அவர்தான் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர். இறையாண்மை, அரசு, தன்னாட்சி என்பதற்கெல்லாம் மக்கள் சார்ந்து புது வரையறை கண்டவர்.ராகுல் காந்தியின் நேற்றைய பேச்சு, பேரறிஞர் அண்ணா நாடாளுமன்ற அவையில் பேசிய பேச்சுக்களின் மீள் பதிவு என்று தோன்றும் அளவிற்கு இருந்தது என்றால் மிகை அல்ல. நாடாளுமன்றத்தில் 16வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் (‘பிரிவினைவாதத் தடுப்பு சட்டம்’ என்று சொல்வார்கள்; அல்லது ‘இந்திய இறையாண்மை பாதுகாப்பு சட்டம்’) மக்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுகிறது. மாநிலங்களவைக்கு வாக்கெடுப்புக்கு வருகிறது. அன்று அண்ணா தனியாளாக அந்தச் சட்டத்தை எதிரத்து வாதிடுகிறார். ஒற்றை ஆள் மட்டுமே எதிர்ப்பு வாக்கு. மீதமுள்ள மொத்த அவையும் ஆதரவு வாக்குகள்.
அரசியலமைப்புத் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது அவர் ஆற்றிய உரையிலும், இந்த உரையிலும் பிரிவினை கேட்கும் எந்த ஒரு பிரிவினருக்கும் உள்ள உரிமையை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். ஆனால் இந்த உரைகளில் மாநிலங்களுக்கு அதிக இறையாண்மையைப் பெறுவதற்கும் வட்டார ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவது பற்றியும் அழுத்தம் தந்திருக்கிறார். தேர்தலில் திமுக போட்டியிட்டு வெற்றிபெறாத வரையில், இந்தி பேசாத மக்களின், குறிப்பாக தென்மாநில மக்களின் உரிமைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற முடியாது என்று அவர் உறுதியாக நம்பினார்.
மேலும் தன்னுடைய உரையில், கூட்டாட்சி அமைப்பை எதிர்பார்த்து நொந்து போனதாக தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை இப்படிப் பதிவு செய்கிறார்.
‘‘இறையாண்மை என்பது அதிகாரம் ஒரே இடத்தில் மட்டும் குவிக்கப்படுவதைக் குறிக்காது. இந்த நாட்டிலும், இந்த நாட்டிற்கு வெளியேயும் பல்வேறு அரசியல் சக்திகளின் தாக்கம் காரணமாக இறையாண்மையின் வரையறையே பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை ‘சுய நிர்ணயம்' என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை வரையறுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். ‘சுய நிர்ணயம்’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டறியும் பணியில் ஒரு குழு உள்ளது என்பதை அறிகிறேன். எனவே, இறையாண்மை அதன் அனைத்து தாக்கங்களிலும் விளக்கப்பட்டுள்ளது என்று நினைக்க வேண்டாம். இத்தகைய சட்டத் தடுப்புகளின் மூலம், நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்த எண்ணத்தையும் எந்தப் பேச்சையும் அல்லது எந்த அதிருப்தியையும் யாரையும் அடக்கிவிடலாம் என்று நினைக்க வேண்டாம்.
இங்கே தேவையோ, அவசரமோ இல்லை. நான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன், இந்த மசோதாவை எதிர்த்ததில் நான் மிகவும் வருந்துகிறேன், நான் மிகவும் மதிக்கும் இந்த சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பல்வேறு உணர்வுகளுக்கு எதிராக நான் செயல்பட்டேன். அவர்கள் ஒவ்வொருவரும் இந்தப் பிரச்னையை கவனமாகவும், கனிவுடனும், சமரச மனப்பான்மையுடனும் சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சரி, சட்டத்தை இயற்றுங்கள். ஆனால் அது உங்கள் ஆவணக்காப்பகத்திலோ அல்லது உங்கள் பாதுகாப்பில் மட்டுமே இருக்கும். கள நிலைமையை எப்படிச் சந்திப்பது என்பது மக்களுக்குத் தெரியும். அதற்குப் பதிலாக, இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும், நாடாளுமன்றக் குழுவை அமைக்குமாறு உள்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு அதிகாரப்பூர்வ குழுவாக கூட இருக்க வேண்டாம். பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற குழுவாக இருக்கட்டும். திரு சப்ருவை அந்த குழுவில் இருக்கச் சொல்லுங்கள்; திரு பூபேஷ் குப்தாவை இருக்கச் சொல்லுங்கள். எனது நண்பர் திரு வாஜ்பாய் அந்தக் குழுவில் இருப்பதை விரும்புகிறேன்.
அவர்கள் எங்கள் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து, பதினைந்து நாட்கள் அங்கேயே தங்கி, அனைத்து மக்களையும் சந்தித்து, அங்குள்ள அரசியல் சிந்தனையின் குறுக்கு மன ஓட்டங்களைப் புரிந்துகொண்டு, பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கட்டும். அத்தகைய குழுவை நான் ஏற்றுக்கொள்கிறேன், அவர்கள் இந்தப் பிரச்னையைப் பற்றி சிந்திக்க போதுமான கருத்து ஆவணங்களை நாங்கள் வழங்குவோம், அவர்கள் அவற்றைப் பார்த்த பிறகு, என்னிடம் வந்து, ‘சரி, இதோ நீங்கள் பிரிந்து செல்லுமாறு கேட்பதும், அதற்கான காரணங்களும் நியாயமற்றவை. நீங்கள் எங்களுடன் இருப்பதையே நாங்கள் மிகவும் விரும்புகிறோம்’ என்று சொல்லட்டுமே.
‘நீ என் சகோதரனாக இல்லாவிட்டால், நான் உன் மண்டையை உடைத்து உன்னை என் சகோதரன் ஆக்குவேன்’ என்று ஒரு ஜெர்மன் பழமொழி உள்ளது. நீங்கள் இணக்கமாக இருக்க விரும்பினால், அமைதியான அரசியல் சூழ்நிலையை விரும்பினால், அரசியல் பிரச்னைகளை அரசியல் தளத்தில் தீர்க்க விரும்பினால் தயவுசெய்து எங்கள் மண்டையை உடைக்க வேண்டாம்’’ என்று தன் பேச்சை நிறைவு செய்திருக்கிறார் அண்ணா.
இந்த வரிகளைப் படித்தவுடன் நேற்று ராகுல் காந்தி பேசிய ‘‘தமிழ்நாட்டு சகோதரனிடம் உரையாடல் செய்யுங்கள். கூட்டாட்சிதான் இந்தியா’’ என்பது எல்லாம் நினைவுக்கு வருகிறதுதானே.
அன்று ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆண்ட இந்திய அரசுக்கு உணர்த்த பேரரறிஞர் அண்ணா பேசியவை, இன்று ‘ஒற்றை இந்தியா’ என்று பேசும் ஆளும் பா.ஜ.க அரசுக்கு உணர்த்த காங்கிரஸ் இளைய தலைமுறை தலைவர் பேசும் பொருள் ஆகி இருக்கிறது உள்ளபடியே வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு.
மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் குறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசுவதோடு மட்டுமல்லாது, மொழி, கல்வி, மருத்துவம், தன்னாட்சி உரிமைகள் கொண்ட தேர்தல் ஆணையம் - நீதிமன்றம் என மாநிலங்களுக்கு முழுமையான தன்னாட்சியை உருவாக்க முயல வேண்டும். அதற்கான விவாதங்களை முன்னெடுப்பது, ஜனநாயகத்தில் தன்னாட்சி கோரும் அனைத்துக் கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நாளாக இது அமைகிறது.
கடந்த 2019 ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீருக்குச் சிறப்பு உரிமை வழங்கும் அரசியலமைப்பு பகுதி 370 நீக்கப்பட்டதாக இருக்கட்டும், கருத்துச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி பயமுறுத்துவதாகட்டும், இந்தியா முழுக்க உரிமைப் போராளிகள் பலரைக் கைது செய்து சிறையில் வைத்திருப்பதாகட்டும், ஒரே இந்தியா - ஒரே மொழி (இந்தி சமஸ்கிருதத் திணிப்பு), ஒரே தேர்வு (NEET), ஒரே வரி (GST), நிதித்துறை ஆதிக்கம் (FFC - Fifteenth Finance Commission, NITI Aayog), ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்விக் கொள்கை (NEP), மாநில சுயாட்சி உரிமைகள் சூறையாடப்படுவது என ஒற்றை இந்தியாவை, இந்து இந்தியாவை மத அடிப்படையில் கட்டமைக்க முயலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக கருத்தியல் ஆதிக்கம் உச்சத்தை அடைந்திருக்கும் இன்றைய நிலையில் இவையெல்லாம் எதிர்க்கப்பட வேண்டியவை.
இந்தியப் பேரரசில் உண்மையான தன்னாட்சி அல்லது விடுதலையை நோக்கி நகர வேண்டிய தேவை, தேசிய இனங்களுக்கான சமூக விடுதலையே உண்மையான விடுதலை என நாம் உணரும் போதும், தற்போதைய ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமது பார்வையை மீளாய்வு செய்ய அண்ணா தேவைப்படுகிறார். அண்ணா நினைவு நாளில் அவரின் அந்த உரையை நினைவு கூறும் வரலாற்று நிகழ்வாகவும் ராகுல் காந்தியின் பேச்சு அமைந்திருக்கிறது.
- சுதாகர் கணேசன்
(அண்ணாவின் பேச்சு, எழுத்துகளை ஆங்கிலத்தில் ANNA 400, HOMELAND, HOME RULE என மூன்று நூல்களாகத் தொகுத்திருக்கிறார்.)
source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-former-chief-minister-cn-annadurai-remembrance-day-article
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக