கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவில் 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் பா.ஜ.க வேட்பாளர்களான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநில முன்னாள் அமைச்சர் அனில் பாண்டே மற்றும் தனஞ்சய் மகாதிக் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிவசேனாவின் சஞ்சய் ராவத், என்.சி.பி-யின் பிரபுல் படேல், காங்கிரஸின் இம்ரான் பிரதாப்காரி ஆகியோரும் வெற்றி பெற்றனர். சிவசேனாவின் இரண்டாவது வேட்பாளர் சஞ்சய் பவார் பா.ஜ.க-வின் தனஞ்சய் மகாதிக்கிடம் தோல்வியடைந்தார்.
மூன்று ராஜ்யசபா இடங்களை பா.ஜ.க வெற்றி பெற்ற நிலையில், என்.சி.பி தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மாநிலங்களவை தேர்தல் முடிவுகளைக் கண்டு நான் அதிர்ச்சியடையவில்லை. என்.சி.பி, சிவசேனா மற்றும் காங்கிரஸின் ஒவ்வொரு வேட்பாளர்களும் அவர்கள் கட்சியின் ஒதுக்கீட்டின்படி வாக்குகளைப் பெற்றனர். ஆனால், வெற்றிபெற்ற எனது வேட்பாளர் பிரபுல் படேல் கூடுதலாக ஒரு வாக்கு பெற்றார். அது எனது கட்சியின் வாக்கு அல்ல. மேலும், அந்த வாக்கு எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியும்.
உண்மையில் பிரபுல் படேல் பெற்ற அந்த வாக்கு பா.ஜ.க ஆதரவு பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ ஒருவரிடமிருந்து வந்தது. அவர் அதைப் பற்றி எனக்குத் தெரிவித்த பிறகு படேலுக்கு வாக்களித்தார். மேலும், அந்த சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் முன்பு என்னுடன் பணியாற்றியவர்" எனக் குறிப்பிட்டார்.
source https://www.vikatan.com/news/politics/sharad-pawar-says-not-shocked-by-rajya-sabha-poll-results-claims-extra-vote
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக