Ad

திங்கள், 6 டிசம்பர், 2021

பாகிஸ்தான் படுகொலை: `எனது கணவர் அப்பாவி; நீதி வேண்டும்!’ - இலங்கையில் மனைவி கண்ணீர்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இலங்கையைச் சேர்ந்த பிரியாந்த தியவதன குமார(40) பணி நிமித்தமாக கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். 2012-ஆம் ஆண்டிலிருந்து சியால்கோட் மாவட்டத்திலுள்ள ஆடை தொழிற்சாலையில் பொது மேலாளராக பணியாற்றி வந்தாா். கடந்த டிசம்பர்-3 ஆம் தேதி அவரின் தொழிற்சாலையின் வெளியே மத அடிப்படைவாதக் கட்சியான தெஹ்ரீக்-ஏ-லப்பைக் பாகிஸ்தான் கட்சியின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அந்த சுவரொட்டியை பிரியாந்த தியவதன குமாரா கிழித்து குப்பையில் எறிந்ததாகக் கூறப்படுகிறது. குப்பையில் வீசப்பட்ட அந்த சுவரொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் வாசகங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. பிரியாந்த தியவதன குமாரா சுவரொட்டியை கிழித்த தகவல் வெளியே பரவியது. இதையடுத்து ஹ்ரீக்-ஏ-லப்பைக் பாகிஸ்தான் கட்சியினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரின் தொழிற்சாலை எதிரே கூடினர்.

பின்னர், குரான் வாசகங்கள் இருந்த சுவரொட்டியைக் கிழித்து குப்பையில் எறிந்ததன் மூலம் இஸ்லாம் மதத்தை பிரியாந்த குமாரா இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டிய அவா்கள், தொழிற்சாலையிலிருந்து அவரை வெளியே இழுத்து வந்து கட்டையாலும் கல்லாலும் அடித்துக் கொடூரமாக தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். மேலும் வெறித் தீராத அந்த கும்பல், பிரியந்தா தியாவதன குமாரா-வின் உடலை தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் இலங்கை நாட்டவர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் மக்கள், லாகூரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் கொடூர கொலைக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

இதைப் பற்றிக் கருத்து தெரிவித்திருக்கும் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், "சியால்கோட்டில் கொடூரமான முறையில் இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் இந்த நாள் பாகிஸ்தானுக்கு ஒரு அவமானகரமான நாள். நான் விசாரணைகளை மேற்பார்வையிட்டு வருகிறேன். இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்" என்று பதிவு செய்திருக்கிறார்.

குமாரவின் மனைவி நிரோஷி தசநாயக்க, கொல்லப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பாகிஸ்தான் மற்றும் இலங்கைத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ``என் கணவர் ஒரு அப்பாவி மனிதர். இவ்வளவு காலம் வெளிநாட்டில் பணியாற்றிய அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை செய்தி மூலம் தெரிந்து கொண்டேன். இந்த கொலை எவ்வளவு மனிதாபிமானமற்றது என்பதை இணையத்தில் பார்த்தேன். எனது கணவருக்கும் எங்கள் இரு குழந்தைகளுக்கும் நீதி கிடைக்கும் வகையில் நியாயமான விசாரணையை நடத்துமாறு இலங்கை ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்,” என அவர் பிபிசி சிங்களத்திடம் பேசுகையில் கூறினார்.

இதற்கிடையில், இலங்கை செய்தி இணையத்தளமான நியூஸ்வைர், குமாராவின் அஸ்தியை திங்கட்கிழமை சிறப்பு விமானத்தில் லாகூரில் இருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரியாந்த தியவதன குமாரரைக் கொன்று அவரது உடலை எரித்ததற்காக 800 தொழிலாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாந்த குமாரவை சித்திரவதை செய்து வீடியோ பதிவு செய்தவர்கள் உட்பட 118 பேரை சியால்கோட் போலீஸார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் 302, 297, 201, 427, 431, 157, 149 மற்றும் எதிர்ப்புத் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 11WW பிரிவுகளின் கீழ் உகோகி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) Armaghan Maqt இன் விண்ணப்பத்தின் பேரில் ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸின் 800 தொழிலாளர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டது. தொழிற்சாலை கேமராக்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ கிளிப்புகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 118 பேரில் இரண்டு முக்கிய சந்தேக நபர்களான மொஹமட் தல்ஹா மற்றும் ஃபர்ஹான் இத்ரீஸ் ஆகியோர் அடங்குவர், மேலும் அவர்கள் அனைவரும் அடையாளம் தெரியாத இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். சியால்கோட்டில் உள்ள அல்லாமா இக்பால் போதனா மருத்துவமனையில் குமாராவின் உடல் பிரேதப் பரிசோதனை முடிவடைந்தது, அதன்படி தியாவதானாவின் மண்டை ஓட்டிலும் தாடையிலும் ஏற்பட்ட முறிவால் அவருக்கு மரணம் நேரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரல், வயிறு, சிறுநீரகம் மற்றும் அவரின் அனைத்து முக்கிய உறுப்புகளும் தாக்குதலால் செயலிழந்ததாக சொல்லப்ப்படுகிறது. வன்முறைக் கும்பலால் தியாவதானா சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் அவரின் உடல் முழுவதும் உள்ளன. அவரின் முதுகெலும்பு மூன்று இடங்களில் உடைக்கப்பட்டுள்ளது.

மேலும், தீவைக்கப்பட்டதில் அவர் உடல் 99 சதவீதம் எரிந்துள்ளது. ஒரு கால் தவிர அவரது உடலின் அனைத்து எலும்புகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன என்று அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியால்கோட் துணை ஆணையர் தாஹிர் ஃபரூக் கூறுகையில், "குமாராவின் உடல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரெஸ்க்யூ ஆம்புலன்சில் லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பிரதாயங்களை நிறைவேற்றிய பின்னர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படும்.", என்றார்.

பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் புஸ்டாரிடம் இந்த படுகொலைகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எஞ்சியுள்ள சந்தேக நபர்களை விரைவில் கைது செய்யுமாறும், விசாரணை அறிக்கையை விரைவில் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். புஸ்டார், தனிப்பட்ட முறையில் விசாரணையை கண்காணித்து வருவதால், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப மாட்டார்கள் என்று உறுதி அளித்திருக்கிறார்.

பிரதமர் இம்ரான் கான் மற்றும் முதல்வர் புஸ்தார் ஆகியோர் இந்த வழக்கை நேரில் கண்காணித்து வருவதாகவும், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் பஞ்சாப் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) பொது இயக்குநரகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருத்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/pakistan-massacre-my-husband-is-an-innocent-we-need-justice-wife

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக