Ad

புதன், 1 டிசம்பர், 2021

பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத்தை நீக்கிவிட்டு, புதிய குடியரசான `பார்படோஸ்' நாட்டின் கதை என்ன?!

கரீபியன் கடல் பகுதியையொட்டி அமைந்திருக்கும் மேற்கிந்தியத் தீவுகளின் பிராந்திய நாடு பார்படோஸ். இந்த தீவு நாட்டில் மொத்தம் 2.85 லட்சம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இதில் 95 சதவிகிதம் பேர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு சதவிகித வெள்ளை இனத்தவரும், ஒரு சதவிகித இந்தியர்களும் அங்கு வாழ்ந்துவருகின்றனர். இவ்வளவு காலமாக, பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத்தைத் தலைவராகக் கொண்டு செயல்பட்ட பார்படோஸ், நவம்பர் 30-ம் தேதி முதல் புதிய குடியரசு நாடாக மாறியிருக்கிறது.

பார்படோஸ்

Also Read: கினியா நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பும், கிடுகிடுவென உயரும் அலுமினியத்தின் விலையும்..! - என்ன காரணம்?

17-ம் நூற்றாண்டில் கால்பதித்த ஆங்கிலேயர்கள்!

1625-ம் ஆண்டில், இங்கிலாந்திலிருந்து ஆங்கிலேயர்கள் பார்படோஸ் நாட்டுக்கு வந்தடைந்தனர். அப்போது பார்படோஸ் பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கவில்லை. அங்கிருந்த நிலத்தில் புகையிலை, சர்க்கரை, பருத்தி உள்ளிட்டவற்றைப் பயிரிடத் திட்டமிட்டனர். அங்கு அடிமையாக வேலை செய்வதற்காகப் பல லட்சம் ஆப்பிரிக்க மக்களை பார்படோஸுக்கு அழைந்துவந்தனர். சில தசாப்தங்களில், கறுப்பின மக்களின் கடுமையான உழைப்பைப் பயன்படுத்தி பார்படோஸை செழிப்பு மிக்க பகுதியாக மாற்றினர் ஆங்கிலேயர்கள்.

1838-ம் ஆண்டு வரை, பார்படோஸில் அடிமைமுறை இருந்துவந்தது. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அடிமைமுறை ஒழிந்து, 1966-ம் ஆண்டு முழுச் சுதந்திரம் பெற்றது பார்படோஸ். இருந்தாலும், தற்போது வரை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தைத் தலைவராகக் கொண்டுதான் பார்படோஸ் செயல்பட்டுவந்தது. ராணி எலிசபெத்தின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் சாண்ட்ரா மசோன் (Sandra Mason) இருந்துவந்தார்.

2000-க்குப் பின்னர்..!

1838-க்குப் பின்னர், சுமார் 160 ஆண்டுகளாக இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்துவந்தது பார்படோஸ். 2000-ம் ஆண்டுக்குப் பிறகுதான், இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் தொடங்கியது. 2005-ம் ஆண்டு, லண்டனைச் சேர்ந்த பார்படோஸ், அரசின் தலைமை ஆலோசனைக் குழுவைக் கலைத்துவிட்டு, ட்ரினிடாடைச் சேர்ந்த குழுவைத் தலைமை ஆலோசனைக் குழுவாக அமைத்துக் கொண்டது பார்படோஸ். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகத் தனி குடியரசு நாடாக மாறுவது குறித்த நடவடிக்கைகளை அந்த நாட்டுத் தலைவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இளவரசர் சார்லஸ், சாண்ட்ரா மசோன

புதிய குடியரசு!

பார்படோஸ் நாட்டின் பிரதமர் மியா மொட்டெலி, ``எங்கள் காலனி ஆதிக்க வரலாற்றை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது'' என்று கடந்த ஆண்டே பேசியிருந்தார். தொடர்ச்சியாகப் பல்வேறு தலைவர்களும் இதுதொடர்பாகப் பேசி வந்தனர். அதன் விளைவாக, `தேர்தல் நடத்தி நாட்டின் அதிபர் தேர்வு செய்யப்படுவார். அவரே நாட்டின் ஒட்டுமொத்த தலைவராகச் செயல்படுவார்' என்கிற தீர்மானத்தைக் கொண்டுவந்தது பார்படோஸ். அதன்படி சமீபத்தில், அங்குத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சாண்ட்ரா மசோன்.

இதன்மூலம், உலகின் சமீபத்திய குடியரசு நாடாக மாறியிருக்கிறது பார்படோஸ். 30 ஆண்டுகளுக்கு முன்னர், 1992-ம் ஆண்டு, இங்கிலாந்து ராணியைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய குடியரசு நாடாக உருவானது மொரிஷியஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் கனடா, ஆஸ்திரேலியா, ஜமைக்கா உள்ளிட்ட 15 நாடுகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை தங்களது நாட்டின் தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

அடிமைத்தனம் கொடூரமானது!

நவம்பர் 30-ம் தேதியன்று, பார்படோஸின் பிரிட்ஜ் டவுனில் நடந்த நிகழ்ச்சியில், பார்படோஸ் புதிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ``அடிமைத்தனம் மிகக் கொடூரமானது. அது நம் வரலாற்றை என்றென்றும் கறைப்படுத்திக் கொண்டேயிருக்கும். இந்தத் தீவின் மக்கள் தங்களது பாதையை அசாதாரண தைரியத்தின் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள்'' என்று வாழ்த்திப் பேசினார்.

ரிஹானா

Also Read: ரிஹானா பற்றவைத்த தீ; கிரிக்கெட்டர்களுக்கு டாப்ஸியின் பதிலடி; பிசிசிஐ அழுத்தம் - என்ன நடக்கிறது?

இந்த விழாவில், டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்த பார்படோஸைச் சேர்ந்த பாப் பாடகி ரிஹானாவும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு, `பார்படோஸின் தேசிய ஹீரோ' என்ற பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியது பார்படோஸ் அரசு!

முன்னதாக, இது குறித்துப் கருத்து தெரிவித்த ராணி இரண்டாம் எலிசபெத், ``இந்த முக்கியமான நாளை நீங்கள் கொண்டாடும் போது, ​மகிழ்ச்சி, அமைதி, செழிப்புக்காக அனைத்து பார்படியர்களுக்கும் என் அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இரு நாடுகளும், நாட்டு மக்களும் எப்போது நட்புடன் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்'' என்றிருந்தார்.

இந்த விழாவில் பேசிய பார்படோஸின் புதிய அதிபர் சாண்ட்ரா மசோன், ``அரை நூற்றாண்டுக்கு முன்பே சுதந்திரம் பெற்ற நம் நாடு, தற்போது முழுமையாகக் காலனித்துவ நாடு என்பதிலிருந்து வெளி வந்திருக்கிறது. சுயமாக ஆட்சி செய்யும் திறனை நாம் பெற்றிருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை'' என்றார்.

சாண்ட்ரா மசோன்
தீவு நாடான பார்படோஸ், வருமானத்துக்குச் சுற்றுலாத்துறையையே பெரிதும் நம்பியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் சுற்றுலாத் தொழில் பாதிப்பைச் சந்தித்திருப்பதால், பார்படோஸ் பொருளாதார சிக்கலிலிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது பார்படோஸ், புதிய அதிபர், புதிய குடியரசு எனப் புது உற்சாகத்துடன் இருப்பதால், விரைவில் பொருளாதாரச் சிக்கல்கள் சரி செய்யப்படுமென்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள் பார்படோஸ் மக்கள்!


source https://www.vikatan.com/government-and-politics/international/story-about-the-new-republic-country-barbados

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக