Ad

செவ்வாய், 14 டிசம்பர், 2021

அமைச்சர்களுக்கு செக்... அதிகாரிகளுக்கு அலெர்ட்! - முடக்கிவிடும் முதல்வர்

துறையின் அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டே அந்த துறையின் அதிகாரியை முதல்வர் புகழ்ந்து பேசியிருப்பது தமிழக அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களுக்கு குட்டு வைக்க அதிகாரிகளை முதல்வர் கையில் எடுத்துள்ளாரோ என்கிற பேச்சு கோட்டைக்குள் எழுந்துள்ளது.

ஸ்டாலின்- பெரியகருப்பன்- அமுதா ஐ.,ஏ.எஸ்

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் நேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், அந்த துறையின் செயலாளர் அமுதா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தமிழக அரசு பெண்களுக்கு அளித்துவரும் நலத்திட்டங்களையும், சுயஉதவிக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் அந்த கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து இந்த துறையின் செயலாளராக உள்ள அமுதா ஐ.ஏ.எஸ் சிறப்பாக பணியாற்றக்கூடியவர். அவரால் மகளிர் சுயஉதவிக்குழுகள் மிக வேகமாக வளர்ச்சிகளை ஈட்டும்” என்று தனிப்பட்ட முறையில் அரசு அதிகாரியை முதல்வர் புகழந்து பேசினார்.

இது கோட்டையில் உள்ள அதிகாரிகள் மத்தியிலும், அமைச்சர்கள் மத்தியிலும் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ``அமுதா மீது முதல்வருக்கு நல்ல மரியாதை உள்ளது. ஏற்கனவே அமைச்சர் பெரிய கருப்பன் செயல்பாடுகள் குறித்து முதல்வருக்கு நல்ல ஒபினியன் இல்லை. அதனாலேயே அமுதாவை அந்த துறையின் செயலாளராக நியமனம் செய்து, பெரியகருப்பனை கட்டுபடுத்தியுள்ளார். அவர் மட்டுமல்ல, சில அமைச்சர்களின் செயல்பாடுகளை தன் பிடிக்குள் வைத்திருக்கவே முதல்வரும் விரும்புகிறார். அதற்காகவே அதிகாரிகள் சிலரையும் முதல்வர் தன் நேரடி தொடர்பில் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் வணிக வரித்துறைக்கு பணீந்தரரெட்டியை நியமனம் செய்ததன் காரணமே, அந்த துறையின் அமைச்சரும் மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்தது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அமைச்சரை கட்டுபடுத்த ஒரு நல்ல அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று பணீந்தர ரெட்டியை அங்கு முதல்வர் நியமித்துள்ளார். அந்த துறை மட்டுமல்ல, வருவாய்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும் முதல்வருடன் நேரடியாக தொடர்பில் இருக்கிறார்கள்.

தலைமை செயலகம்

பொதுப்பணித்துறையில் நடக்கும் எல்லா விவரங்களும் முதல்வர் அலுவலகத்திற்கு உடனடியாக வந்துவிடுகிறது. இதை தவிர பல அமைச்சர்களின் அலுவலகங்களிலும் முதல்வர் சார்பில் ஒரு உதவியாளரை நியமித்துள்ளார்கள். அவர்களது வேலையே அமைச்சர்களின் மூவ்களை முதல்வர் அலுவலகத்திற்கு தெரிவிக்கவே இருக்கிறது. சில மூத்த அமைச்சர்கள் இந்த நியமனத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், முதல்வர் தரப்பில் இதை தடுக்க முடியாது என்று கடுமை காட்டியதால் வழியில்லாமல் அனைத்து அமைச்சர்களுமே இவர்களை பணிக்கு வைத்திருக்கிறார்கள்.

Also Read: “முதல்வர்கிட்ட பேசிக்கிறோம்!” - அதிகாரிகள் Vs அமைச்சர்கள் ஈகோ யுத்தம்!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் அமைச்சர்களை நம்பாமல் இல்லை, ஆனால் அரசு திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைய வேண்டும். அதற்கு அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார். அமைச்சர்களுக்கு வேண்டியவர்கள் மட்டுமே அமைச்சரை சுற்றி இருந்தால் அங்கு முறைகேடுகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் சிக்கலுக்குரிய அமைச்சர்களுடன், தனக்கு வேண்டிய அதிகாரிகளை பணியில அமர்த்தி அமைச்சர்களுக்கு முதல்வர் செக் வைத்துள்ளார். அந்த வகையில் தான் அமுதாவை பெரியகருப்பன் துறைக்கு செயலளாராக முதல்வர் நியமித்து அந்த துறையின் செயல்பாடுகளை அதிகாரி மூலம் கட்டுபடுத்திவருகிறார்” என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/is-tn-cm-stalin-using-officials-to-control-the-respective-ministers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக