`நேர்மையைப்போல சிறந்த செல்வம் வேறொன்று இருக்க முடியாது’ என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர்.
அது ஒரு மாலை நேரம். மலேசியாவில் இருக்கும் பிரமாண்டமான கேர்ஃபோர் (Carrefour) ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தார் அவர். அரை நிஜார், பூப்போட்ட சட்டை, இடுப்பில் கட்டப்பட்டிருந்த லெதர் பவுச், கூலிங்கிளாஸ், தலையில் தொப்பி... போதாதா அவர் ஒரு சுற்றுலாப்பயணி என்பதை அவர் தோற்றமே காட்டிக் கொடுத்தது. ஷாப்பிங் மாலைச் சுற்றி வந்தவர், காலணிகள் விற்கும் ஒரு கடைக்குள் நுழைந்தார். நிதானமாக ஒவ்வோர் அடுக்கிலும் இருந்த செருப்புகளையும் ஷூக்களையும் பார்வையிட்டார். ஒரு அடுக்கின் முன் நின்றார். அதன் மேல் ஹஷ் பப்பீஸ் (Hush Puppies) என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது. அது உலகம் முழுக்க ஹஷ் பப்பீஸ் ஷூக்கள் விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த நேரம். மென்மை, எடையில்லாமல் லேசாக இருப்பது போன்ற காரணங்களால் பலரும் அந்த ஷூக்களை வாங்க ஆரம்பித்திருந்தனர்.அந்தக் கடையின் ஊழியர் ஒருவர் சுற்றுலாப்பயணியின் அருகே வந்தார். ``ஷூ பார்க்கிறீங்களா சார்?’’
``ஆமா. ஹஷ் பப்பீஸ் பிராண்டுல வேணும்’’ என்றவர், ஷூ சைஸையும் சொன்னார். ஊழியர் சில மாடல்களை எடுத்துக்காட்ட, அவற்றில் ஒன்றை சுற்றுலாப்பயணி தேர்ந்தெடுத்தார். காலில் அணிந்து பார்த்தார். கச்சிதமாக இருந்தது.
``இந்த ஒண்ணு போதுமா சார்?’’
``போதும். பில் போட்டுடுங்க’’ என்ற சுற்றுலாப்பயணி, தன் கிரெடிட் கார்டில் தொகையை செலுத்தி பில்லை வாங்கிக்கொண்டார். கவுன்ட்டரில் இருந்தவரிடம், ``தேங்க்ஸ்’’ என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
இது நடந்து ஒரு வாரம் கழித்து,மலேசியாவின் கேர்ஃபோர் ஷாப்பிங் மாலுக்கும், பிரான்ஸில் இருக்கும் கேஃபோர் தலைமையகத்துக்கும் வக்கீல் நோட்டீஸ் வந்தது. அனுப்பியிருந்தவர் ஹஷ் பப்பீஸ் ஷூக்களைத் தயாரிக்கும் வால்வரின் வேர்ல்டு வைடு (Wolverine World Wide) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். ``எங்களின் சிறந்த பிராண்டான ஹஷ் பப்பீஸ் ஷூக்களை உங்களுக்கு நாங்கள் சப்ளை செய்ய்வில்லை. போலியாகத் தயாரித்து நீங்கள் விற்றிருக்கிறீகள். அதற்கான ஆதாரம் இருக்கிறது. இந்தத் தவற்றுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று குறிப்பிட்டு, சில மில்லியன் டாலரை நஷ்ட ஈடாகக் கேட்டிருந்தார் அவர்.
ஆடிப்போனது கேர்ஃபோர் நிர்வாகம். அப்போதுதான் வந்தது சுற்றுலாப்பயணி அல்ல, வால்வரின் வேர்ல்டு வைடு நிறுவனத்தின் எம்.டி என்பது தெரிந்தது. விசாரித்ததில் உள்ளூர் ஷூ தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இப்படி போலி ஹஷ் பப்பீஸ் ஷூக்களை சப்ளை செய்தது தெரியவந்தது. வழக்கை எதிர்கொள்ளவும் வழியில்லை. நோட்டீஸ் அனுப்பியிருப்பதோ பெரிய நிறுவனம். வால்வரின் வேர்ல்டு வைடுக்கு, கேட்ட நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்தது கேர்ஃபோர் நிர்வாகம்.
அதன் பிறகு உண்மையான ஹஷ் பப்பீஸ் ஷூக்களை விற்க முடிவெடுத்தது கேர்ஃபோர் நிர்வாகம். அதற்காக ஆசியாவில் ஹஷ் பப்பீஸ் ஷூக்களை விற்கும் உரிமை தங்களுக்கு வேண்டும் என்று வால்வரின் நிறுவனத்துக்கே விண்ணப்பம் அனுப்பியது. வால்வரின் நிறுவனமும் கேர்ஃபோரின் நிலைமையைப் புரிந்துகொண்டது. அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு, கேர்ஃபோரிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. அசல் நிலைத்து நிற்கும், போலி வெகு நாள்களுக்கு ஓடாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.
`ஞானத்தின் முதல் அத்தியாயம்தான் நேர்மை’ என்கிறார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்சன். உண்மை. `காலம் முழுக்க நேர்மையா இருந்து என்னத்தைக் கண்டோம்’ என்று புலம்புபவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். நேர்மையின் மற்றொரு பெயர் வெற்றி என்கிறார்கள் அனுபவசாலிகள்.
source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/morning-motivational-story-about-how-honest-helps-to-succeed
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக