Ad

திங்கள், 13 டிசம்பர், 2021

கருணை காட்டுங்க முதல்வரே! #MyVikatan

அரசு பணியில் இருப்பவர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால் அவர்களின் மகன்/மகள் என்று ரத்த பந்தமுள்ள ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படுகிறது. அரசுப் பணியாளர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவது போல் குறிப்பிட்ட சில கூலித்தொழிலாளிகள் குடும்பத்திற்கும் கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க வேண்டும் என்பது குறித்த சிந்தனை இது.

யார் அந்தக் குறிப்பிட்ட சில கூலித்தொழிலாளிகள்?. வேறு யாருமில்லை. பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள்தாம் அந்தக் குறிப்பிட்ட சில கூலித்தொழிலாளிகள். கடந்த பத்து வருடங்களில் மாணவ மாணவிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் தமிழகம் மாணவ மாணவிகளின் தற்கொலையில் 'இரண்டாம்' இடத்தில் உள்ளது. அப்படி மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்ள 'தேர்வில் தோல்வி' என்பது மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

suicide

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட் தேர்வு ஆகிய தேர்வுகளில் 'தேர்வில் தோல்வி' என்ற காரணத்தால் இதுவரை தற்கொலை செய்துகொண்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளிகளே. இந்த 2021ம் வருடத்தில் நீட் தேர்வில் தோல்வி காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட தனுஷ், சவுந்தர்யா, சுபாஷ் சந்திரபோஸ் - இந்த மூன்று மாணவ செல்வங்களும் கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள். வேகாத வெயிலில் வெந்து நொந்து போய் பணம் சம்பாதித்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள் அந்தக் கூலித்தொழிலாளி பெற்றோர்கள். அப்படி படிக்க வைத்த பிள்ளைகள் தேர்வில் தோல்வி என்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்றதும் பெற்றோர்களுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு வருகிறது. அந்தப் பெற்றோர்கள் நடைபிணங்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட கூலித்தொழிலாளிகளின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வேண்டும் என்று கேட்பதில் எந்தத் தவறும் இல்லை என்று தோன்றுகிறது. காரணம் இந்தக் கூலித்தொழிலாளிகள் தங்களின் பிள்ளைகளைத்தான் வாழ்வின் ஒளியாகக் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்ளும்போது அவர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாக மாறிவிடுகிறது. குறிப்பாகத் தற்கொலை செய்துகொண்டவர்களின் சகோதர சகோதரிகள் தீராத மனவலியை சுமக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆக மொத்தத்தில் குடும்பமே கடும் மன உளைச்சலை சந்தித்து வருகிறது.

ஆகையால் 'தேர்வில் தோல்வி' என்ற காரணத்தால் தற்கொலை செய்துகொண்டவர்களின் சகோதர சகோதரிகளுக்கு (கூலித்தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு - முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு) கருணை அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள Lab assistant/ ஆய்வக உதவியாளர் பணி வழங்க வேண்டும். (பள்ளிக்கல்வித்துறை சார்ந்த உயிரிழப்புகள் என்பதால் அதே துறை சார்ந்த வேலை வழங்கினால் சிறப்பாக இருக்கும்.)

இவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை (Lab assistant) வழங்குவதற்கு சில விதிமுறைகள் இப்படி வைக்கலாம்.

1. தற்கொலை செய்துகொண்டவர் போக வீட்டிற்கு ஒரேயொரு மகன்/மகள் என்று பெற்றோர்களுக்கு ஆறுதலாக இருப்பவர்களுக்கு, டிகிரி முடித்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்குப் பணி வழங்கலாம்.

2. தற்கொலை செய்தவர்களின் சகோதர/சகோதரிகளுக்கு (வீட்டிற்கு ஒரே மகன்/ மகள்) வயது வரம்பு 18 - 30 வயதிற்குள் இருப்பவர்களுக்குப் பணி வழங்கலாம்.

3. 2015ம் ஆண்டு முதல் தற்கொலை செய்துகொண்ட மாணவி/மாணவர்களின் குடும்பத்திற்கு பணி வழங்கலாம்.

4. அரசு ஆவணங்களில் 'தேர்வில் தோல்வி' என்ற காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கூலித்தொழிலாளிகளின் பிள்ளைகள் தேர்வில் தோல்வி காரணமாகத் தற்கொலை செய்துகொள்ள குடும்ப பிரச்சினை தான் முக்கிய காரணம் என்று சிலர் கூற வாய்ப்பு உண்டு. குடும்ப பிரச்சினை மட்டுமே காரணம் அல்ல. தேர்வில் தோல்வியால் தற்கொலை என்பது மிகப்பெரிய சமூக பிரச்னை. இந்த தற்கொலைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ நாம் எல்லோரும் காரணமாக உள்ளோம்.

suicide

புதிய ஆட்சி அமைந்த சில மாதங்களில் நிலுவையில் இருந்த பெரும்பாலான கருணை அடிப்படையில் வழங்கப்படும் அரசுப்பணிக்கான நியமன ஆணைகளை வழங்கியது தமிழக அரசு. அதேபோல விரைவில் இந்தக் குறிப்பிட்ட சில கூலித்தொழிலாளிகள் குடும்பத்திற்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.

மாணவ மாணவிகளின் தற்கொலைகளைத் தடுப்பதில் அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். செய்தித்தாள்களில், செய்தி சேனல்களில் 'தேர்வில் தோல்வி காரணமாக மாணவன்/மாணவி தற்கொலை' என்ற செய்தி வராத அளவிற்கு இனிவரும் காலங்களில் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவு இலவச உதவி எண்களான 14417, 1098 ஆகிய எண்களைப் பள்ளி பாடப் புத்தகங்களின் முதல் பக்கங்களில் அச்சிடப்படும் என்று அரசு அறிவித்தது போல் தற்கொலை தடுப்பு பிரிவு இலவச உதவி எண்ணான 104 என்ற எண்ணையும் பள்ளிப் பாட புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சிட அரசு உத்தரவிட வேண்டும்.

- மா.யுவராஜ்



source https://www.vikatan.com/social-affairs/neet-student-suicide-parents-job

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக