மாணவர்களின் மாற்றுச்சான்றிதழில், அவர்கள் பள்ளிக்குச் செலுத்தவேண்டிய கட்டணங்களை கட்டாமல் வைத்திருந்தால், `கட்டண பாக்கி' (Fee Arrear) என குறிப்பிடலாம் என்று, சில தினங்களுக்கு முன்னால் சென்னை உயர் நீதிமன்றம் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது. பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் மத்தியிலும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ள இந்த அனுமதி தொடர்பாக, `தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்க'த்தின் மாநிலத்தலைவர் அருமைநாதனிடம் பேசினோம்.
``கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளிக்கூடங்கள், அதற்காகக் கல்விக்கட்டணம் வசூலித்தார்கள். கட்ட முடியாத மாணவர்களின் மாற்றுச்சான்றிதழை வாங்கிச் செல்லுமாறு அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். பலரும் `மாற்றுச்சான்றிதழ் வாங்கிக்கொள்கிறோம்' எனப் பள்ளிக்கூடங்களை அணுக, `கட்டண பாக்கியைக் கட்டினால்தான் மாற்றுச்சான்றிதழ் தரப்படும்' எனத் தனியார் பள்ளிகள் தங்கள் நெருக்கடியை இன்னமும் அதிகப்படுத்தினார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது `Right to Education' சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிக்கூடங்களில் படித்து வந்த மாணவர்கள்தாம். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு `மாற்றுச்சான்றிதழ் இல்லாமலும் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்' என அறிவித்தது. இதைத் தொடர்ந்து `பல லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிக்கூடங்களிலிருந்து அரசு பள்ளிக்கூடங்களுக்கு மாறியிருக்கிறார்கள்' எனத் தமிழக அரசு அறிவித்தது. இப்படி பள்ளி மாறுவதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது, எட்டாம் வகுப்பு வரையிலும் மாற்றுச்சான்றிதழ் இல்லாமலும் பள்ளி மாற முடியும். ஆனால், ஒன்பதாவது மற்றும் பத்தாவது வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் ஒரு பள்ளிக்கூடத்திலிருந்து மற்றொரு பள்ளிக்கூடத்துக்கு மாற்ற முடியாமல் போனது.
இதனிடையே தனியார் பள்ளிக்கூடங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகின. `2019-20 வருடம் பள்ளிக்கட்டண கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தில் 75 சதவிகிதத்தை மட்டும் பெற்றோர்கள் கட்டினால் போதும்' என்றது சென்னை உயர் நீதிமன்றம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில தனியார் பள்ளிக்கூடங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி `85 சதவிகித கட்டணத்தைச் செலுத்த வேண்டும்' என்று மனு கொடுக்க, சென்னை உயர் நீதிமன்றமும் `85 சதவிகிதம் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால், யாரையும் மாற்றுச்சான்றிதழ் வாங்கிக்கொண்டு வெளியேறுங்கள் என்று கட்டாயப்படுத்தக்கூடாது' என அறிவுறுத்தியது. உடனே தனியார் பள்ளிக்கூடங்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அதில், `கட்டணம் செலுத்தாமல் மாற்றுச்சான்றிதழ் வாங்குபவர்கள் அதன்பிறகு பள்ளிக்கட்டணத்தைச் செலுத்த மாட்டார்கள். எங்களால் தொடர்ந்து பள்ளியை நடத்த முடியாது' என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்தே சென்னை உயர் நீதிமன்றம், `செலுத்த வேண்டிய கட்டணத்தொகையை மாணவர்களின் மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட்டுக் கொடுங்கள்' என்று ஆலோசனை வழங்கியது'' என்ற அருமைநாதன் தொடர்ந்து பேசினார்.
Also Read: ̀தடுப்பூசி போட்டுக்கோங்க; பிள்ளைகள் உயர்கல்வி கட்டணத்தை நாங்க ஏத்துக்குறோம்!' - அசத்தும் அரசுப்பள்ளி
``மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கியைக் குறிப்பிட்டால் அது நிரந்தர பதிவாகி விடும். மாணவர்கள் ஏதோ தவறு செய்ததுபோல தோன்ற வைத்துவிடும். வேறொரு பள்ளிக்கூடத்துக்குச் செல்லும்போதும் `ஓ... இவங்க ஃபீஸ் கட்டாத மாணவர்களா' என்கிற எண்ணத்தை விதைக்கும். இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். பள்ளிக்கட்டண கமிட்டியில் குறிப்பிடுகிற அதே தொகையைத்தான் தனியார் பள்ளிக்கூடங்கள் வசூலிக்கின்றனவா என்பதும் கவனிக்கப்பட வேண்டும். ஏனென்றால், தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்துக்கு ஒரு தொகை, புத்தகங்களுக்கு ஒரு தொகை, சீருடைக்கு ஒரு தொகை என தனித்தனியாகப் பணம் வசூலிக்கிறார்கள். அப்படியே அவர்கள் கட்டண பாக்கி என்று குறிப்பிட்ட தொகையை கட்டியபிறகு மாணவர்களின் மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கி என்று குறிப்பிட்டிருப்பதை எப்படி நீக்குவது? இந்தக் கேள்விக்கும் நம்மிடம் பதிலில்லை.
அதனால், எங்கள் சங்கத்திலிருந்து முதன்மை கல்வி அலுவலரின் செயலரைச் சந்தித்து, `மாற்றுச்சான்றிதழில் கட்டண பாக்கி என்று குறிப்பிடாமல், பெற்றோர்களிடம் கட்டண பாக்கி இருக்கிறது என்பதற்கான வேறு ஆதாரங்களை வாங்கிக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுங்கள்' என மனு கொடுத்திருக்கிறோம்.
தனியார் பள்ளிகளும் அரசும்தான் இந்த வழக்கை நடத்திக்கொண்டிருக்கின்றன. பெற்றோர்களையும் தமிழ்நாடு மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கத்தையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
Also Read: வீடு கேட்டு வாட்ஸ்அப்பில் மனு அனுப்பிய மாணவர்; குடும்பத்தையே நெகிழவைத்த தஞ்சை ஆட்சியர்!
இந்த வழக்கைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், பாதிக்கப்படப்போவதென்னவோ அவர்கள்தான். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதாக உறுதியளித்திருக்கிறது. அதை உடனடியாகச் செய்ய வேண்டும். இல்லையென்றால், `கொடுக்கலைன்னா மாற்றுச்சான்றிதழ்ல எழுதிடுவோம்' என்று தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்க ஆரம்பிக்கலாம்'' என்கிறார் அருமைநாதன்.
source https://www.vikatan.com/social-affairs/education/why-mentioning-student-s-fee-arrears-in-school-tc-s-is-bad-ideas
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக