Ad

ஞாயிறு, 12 ஜூன், 2022

புதுச்சேரி அரசின் அனுமதி கிடைக்கவில்லை; இரண்டாவது முறையாக திரும்பிச் சென்ற சொகுசுக் கப்பல்!

சென்னை – விசாகப்பட்டினம் - புதுச்சேரிக்கு இடையேயான தனியார் சொகுசு சுற்றுலா கப்பலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சில நாள்கள் முன்பு தொடங்கி வைத்தார். சென்னையிலிருந்து கிளம்பும் அந்த கப்பல் ஆழ்கடலுக்கு சென்று நங்கூரமிட்டு நிற்கும். அதன்பின்னர் புதுச்சேரிக்கு வந்து உப்பளம் துறைமுகத்தில் பயணிகளை இறக்கி, அவர்கள் நகரை சுற்றிப்பார்த்த பின்பு மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு விசாகப்பட்டினம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரி அரசு

ஆனால் அந்த சொகுசு கப்பலில் கேசினோ எனும் சூதாட்டங்கள் உள்ளதால், அதனை புதுச்சேரிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று ஆளும் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக போர்க்கொடி உயர்த்தியது. அதேபோல துணைநிலை ஆளுநரான தமிழிசையும், ”கலாச்சார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்காது. கப்பலில் சூதாட்டங்கள் ஏதும் இல்லை என்றால் மட்டும்தான் அதனை அனுமதிப்போம். புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்கு அந்த கப்பலுக்கு அனுமதியளிக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

கடந்த 10-ம் தேதி புதுவை கடல் பகுதியில் சொகுசுகப்பல் நிறுத்தப்பட்டது. கடற்கரையிலிருந்து பொதுமக்கள் பிரம்மாண்ட கப்பலை கண்டுகளித்தனர். புதுவை அரசின் அனுமதி இல்லாததால் பயணிகளை இறக்காமல் கப்பல் அப்படியே ஆழ்கடலுக்குள் திரும்பிச்சென்றது. இதனிடையே, ஆழ்கடலுக்குள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பல் நேற்று அதிகாலை மீண்டும் புதுவை கடலோர பகுதிக்கு வந்தது. அதிலிருந்த பயணிகள் கடற்கரை சாலை, காந்தி திடல், மற்றும் புதுச்சேரியின் அழகை ரசித்தனர்.

கடல் பகுதியில் உலா வருவதற்கு மத்திய அரசின் அனுமதி பெற்றுள்ளதால், இந்த சொகுசு கப்பல் புதுவையை ஒட்டிய கடலோர பகுதியில் உலா வந்து சென்றுள்ளது. புதுவை அரசின் அனுமதி கிடைக்காததால் சொகுசு கப்பல் நிறுவனத்தினர், அடுத்த பயணத்தின்போது கடலூரில் கப்பலை நிறுத்துவதற்கும், அங்கிருந்து பயணிகளை பேருந்துகளில் ஏற்றி புதுவைக்கு அழைத்து வந்து சுற்றிக் காட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-government-not-gave-permission-for-cruise-send-back-for-second-time

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக