Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

கடலூர்: `வழக்குப் போடாமலிருக்க 10 பவுன் செயின்!’ - சாத்தான்குளம் பாணியில் மீண்டும் சிறை மரணம்

சாத்தான்குளம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் சுவடுகள் மறைவதற்குள் தற்போது கடலூர் மாவட்டத்திலும் அதேபோன்று நிகழ்ந்திருக்கும் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு அருகே உள்ள வடக்குத்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 28-ம் தேதி திருட்டு வழக்குக்கான விசாரணை என்று செல்வமுருகனை அழைத்துச் சென்ற நெய்வேலி போலீஸார், அவரைக் கைது செய்து விருத்தாச்சலம் சிறையில் அடைத்தனர்.

சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்

அதையடுத்து கடந்த 2-ந் தேதி செல்வமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் சிறைக் காவலர்கள். அங்கு சிகிச்சை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மீண்டும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதையடுத்து செல்வமுருகன் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக அவர்கள் குடும்பத்தினருக்குத் தகவல் அளித்திருக்கின்றனர் சிறைக்காவலர்கள்.

தொடர்ந்து, ``எனது கணவரைக் காணவில்லை என்று புகார் அளிக்கச் சென்ற என்னை லாட்ஜுக்கு அழைத்த நெய்வேலி நகர காவல்நிலைய போலீஸார், என் கணவர் மீது வழக்கு போடாமலிருக்க 10 பவுன் செயினும், பணமும் கேட்டார்கள். நான் தரவில்லை என்றால் என் கணவரை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டினார்கள். 30-ம் தேதி என்னை அழைத்ததன்பேரில், காவல் நிலையத்துக்குச் சென்றேன். அப்போது என் கணவரை வெளியே அழைத்துவந்தனர்.

உயிரிழந்த செல்வமுருகன்

என்னையும், குழந்தைகளையும் பார்த்துக் கதறிய என் கணவர், திருட்டு வழக்கை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று போலீஸார் கடுமையாக அடித்ததாக அழுதார். அப்போது என்னிடம் சில வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிய போலீஸார், ரூ.5,000 பணமும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். அதையடுத்துதான் என் கணவர் இறந்துவிட்டதாகth தகவல் சொன்னார்கள். நெய்வேலி நகர காவல் நிலைய போலீஸார் அடித்து, சித்ரவதை செய்ததால்தான் என் கணவர் உயிரிழந்தார்” என்று கடலூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்திருக்கிறார் செல்வமுருகனின் மனைவி பிரேமா.

தொடர்ந்து உயிரிழந்த செல்வமுருகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அதில் தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். `ஆணவப் படுகொலை செய்யப்பட்ட செல்வமுருகனின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி தருவதுடன், அதில் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வலியுறுத்தியிருக்கிறார். அதேபோல், ``செல்வமுருகனின் உடலை வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ய வேண்டும். நெய்வேலி நகர காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்ய வேண்டும்” என்று ம.தி.மு.க தலைவர் வைகோ அறிக்கை விட்டிருக்கிறார்.

சாலை மறியல்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்,``பொய் வழக்கு ஒன்றுக்காக செல்வமுருகனை அழைத்துச் சென்ற நெய்வேலி நகர காவல்துறையினர், அவர் மீது வழக்குப் போடாமலிருக்க அவரது மனைவியிடம் நகையும் பணமும் கேட்டிருக்கிறார்கள். அவர்களால் தரமுடியாத நிலையில் செல்வமுருகனை அடித்துச் சித்ரவதை செய்து ஆணவப் படுகொலை செய்திருக்கிறார்கள்.

தற்போது இந்த விவகாரம் ஆதாரபூர்வமாக தெரிந்துவிட்ட நிலையில், அதனை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது கடலூர் மாவட்ட காவல்துறை. செல்வமுருகன் உறவினர்களின் அனுமதியைப் பெறாமலேயே அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ததுடன், உடலை வாங்கிக் கொள்ளும்படி அவரது மனைவியை மிரட்டுகிறது காவல்துறை.

Also Read: சாத்தான்குளம்: வியாபாரிகள் மரணம் முதல் சி.பி.ஐ விசாரணை வரை! - வழக்கு கடந்துவந்த பாதை

அதேபோல 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு உடலைப் பெற்றுக்கொள்ளுங்கள். அப்படி இல்லாவிட்டால் உடலை எரித்துவிடுவோம் என்றும் காவல்துறை மிரட்டுகிறது. சாத்தான்குளம் வழக்கைப் போல இதனை கொலை வழக்காக பதிவு செய்து, அவரது உடலை ஜிப்மர் அல்லது எய்ம்ஸ் மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூராய்வு செய்ய வேண்டும். செல்வமுருகனின் கொலைக்கு நீதி கிடைக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்றார். இந்தநிலையில், செல்வமுருகன் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/lock-up-death-in-cuddalore-district-irks-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக