Ad

சனி, 11 ஜூன், 2022

ராமநாதபுரம்: ஆணையர் மீது புகார்; ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்த நகராட்சி ஊழியர்கள் - நடந்தது என்ன?

ராமநாதபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் சந்திரா. இவர் சக அலுவலக ஊழியர்களை அவமரியாதையாக நடத்தி வருவதாக தொடர்ந்து அலுவலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மற்றும் வருவாய் பிரிவு, சுகாதார பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவில் பணிபுரியும் அலுவலர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஊழியர்கள் ஆணையரை கண்டித்து அலுவலகத்திற்குள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஆணையர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் உடல்நிலை சரியில்லை என கூறி வீட்டுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 27 அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக அலுவலக மேலாளர் நாகநாதனிடம், விடுப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, ஆணையர் மன்னிப்பு கேட்கும் வரை பணிக்கு வர மாட்டோம் என தெரிவித்து விட்டு வீட்டிற்கு சென்றனர்.

ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட அலுவலகம்

நகராட்சி அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களும் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து சென்றதால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் சிலர் குறைகளை தெரிவிக்க நகராட்சி அலுவலகத்திற்கு வந்து, அலுவலர்கள் இல்லாததால் குறைகளை தெரிவிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். இவர்கள் பிரச்னைக்கு சாதாரண மக்கள் நாம்தான் பாதிக்கப்படுகிறோம் என புலம்பியபடி திரும்பிச் சென்றனர் பொது மக்கள்.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் சந்திராவிடம் பேசியபோது, ``நகராட்சியின் சார்பில் நகரில் மாஸ் கிளீனிங் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர பாதாள சாக்கடை பணி, தூய்மைப்பணி, வரிவசூல் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் குறித்து உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி பணிகளை மேற்கொள்ளும்படி கூறுகிறேன்.

இதற்கும் ஊழியர்கள் ஒத்துழைப்பதில்லை. பணிகளை செய்ய மறுத்து இவ்வாறு ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து சென்றுள்ளனர். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் விடுப்பு எடுத்து வந்துள்ள நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் மொத்தமாக விடுப்பு எடுத்துச் சென்றது குறித்து மதுரை மண்டல இயக்குநருக்கு புகார் தெரிவிக்க உள்ளேன்” என கூறினார்.

ஆணையர் அலுவலக அறை

நகராட்சி அலுவலர்கள் சிலரிடம் பேசினோம், ``உள்ளாட்சி பிரதிநிதிகள் சில ஆண்டுகளாக இல்லாததால், ஆணையர் சந்திரா, தான்தான் இங்கே எல்லாம் என்ற அதிகாரத் தோரணையில் இருந்து வந்தார். அப்போது அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை மிகவும் தரக்குறைவாக பேசுவது, கூடுதல் நேரம் வேலை வாங்குவது என அவர் மீது எங்கள் அனைவருக்கும் கடும் அதிருப்தி ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்ற பிறகு தன்னால் முன்புபோல் அதிகாரம் செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் ஊழியர்களை சகட்டுமேனிக்கு காரணம் இன்றி திட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவரை கண்டித்து பலமுறை அலுவலகத்திற்குள் போராடி உள்ளோம். ஆனால் அவை வெளியே தெரியாமல் இருந்தது. நேற்று எல்லைமீறி ஒருமையில் திட்டியதால் அனைவரும் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து மதுரை மண்டல இயக்குநரை நேரில் சந்தித்து ஆணையர் சந்திரா மீது புகார் தெரிவித்துள்ளோம்” என கூறினர்.

இதனிடையே, நகராட்சி அலுவலகத்தில் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து சென்று, மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய ஆணையர் மற்றும் அலுவலக ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/officials-protest-condemning-the-municipal-commissioner

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக