Ad

புதன், 4 நவம்பர், 2020

விருதுநகர்: சோள வயல்களைக் குறிவைக்கும் வெட்டுக்கிளிகள்... ஆய்வில் இறங்கிய வேளாண் துறை!

விருதுநகர் மாவட்டம், பெரிய மருளூத்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், சோளப் பயிர்கள் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. வெள்ளை, சிவப்புச் சோளம் என இரு ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாள்களாக, வெட்டுக்கிளிகள் கூட்டம் சோளப்பயிர்களைக் குறிவைத்து தாக்கி அழித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வெட்டுக்கிளியைக் காட்டும் விவசாயி.

இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ``வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் ஏற்பட்ட சேதமும், விவசாயிகள் பட்ட பாடும் எங்கள் கண்முன்னால் வந்து செல்கிறது. சோளப்பயிர்களைத் தாக்கும் இந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தால், எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. கடன் வாங்கி பயிர் செய்ததை இந்த வெட்டுக்கிளிகள் அழித்துக்கொண்டிருக்கின்றன. என்னதான் மருந்து அடித்தாலும் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசாங்கம்தான் உடனே இந்த வெட்டுக்கிளியை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் உத்தண்டராமன் கூறும்போது, ``இது பாலைவன வெட்டுக்கிளி இல்லை. இயல்பாக வயல்வெளிகளில் இருக்கக்கூடிய வெட்டுக்கிளிகள்தான். அதனால், விவசாயிகளும் மக்களும் அச்சப்படத்தேவையில்லை. இருந்தபோதும், அருப்புக்கோட்டையிலிருந்து வந்திருக்கும் விஞ்ஞானிகள் குழு இது தொடர்பாக ஆய்வில் இறங்கியுள்ளனர். வெட்டுக்கிளியின் டி.என்.ஏ-வை வைத்து நடக்கும் ஆய்வின் முடிவில், இதை எப்படி கட்டுப்படுத்தலாம் என்ற தீர்வு நமக்கு கிடைக்கும். விரைவில், வெட்டுக்கிளிகள் கூட்டம் கட்டுப்படுத்தப்படும்” என்றனர்.

வெட்டுக்கிளி தாக்குதலுக்கு உள்ளான சோளப்பயிர்கள்.

வெட்டுக்கிளிக் கூட்டத்தின் தாக்குதலால், நூற்றுக்கணக்கான ஏக்கர் சோளப்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை வைக்கின்றன. இயற்கை பூச்சி விரட்டி மூலம், வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற சோதனையிலும் விவசாயிகள் சிலர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/agriculture/swarm-of-grasshoppers-attacks-maize-fields-in-virudhunagar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக