Ad

திங்கள், 29 நவம்பர், 2021

பதவி விலகும் ட்விட்டர் சிஇஓ ஜாக்... பொறுப்பேற்கும் இந்திய வம்சாவளி பராக் அக்ரவால் யார்?

பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) இந்திய வம்சாவளியான பாரக் அக்ரவால் இனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டார்சி நேற்று பதவி விலகினார். ட்விட்டரிலிருந்து வெளியேற ஜாக் டார்ஸி தயாராகி வருவதாகக் கடந்த ஆண்டே செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது.

Jack Dorsey | ஜாக் டார்சி

சமீபகாலமாக ட்விட்டர் அதன் நடவடிக்கைகளால் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கருத்துகளுக்காக ட்விட்டரில் இருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை முழுவதுமாக ஆதரித்தவர் டார்ஸி. தேர்தலில் முறைகேடு நடந்திருக்கிறது என ஜனவரி மாதம் அமெரிக்காவின் பாராளுமன்ற வளாகமான கேபிடல் கட்டடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் ட்ரம்ப் ஆதரவாளர்கள். இந்த வன்முறைக்கு தீ மூட்டியது ட்ரம்பின் ட்வீட்கள்தான். பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தருவதாகவும், வன்முறையைத் தூண்டுவதாகவும் ட்ரம்ப்பின் ட்வீட்கள் இருக்கின்றன என ட்ரம்ப்பை நிரந்தரமாகத் தடைசெய்தது ட்விட்டர். இது அப்போது பெரிய சர்ச்சையாக வெடித்தது. ட்விட்டரின் துணிச்சலான நடவடிக்கையைப் பார்த்து மற்ற சமூக வலைதளங்களும் ட்ரம்ப்பிற்கு தடைவிதித்தது.

Also Read: காங்கிரஸ் டூல்கிட் முதல் ஜம்மு காஷ்மீர் இல்லா இந்திய வரைபடம் வரை! - தொடரும் ட்விட்டர் சர்ச்சைகள்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தை ட்விட்டர் கையாண்ட விதம் இந்திய அரசைக் கடுப்பேற்றியது. சமூக வலைதளங்களுக்கென புதிய டிஜிட்டல் சட்டங்களைப் பின்பற்றுவதில் ட்விட்டர் காட்டிய தாமதமும் சர்ச்சையானது. கருத்துச் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ட்விட்டர் தொடர்ந்து அரசு ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவருகிறது. இப்படியான நெருக்கடியான சூழலில்தான் ஜாக் டார்ஸி விடைபெற்றிருக்கிறார். இணை நிறுவனர்களில் ஒருவரான ஜாக், அடுத்த தலைமுறையிடம் ட்விட்டரை கொடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என உணர்ந்து இதைச் செய்திருக்கிறார்.

Parag Agrawal | பராக் அக்ரவால்

சரி, ஜாக் டார்ஸி எனும் ஆளுமை விட்டு செல்லும் வெற்றிடத்தை நிரப்பப்போகும் இந்த பராக் அக்ரவால் யார்? வெறும் 38 வயதேயான பராக் ஐஐடி பாம்பேவின் முன்னாள் மாணவர். இங்கு இளங்கலை பட்டத்தைப் பெற்ற அவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பி‌எச்டி முடித்தார். ஸ்டான்போர்டில் படிக்கும்போதே மைக்ரோசாஃப்ட், யாகூ மற்றும் ஏடி&டி லேப்ஸ் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். அதன்பிறகு 2011-ல் ட்விட்டரில் சாதாரண மென்பொறியாளராக இணைந்தார் பராக். அதன்பின் தனது திறனாலும் புதிய யுக்திகளாலும் ட்விட்டரில் பல முன்னெடுப்புகளை எடுத்து வெற்றிகண்டார் பராக். டிசம்பர் 2016-ல் நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஆடம் மெசிங்கரின் CTO பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பத்திலிருந்த ட்விட்டருக்கு விடையாகக் கிடைத்தார் பராக். 2018-ல் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) சட்டென உயர்ந்தார். அந்த பொறுப்பில் இதுவரை சிறப்பாகச் செயல்பட்டும் வருகிறார். இப்போது ஜாக் டார்ஸிக்கு பிறகு ட்விட்டரை வழிநடத்தப்போவதும் அவர்தான். இதுகுறித்து பராக் அக்ரவால் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது;

"உலகம் இப்போது நம்மை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது. முன்பைவிட அதிக எதிர்பார்ப்புகளுடன் நம்மைப் பார்க்கிறார்கள். இன்று மக்க்ள் செய்திகள் குறித்து பலவிதமான பார்வைகளையும், கருத்துக்களையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ட்விட்டரின் செயல்பாடு மற்றும் எதிர்காலம் குறித்து அக்கறை காட்டுவதால்தான் இங்கு நாம் செய்யும் பணி மிக முக்கியமானதாகிறது. ட்விட்டரில் முழு திறனையும் உலகிற்கும் காண்பிப்போம்!"

Twitter

"சமீபகாலத்தில் ட்விட்டர் நிறுவனத்தையும் அதன் தேவைகளையும் சரியான திசையில் செலுத்திய ஒவ்வொரு முக்கியமான முடிவிற்குப் பின்னாலும் பராக் இருந்துள்ளார். ஆர்வம், பகுத்தறிவு, படைப்பாற்றல், சுய விழிப்புணர்வு மற்றும் பணிவுமிக்க பராக் முழு அர்ப்பணிப்புடன் ட்விட்டரின் தொழில்நுட்பப் பிரிவை வழிநடத்தினார். தலைமை செயல் அதிகாரியாகவும் அதையே செய்வார் என அவர் மீது எனக்கு மிகுதியான நம்பிக்கை இருக்கிறது" என்று ஜாக் டார்ஸி தனது கடிதத்தில் பராக் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் சவாலான சூழலில் பொறுப்பேற்றிருக்கிறார் பராக் அகர்வால். ட்விட்டரை இவர் எந்தப் பாதையில் அழைத்து செல்கிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!
- அறிவுச்செல்வன்.சே, மாணவப் பத்திரிகையாளர்


source https://www.vikatan.com/technology/tech-news/twitter-ceo-jack-dorsey-resigns-indian-american-parag-agrawal-will-take-the-helm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக