பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்தரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்து அருளினார் என்கிறது புராணம்.
‘உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். எனவேதான் இந்தத் தலம் திருஉத்திரகோச மங்கை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் இறைவன் அருள்மிகு மங்களநாதர் என்ற திருப் பெயர் கொண்டு அருள்கிறார். அம்பிகை மங்களநாயகி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். ராவணனுக்கும் மண்டோதரிக்கும் மங்கள வாழ்வு அருளியதால், இறைவன் மங்களநாதர் என்று திருப்பெயர் கொண்டதாகத் தலவரலாறு தெரிவிக்கிறது.
முற்காலத்தில், ஆயிரம் முனிவர்கள் தவமியற்ற விரும்பி இந்தத் தலத்துக்கு வந்தனர். அவர்களுக்கு தரிசனம் தந்ததுடன், ஆகமங்களையும் உபதேசித்தார் மங்கள நாதர்.
இந்தத் தலத்தில் சந்நிதி கொண்டிருக்கும் நடராஜர் ஆதி சிதம்பரேசன் என்று போற்றப்படுகிறார். சுமார் ஆறு அடி உயரமுள்ள நடராஜர் மரகதக் கல்லினால் வடிக்கப்பட்டவர். நடராஜரின் மரகதத் திருமேனி மெல்லிய அதிர்வைக்கூடத் தாங்காது என்பதால், அவர் சந்நிதியில் மேள வாத்தியங்கள் இசைப்பதில்லை. மேலும் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடனேயே காட்சி தருவார். ஆருத்ரா அன்று மட்டும்தான் அவருடைய திருமேனி அழகை நாம் தரிசிக்க முடியும். அன்று மட்டும்தான் சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அன்றிரவே மறுபடியும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டுவிடும். முதலில் களையப்பட்ட சந்தனத்தை பக்தர்கள் பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்த ஆலயத்தில் சில நாள்களுக்கு முன்பாகப் பெய்த மழை காரணமாகக் கோயிலுக்கும் மழை நீர் புகுந்தது. இன்னும் அந்த மழை நீர் வடியாத நிலையில் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிவருகிறார்கள். ஆலயத்துக்குள் பல இடங்களில் நீர் தேங்கி நிற்பதோடு பல பகுதிகள் சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் நடக்கும்போது வழுக்கிக் கீழே விழும் சூழலும் நிலவுகிறது. கோயிலும் மிக மோசமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்துக் கோயில் நிர்வாகத்திடம் பேசியபோது
"பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன். இதற்கிடையே மழை காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து விடுகிறது. இதனை எங்களால் முடிந்தவரை மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தித் . இனிவரும் காலங்களில் இச் சிரமங்கள் ஏற்படாதவாறு சரிசெய்யப்படும்” என்று கூறினர்.
எப்படியோ, தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆனந்தமாக ஆலயத்தை வலம்வர ஏதுவாக விரைவில் திருக்கோயில் சரி செய்யப்பட்டால் போதும் என்கிறார்கள் பக்தர்கள்.
source https://www.vikatan.com/spiritual/temples/rain-water-logged-uththrakosamangai-temple-devotees-finds-it-hard-to-do-darshan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக