இந்த ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசு வழங்கத் தீர்மானித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த முறை பொருள்களாக அல்லாமல், அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் 1,000 ரூபாய் வழங்க முடிவெடுத்திருக்கிறதாம் ஆட்சி மேலிடம். ‘மொத்தமாக எந்தப் பொருளுமே வழங்கவில்லையென்றால் தவறாகிவிடும். சர்க்கரை, பச்சரிசி, கரும்பு, முந்திரிப்பருப்பு, நெய் மட்டுமாவது வழங்கலாமே?’ என சில அமைச்சர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், ‘கடந்த முறை வழங்கியபோது ஏற்பட்ட பஞ்சாயத்து போதாதா... அதெல்லாம் வேண்டாம். பணமாகவே கொடுத்துவிடுவோம்’ என்று சொல்லிவிட்டதாம் முதல்வர் அலுவலகம்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் அவரின் மனைவியும், கடந்த தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006-ம் ஆண்டு வழக்கு பதிவுசெய்தது. பொன்முடியின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கு மீதான விசாரணை, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பல மாதங்களாக வாய்தா மேல் வாய்தா வாங்கிவந்த பொன்முடிக்கு, ‘கட்டாயம் ஆஜராகியே ஆக வேண்டும். இல்லையென்றால், சிக்கல் ஏற்படும்’ என நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதைச் சமாளிக்க பொன்முடி தரப்பிலிருந்து மேலிடத்தில் யோசனை கேட்கப்பட்டதாம். ‘ஏற்கெனவே, வீணா பேசி வம்பை விலை கொடுத்து வாங்கிட்டு இருக்கீங்க... நீதிமன்றம் கண்டனம் தெரிவிச்சா சிக்கலாகிடும், ஒருமுறைதானே... போய் ஆஜராகிட்டு வாங்க’ என்று மேலிடம் கைவிரித்துவிட்டதாம். வேறு வழியில்லாமல் நீதிமன்றப் படியேறி, ஆஜராகியிருக்கிறார் பொன்முடி. “ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று சொன்ன வாய்தானே இது?” என்று சிரிப்பாய் சிரிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.
கமல்ஹாசனின் பிறந்தநாள்விழாவை முன்னிட்டு, ஆழ்வார்பேட்டையிலுள்ள ம.நீ.ம கட்சி அலுவலகத்தில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் அவருடைய கட்சியினர். அதைத் தொடங்கி மட்டும் வைத்துவிட்டு, மயிலாப்பூரிலுள்ள தனியார் கல்லூரி விழாவுக்குப் போய்விட்டார் கமல். நீண்ட நாள்களுக்குப் பிறகு கட்சி அலுவலகத்துக்கு வரும் தலைவர், நம்முடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்த்து வந்த நிர்வாகிகளை அவர் ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லையாம். “இப்பல்லாம் சினிமா... சினிமா எனப் போய்விடுகிறார். இப்படி ஏதாவது சந்தர்ப்பத்தில்தான் அவரைப் பார்க்க முடிகிறது.
எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச நிர்வாகிகளையும் தக்கவைக்க வேண்டுமென்றால், அடிக்கடி கட்சிக் கூட்டம் நடத்தி நிர்வாகிகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். முடியாதென்றால், `கட்சியைக் கலைத்துவிட்டேன்’ என அறிவித்துவிடுவதுதான் அவருக்கும் நல்லது, தொண்டர்களுக்கும் நல்லது” என்று கோபத்தில் புலம்பியிருக்கிறார்கள் நிர்வாகிகள்.
சமீபத்தில், டி.எஸ்.பி நிலையிலான அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர் அல்லவா... இந்தப் பணியிட மாற்றப் பட்டியலில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி-யாக இருந்த கலைக்கதிரவன், மயிலாடுதுறை சமூகநீதி, மனித உரிமைகள் துறை டி.எஸ்.பி-யாக மாற்றப்பட்டார். அரியலூர் மாவட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் அழுத்தத்தால்தான் இவர் மாற்றம் செய்யப்பட்டதாகப் பேச்சு கிளம்பியிருக்கிறது. ‘கட்சிக்காரங்க எது சொன்னாலும் அந்த டி.எஸ்.பி செஞ்சு கொடுக்குறது இல்லை... கட்சிக்காரங்களை ரொம்ப அவமரியாதையா நடத்துறாரு’ என்று அந்த எம்.எல்.ஏ மேலிடத்தில் புகார் சொன்னதே டி.எஸ்.பி மாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள் அரியலூர் காக்கிகள்.
கொங்கு அமைச்சர் ஒருவர் கடந்த சில நாள்களாக, கோயில் கோயிலாகச் சென்று பூஜையும் பரிகாரமும் செய்துகொண்டிருக்கிறாராம். `என்ன அமைச்சருக்கு இந்த திடீர் பக்தி?’ என்று விசாரித்தால், ‘தி.மு.க-வில் அமைச்சராக இருப்பதைவிட கட்சிப் பொறுப்பில் இருப்பதுதான் கௌரவம். தலைமை சொல்லுதேன்னு இளைஞரணிப் பதவியை விட்டுக்கொடுத்தேன்.
பிறகு மாவட்டப் பொறுப்பையும் விட்டுக்கொடுத்தேன். கட்சி என்னைய ஏமாத்திருச்சு...’ என்று புலம்பிக்கொண்டிருந்தவர் மன நிம்மதிக்காகக் கோயில், குளமாக போவதாகச் சொல்கிறார்கள். “பொதுவா இந்தப் பகுதிக்காரர்கள் பழநிக்குத்தான் போவாங்க. அமைச்சர் கும்பகோணம் பகுதியில், பரிகார பூஜை செய்யறதுக்கு ஏதாவது ஜோதிட அறிவுரையும் காரணமா இருக்கலாம்” என்றும் பேச்சு கிளம்பியிருக்கிறது!
source https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-updates-on-minister-ponmudi-kamal-and-other-political-happenings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக