பாமக-வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், அன்புமணிக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாவும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவேற்காட்டில் கடந்த மே 28-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாமகவின் இளைஞரணித் தலைவர் பொறுப்பு வகித்த வந்த, அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, 25 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியை அலங்கரித்து வந்த ஜி.கே.மணி கட்சியின் கௌரவத் தலைவராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டவர்களை அன்புமணி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து டெல்லி சென்ற அன்புமணி பிரதமர் மோடியைச் சந்தித்து 20 நிமிடங்களுக்கும் அதிகமாக பேசியதாக செய்திகள் வெளியாகின. பிரதமர் மோடியுடனான இந்தச் சந்திப்பு குறித்து, பாமக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
``தமிழ்நாட்டின் நலனுக்காக காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும்படியும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், அதன் ஒரு கட்டமாக அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமரிடம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கோரினார். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; ஆணையத்தில் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்தார். அவற்றை கனிவுடன் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்தார்கள்'' எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அரசியல் ரீதியான உரையாடல்களைத் தாண்டி பல்வேறு விஷயங்கள் இந்த் சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து டெல்லி வட்டாரத்தில் பேசினோம்,
``அன்புமணி ராமதாஸைப் பார்த்ததுமே அவரின் அப்பா மருத்துவர் ராமதாஸ் குறித்துதான் பிரதமர் முதலில் விசாரித்தார். வாய்ப்பிருந்தால் அடுத்தமுறை அவரை டெல்லி அழைத்துவரவும் கேட்டுக்கொண்டார். அதற்கு அன்புமணி மருத்துவர் ராமதாஸின் உடல்நிலையைக் காரணம் காட்டி முயற்சிக்கிறேன் எனச் சொல்லவும் அடுத்தமுறை தமிழகம் வந்தால் நிச்சயமாக உங்கள் தந்தையைச் சந்திக்கிறேன், உங்கள் தந்தையைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என பிரதமர் சொன்னதும் நெகிழ்ந்து போய்விட்டார் அன்புமணி. நீங்கள் முன்பே தலைவராகியிருக்கலாம் என்று சொன்னதோடு அன்புமணிக்கு சில அறிவுரைகளையும் பிரதமர் மோடி வழங்கினார்.
ஏற்கெனவே மத்திய அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறீர்கள், எம்.பியாக இருக்கிறீர்கள், தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் இளம் தலைவர்களில் நல்ல எதிர்காலம் உங்களுக்கு இருக்கிறது. வளர்ச்சியை நோக்கிய பிரசாரத்தைத் தீவிரமாக முன்னெடுங்கள். அடுத்தமுறை முடிந்தால் அமைச்சரவையிலும் எங்களோடு இணைந்து பணியாற்றுங்கள். அது உங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரைக் கொடுக்கும் எனச் சொன்னதோடு, எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு எனவும் சொல்லியிருக்கிறார். அன்புமணியும் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக நன்றி சொல்லியிருக்கிறார்'' என்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/what-was-anbumani-talking-about-during-the-meeting-with-prime-minister-modi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக