Ad

வெள்ளி, 26 நவம்பர், 2021

வரதட்சணைக் கொடுமை: புகார் அளிக்க சென்ற மாணவியை கிண்டல் செய்த கேரள போலீஸ்; துயரத்தில் விபரீத முடிவு!

கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்தவர் மொஃபியா பர்வின் (21). இவர் தொடுபுழாவில் உள்ள அல் அஸ்கர் சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். இவருக்கும் முஹம்மது சுபைல் என்பவருக்கும் முகநூல் வழியாகக் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு மொஃபியாவுக்கும் முஹம்மது சுபைலுக்கும் வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது முஹம்மது சுபைல் வீட்டினர் வரதட்சணை வேண்டாம் எனக் கூறியுள்ளனர். பின்னர் 40 லட்சம் ரூபாய் வேண்டும் எனக் கேட்டு மொஃபியாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரின் பெற்றோர் மொஃபியாவை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளதாக அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

மொஃபியா தற்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள்

Also Read: `வரதட்சணை பெறமாட்டோம்' உறுதிமொழி; மீறினால் பட்டதாரி சான்றிதழ் ரத்து! - கேரள பல்கலைக்கழகங்கள் அதிரடி

ஆனால், கணவர் வீட்டினர் மொஃபியாவை மனநோயாளியாகச் சித்திரிக்க முயன்றுள்ளனர். இதற்கிடையே போலீஸில் அளித்த புகாரை அடுத்து வாக்குமூலம் கொடுப்பதற்காக கடந்த திங்கள்கிழமை ஆலுவா காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார் மொஃபியா. அங்கு ஆலுவா இன்ஸ்பெக்டர் சுதீர் என்பவர் மொஃபியாவை கிண்டல் செய்து பரிகசித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மனம் உடைந்த மொஃபியா வீட்டுக்குச் சென்றவுடன் கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 22) தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

மொஃபியாவின் தற்கொலைக்குக் கணவர் வீட்டினரின் வரதட்சணை கொடுமையும், போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிகாசமுமே காரணம் என அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். தனது மரணத்துக்கு கணவர் வீட்டாரும், போலீஸ் அதிகாரியும்தான் காரணம் என மொஃபியா கடிதத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஜஸ்டிஸ் ஆன்டனி டொமினிக் உத்தரவிட்டிருந்தார். மேலும் நான்கு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த வழக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

கணவர் முஹம்மது சுபைலுடன் மொஃபியா

இந்த நிலையில் மொஃபியா தற்கொலை வழக்கில் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மொஃபியாவின் கணவர் முஹம்மது சுபைல் (27), இவரின் தாய் ரூகியா (55), தந்தை யூஸப் (63) ஆகியோர் கைதுசெய்யப்பட்டு காக்கநாடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். ஆலுவா டி.எஸ்.பி சிவன்குட்டி தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மொஃபியா பர்வின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியான காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. மேலும் சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Also Read: `நகைகளை உன் பெற்றோரிடமே கொடுத்துவிடு!' - கேரள மணமக்களின் வரதட்சணை மறுப்பு திருமணம்

மொஃபியாவின் கணவர் குடும்பத்தினர் மட்டுமல்ல, போலீஸ் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் வரதட்சணைக் கொடுமையால் உயிர்விட்ட உத்ரா, விஸ்மயா போன்றோர் வரிசையில் மொஃபியா பர்வின் வழக்கும் சேர்ந்துள்ளது. கல்வி அறிவு மிகுந்த கேரளத்தில் வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் உயிர் பறிக்கப்படுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/kerala-law-student-dies-of-suicide-because-of-dowry-torture-and-police-negligence

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக