நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராசிபுரத்தை அடுத்த ஏ.கே சமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக, தகவலின்பேரில் புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அங்கே தாறுமாறாக வந்த லாரியும் மோதி நின்றது.
இரண்டு வாகன விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதோடு, விபத்துக்குள்ளான அந்த இரண்டு வாகனங்களையும் அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர், நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த டூரிஸ்ட் வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக, அங்கே நின்று கொண்டிருந்த காவல்துறையினர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், புதுச்சத்திரம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் ராசிபுரம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் தேவராஜன் உள்ளிட்ட இரண்டு காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், காயமடைந்த இரண்டு காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர் உட்பட 4 பேரை மீட்டு, சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பார் சாய்சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
விபத்து குறித்து விசாரிக்க சென்ற காவல்துறையினர் விபத்தில் பலியான சம்பவம் காவல் துறையினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சோக விபத்து சம்பவம் குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினரை போன் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் சொல்லியிருக்கிறார். அதோடு, உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/news/accident/rasipuram-accident-including-police-si-two-died
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக