பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ் சமீபத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், மாவட்ட வாரியாக சென்று, கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், கரூர் வருகை தந்த அவர், தனது பயணத்தின் ஓர் அங்கமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு மேக்கேதாட்டூ அணை திட்ட அறிக்கை சம்பந்தமாக விவாதிக்க உள்ளதாக தெரிகிறது. இது, சட்டத்துக்கு எதிரானது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது. காவிரி நடுவர் நீதிமன்ற அளித்துள்ள தீர்ப்புக்கும், தமிழக மக்களுக்கும் எதிரானது. அதனால், இந்தக் கூட்டம் நடைபெற கூடாது. அப்படி நடைபெற்றாலும், அதில் மேக்கேதாட்டூ திட்டம் சம்மந்தமான விவாதம் மேற்கொள்ளக்கூடாது. இதனை வலியுறுத்தி கடந்த 5 நாள்களுக்கு முன்பு பா.ம.க சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இது சம்பந்தமாக முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த முறையீட்டில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் நடைபெறும் கூட்டத்தில் மேக்கேதாட்டூ அணை திட்டம் சம்பந்தமான நிகழ்ச்சி குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்த வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதால், அவரை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என பா.ம.க வலியுறுத்துகிறது. கர்நாடகாவில் மேக்கேதாட்டூ அணை கட்டப்படுவதற்கு முன்பே 140 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணைகள் கர்நாடகாவில் உள்ளது.
ஆனால், தமிழகத்தில் மேட்டூர் அணை 93 டி.எம்.சி கொள்ளளவு மட்டும் கொண்ட அணையாக உள்ளது. அதிலும், கர்நாடகாவில் இருந்து உபரி நீர் மட்டுமே பருவ மழைக் காலங்களில் கிடைக்கிறது. அதனையும் தற்பொழுது தடுக்கும் வகையில் கர்நாடக சட்டசபையில் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். எதிர்வரும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்காக அங்கு ஆளும், ஆண்ட காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகள் இதனை முன்னெடுத்து வருகின்றன. இதனை பா.ம.க வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு மேக்கேதாட்டூ அணை சம்பந்தமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இது சம்பந்தமாக, நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசி உள்ளேன். அப்போது கடுமையான எதிர்ப்புகள் நாடாளுமன்றத்தில் எழுந்தது. இருந்தாலும் தமிழகத்தின் நலன் கருதி வலியுறுத்தினேன். மேக்கேதாட்டூ அணை திட்டம் வரக்கூடாது. அதனை வரவும் விட மாட்டோம். பா.ம.கவை சேர்ந்த நாங்கள் உயிரைக் கொடுத்தாவது, தமிழக மக்களின் உயிர்நாடி பிரச்னைக்கு குரல் கொடுப்போம்.
பா.ம.க 2.0 செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்துகள் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து 2026-ல் பா.ம.க தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். வியூகம் குறித்து விரிவாக கூற முடியாது. மற்ற அரசியல் கட்சிகள் அதனை பயன்படுத்தக்கூடும். ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியாவில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமே இல்லை" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/anbumani-ramadoss-press-meet-in-karur-regarding-pmk-20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக