Ad

வெள்ளி, 26 நவம்பர், 2021

யானைகளை காவு வாங்கும் பாலக்காடு - கோவை ரயில் பாதை... 3 யானைகள் இறந்தது எப்படி?

கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது அந்த ரயில். சுமார் 2,500 பயணிகளுடன் அந்த ரயில் கோவை புறநகர் பகுதியை கடக்கும் போது, அந்தத் துயரமான சம்பவம் நடந்தது. இரண்டு குட்டிகளுடன் சென்ற பெண் யானை, தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் வேகத்தில் வந்த ரயில், மூன்று யானைகள் மீது மோதியது. மூன்று யானைகளும் துடிதுடித்து இறந்து போனது.

சரியாக கேரள மாநில எல்லையான வாளையார் பகுதியை கடந்து, கோவை நவக்கரை அடுத்த மாவுத்தம்பதி கிராமத்தின் மரப்பாலம் தோட்டம் அருகே தான் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த மூன்றுமே பெண் யானைகள்.

விபத்தில் பலியான யானை

ரயில் மோதியதில் பெரிய யானை, அப்படியே தண்டவாளத்தில் சில தூரம் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளது. குட்டி யானைகள் அருகில் இருந்த பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தன. சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், யானையின் உடல்களை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பாதையில் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்திலும் அங்கு ஏராளமான மக்கள் கூடினர். யானைகளின் உடல்களுக்கு கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். யானைகளுக்கு பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

விபத்தை ஏற்படுத்திய ரயில் ஓட்டுநர்கள் சுபயர் மற்றும் அகில் இருவரிடம் வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த ரயில் இன்ஜினையும் பறிமுதல் செய்துள்ளனர். மாற்று இன்ஜின் மூலம் வேறு ஓட்டுநர்கள. வரவழைக்கப்பட்டு ரயில் மீண்டும் சென்னை புறப்பட்டது. பாலக்காடு - கோவை ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதியாகும். முக்கியமாக, யானைகள் அதிகம் நடமாடும் பகுதி. அங்கு ஏ மற்றும் பி என்று இரண்டு வழித்தடங்கள் உள்ளன. ஏ டிராக்கில்தான் விபத்து நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வனப்பகுதியில் பயணிப்பதால், அங்கு செல்லும்போது வேகக் கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், அதை ரயில்வே துறை பின்பற்றுவதில்லை. வனப்பகுதி என்பதால், வனத்துறையும் கண்காணிப்பு கோபுரம் அமைத்து யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். அவர்களும் அந்தப் பணியை முறையாக செய்வதில்லை. நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை எழுந்தம், அங்கு முழுமையாக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படவில்லை. இரண்டு துறை அலட்சியத்தின் விளைவால், அந்த ரயில் பாதை தொடர்ந்து யானைகளை காவு வாங்கும் இடமாக மாறிவிட்டது.

விபத்தில் பலியான யானை

இதே பாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3 யானைகள் ஒரே நேரத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன. கடந்த 1978-ம் ஆண்டு முதல், இந்தப் பாதையில் இதுவரை 28 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சம்பவம் வனப்பகுதிக்கு வெளியே பட்டா பூதி அருகே நடந்துள்ளது. வனத்துறையை சேர்ந்தவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். ரயில் ஓட்டுநர்களிடம் விசாரித்து வருகிறோம். வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இனி இப்படி ஓர் சம்பவம் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்போம்." என்று கூறியுள்ளனர்.

அரசுத்துறைகள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.



source https://www.vikatan.com/news/tamilnadu/train-hit-3-elephant-killed-in-track-near-tamilnadu-kerala-border

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக