Ad

வியாழன், 10 நவம்பர், 2022

கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கேரள கவர்னர்... பினராயி விஜயன் அதிரடி!

கேரள மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்திலும், முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஷயத்திலும் கவர்னர் ஆரிப் முஹம்மதுகானின் செயல்பாடுகள் முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளும் சி.பி.எம் கட்சிக்கும் அதிருப்தியை எற்படுத்தியது. கவர்னரின் நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடும் விதமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கவர்னரை மாற்றுவதற்கு அவசர சட்டம் கொண்டு வரப்படும் எனவும், அதற்காக வரும் டிசம்பர் மாதம் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. சட்ட பல்கலைக்கழகம் தவிர மாநிலத்தில் உள்ள 15 பல்கலைக்கழகங்களிலும் வேந்தராக கவர்னர் இருந்துவருகிறார். இந்த நிலையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் உள்ள விதிகளிலும் மாற்றம் ஏற்படுத்தி தனித்தனி மசோதாக்கள் கொண்டுவர அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேரள கலாமண்டலம் கல்ப்பித பல்கலைகழகம்

வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை மாற்றிவிட்டு அமைச்சரையோ, கல்வியாளர்களையோ வேந்தராக நியமிக்க வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் கலாமண்டலம் கல்ப்பித பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் நீக்கப்பட்டுள்ளார். கேரள கலாசார துறையின் கீழ் கலாமண்டலம் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. மாநில கலாசாரத்துறை அமைச்சர் வி.என்.வாசவன் இந்த பல்கலைகழக துணை வேந்தராக உள்ளார்.

2006-ம் ஆண்டில் இருந்து கவர்னர் இந்த பல்கலைகழக வேந்தராக இருந்து வருகிறார். கவர்னரை வேந்தர் பதவியில் இருந்து நீக்கி கலாசாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கலாமண்டலம் பல்கலைக்கழக விதிகளின்படி வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் நீக்கப்பட்டுள்ளார்.

ஆரிப் முகமது கான்

அந்த பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்தும் கவர்னரை நீக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் கவர்னரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-government-removed-governor-from-kalamandalam-university-chancellor-post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக