப் பேசிவிடுவாரோ என்று எண்ணிய அ.தி.மு.க தலைமை திடீரென நவம்பர் 30(நேற்று) இரவு 11 மணியளவில் அன்வர் ராஜாவை கட்சியை விட்டு நீக்கியுள்ளது.

அ.தி.மு.க கூட்டத்தில் சலசலப்பு!

இதுகுறித்து அ.தி.மு.க தரப்பில் பேசியபோது, "என்னதான் கட்சித் தலைமை மீது கோபம் இருந்தாலும் மீடியாக்களில் பகிரங்கமாக ஒருஙகிணைப்பாளர்களை விமர்சித்துப் பேசுவது தவறுதான். தெரியாமல் ஒன்றும் அன்வர் ராஜா பேசவில்லை, தெரிந்தேதான் பேசி வருகிறார். தி.மு.க-வில் இணைவதற்கு பேசிக்கொண்டு இருந்த அன்வர் ராஜா, கட்சியே தன்னை நீக்கட்டும் என்று காத்திருந்தார். சமீபத்தில் தி.மு.க சென்ற சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஜெ.எம்.பஷீர் கூட அன்வர் ராஜாவிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார். இப்போது நீக்கப்பட்டதால் இன்னும் ஓரிரு நாட்களில், 'அ.தி.மு.க-வில் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை, பாதுகாப்பில்லை' என்ற வழக்கமான குற்றச்சாட்டைக் கூறிவிட்டு தி.மு.க செல்வார் அன்வர் ராஜா" என்றனர்.

எடப்பாடி... பன்னீர்!

இது குறித்து அன்வர் ராஜா தரப்பில் பேசியபோது, "பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தபோதும் கட்சிக் கட்டுப்பாடு, எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா மீதான விசுவாசம் காரணமாக, இஸ்லாமிய சமூகம் அன்வரை ஓரம்கட்டியபோதும் தொடர்ந்து கட்சியில் பணியாற்றி வந்தார். சமீபகாலமாக கட்சித் தலைமையின் செயல்பாடு சரியில்லை என்பதைத்தான் அன்வர் ராஜா கூட்டத்தில் பேசினார். ஒருமையில் பேசி அடிக்கப்பாய்ந்த சி.வி.சண்முகத்தை நீக்காத ஒருங்கிணைப்பாளர்கள், அன்வர் ராஜாவை நீக்கியது வேதனையளிக்கிறது. அடுத்தக்கட்ட நடவைக்கை குறித்து அன்வர் ராஜா தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி அறிவிப்பார்" என்றனர்.



source https://www.vikatan.com/news/politics/is-anwar-raja-joining-dmk-after-expelled-from-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக