Ad

செவ்வாய், 14 டிசம்பர், 2021

`ராமதாஸின் திடீர் ஆவேசப் பேச்சு, எமோஷனல் அட்வைஸ்!' - பா.ம.க-வினரை உத்வேகப்படுத்தவா, உசுப்பிவிடவா?

சட்டமன்றம், உள்ளாட்சி என அடுத்தடுத்த தேர்தல் முடிவுகள், பா.ம.க தலைமையை ரொம்பவே உஷ்ணப்படுத்தியிருக்கிறது. இதன் வெளிப்பாடாக கட்சியின் நிர்வாகிகள் கூட்டங்களில் சொந்தக் கட்சியினரையே வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.

`அன்புமணியைப் போன்ற திறமையானவர் இங்கே யாருமில்லை. எனவே அன்புமணியை கோட்டையில் அமரவைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது' என வகுப்பெடுப்பதில் ஆரம்பித்து, 'தேர்தல் தோல்விக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்களே காரணம். ஆண்ட பரம்பரையான நாம் இன்று அடுத்தவருக்கு துதி பாடிக்கொண்டிருக்கிறோம். ஷத்திரிய வம்சத்தின் வீரம் எங்கே போயிற்று? வீர வன்னியர்களாக தமிழகத்தை ஆள்வோம். வீடு வீடாக திண்ணைப் பிரசாரம் செய்யுங்கள்' என்று வார்த்தைகளாலே பிரம்பெடுத்து விளாசித்தள்ளுகிறார்.

ராமதாஸ் - அன்புமணி

பா.ம.க-வின் இந்தப் புதிய ஆவேச அணுகுமுறை சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பிவருகிறது. அரசியல் அரங்கில், சமூக நீதி குறித்துப் பேசுகிற பா.ம.க தனது கட்சித் தொண்டர்களிடையே 'ஷத்திரிய பெருமை' பேசுவது எத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்? வாக்கு அரசியலுக்காக வர்ணாஸிரம கருத்துகளைப் புகுத்தி, பாமர மக்களை பிற்போக்காளர்களாக மடைமாற்றம் செய்கிறாரா மருத்துவர் ராமதாஸ்? என பல்வேறு கோணங்களில் காரசார கேள்விகள் இணையதளங்களில் சூடு பறக்கின்றன.

இதற்கிடையே, அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைப்பவர்கள், ``அண்மைக்கால தேர்தல் முடிவுகள் டாக்டர் ராமதாஸை ரொம்பவே அயர்ச்சியடைய வைத்திருக்கின்றன. பா.ம.க பலமாக இருக்கும் வட மாவட்டங்களிலேயே கட்சி பலவீனமான எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றிருப்பது கட்சியின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிட்டது. எனவே, தங்களுடைய பழைய இடத்தைப் பிடிப்பதற்காக ராமதாஸ் ரொம்பவே மெனக்கெடுகிறார்.

மேலும், அவர் ஏற்கெனவே கூறியிருந்ததுபோல, 'அன்புமணி முதல்வராக கோட்டையில் அமர்வதைப் பார்த்துவிட'த் துடிக்கிறார். இந்த சூழலில், உணர்ச்சிமயமாகப் பேசி தன் வன்னிய சொந்தங்களைக் கவர நினைக்கிறார்'' என்கின்றனர்.

மாறாக, ''பா.ம.க-வின் பலமே சாதி அரசியல்தான். இந்த சாதிய உணர்வுகளுக்குத் தீனி போடும்விதமாக இளைஞர்களிடையே சாதி வெறியூட்டக்கூடிய வகையில் பேசி அந்த அப்பாவி மக்களின் மனதில் சாதிப் பெருமையை விதைத்து, அதன் மூலம் வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறார் ராமதாஸ்'' என்றொரு எதிர் விமர்சனமும் வலுத்துவருகிறது.

ராதாகிருஷ்ணன்

தமிழக அரசியல் அரங்கில் பா.ம.க தொடர்பான விவாதங்கள் பரபரத்துக் கொண்டிருக்கும் வேளையில், 'மருத்துவர் ராமதாஸின் புதிய ஆவேச அணுகுமுறை, பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உத்வேகப்படுத்துகிறதா அல்லது உசுப்பிவிடுகிறதா...' என்றொரு கேள்வியை அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான ராதாகிருஷ்ணனிடம் முன்வைத்தோம்.

``எதைச் செய்தால் வேலைக்காகும் என்று ராமதாஸ் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார். அதனால்தான் சாதி உணர்வைத் தூண்டிவிடுவது, அன்புமணி ராமதாஸை முன்னிலைப்படுத்துவது என பல விஷயங்களைப் பற்றியும் தொடர்ந்து பேசிவருகிறார். ஆனால், இவற்றில் எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதுதான் பெருஞ்சோகம்.

Also Read: பெண்களுக்கு கட்டணமில்லா `பிங்க்' பேருந்து, `பிங்க் லைசன்ஸ் டே' - புதுச்சேரி அரசின் புது முயற்சி!

முதலில் சாதிப்பற்றைப் பேசிய பா.ம.க, அடுத்து மொழிப் பற்று, ஈழம் பற்றியெல்லாம் பேசியது. ஆனால், இவற்றையெல்லாம் பேசும் இடத்தில் தி.மு.க, ம.தி.மு.க, நாம் தமிழர் என பல்வேறு கட்சிகளும் வலுவாக இருந்துவருவதால், எதை வைத்து அரசியல் செய்வது என்ற குழப்பத்தில் தவித்துவருகிறது பா.ம.க.

2016 தேர்தலில் மாற்றம், முன்னேற்றம் என்று வளர்ச்சி பற்றிப் பேசிப் பார்த்தார்கள்... எடுபடவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் 'வேல்முருகனைப் புறக்கணிக்கவேண்டும்' என்று பா.ம.க செய்த பிரசாரங்கள் பண்ருட்டி தொகுதியிலேயே எடுபடவில்லை. எனவே, அடுத்து மீண்டும் தமிழ்நாட்டை, வட தமிழகமாக பிரித்துக் கேட்கும் ஐடியாவைக்கூட கையில் எடுத்து பா.ம.க பேசக்கூடும்'' என்கிறார்.

ப்ரியன்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் ப்ரியன், ``எல்லாக் கட்சியிலுமே முன்புபோல், கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு தொண்டர்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தொண்டர்களைப் பொறுத்தவரையில், உள்ளூரில் தங்களுக்குக் காரியம் நடக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். எனவே, தி.மு.க-வோ அல்லது அ.தி.மு.க-வோ யார் ஆளுங்கட்சியாக இருக்கிறார்களோ அவர்களை அனுசரித்துப் போகவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். உதாரணமாக அண்மையில் முதல்வர் சேலத்துக்குச் சென்றபோது, அங்கிருக்கக்கூடிய பா.ம.க எம்.எல்.ஏ-க்களே புகழ்ந்து பேசினார்கள்.

'மாவட்டச் செயலாளர்கள் தினமும் 10 பேரை புதிதாக கட்சிக்குள் சேர்க்கவேண்டும். என்னிடம் கையெழுத்து வாங்க வேண்டும்' என்றெல்லாம் மருத்துவர் ராமதாஸ் பேசிவருகிறார். இதெல்லாம் பேசுவதற்கு நன்றாக இருக்கும். ஆனால், நடைமுறைக்கு உதவாது. சொந்தக் கட்சி நிர்வாகிகளையே, 'நீங்கள் விலைபோய்விட்டீர்கள்' என்றெல்லாம் விமர்சித்துவந்தால், இருக்கின்ற கட்சிக்காரர்களும்கூட ஆர்வம் இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு.

Also Read: தென்காசி: பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட காவலர்! - வைரலாகும் வீடியோ

மத்தியிலோ, மாநிலத்திலோ எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே கட்சியை வளர்த்தெடுக்க முடியும். பா.ம.க-வைப் பொறுத்தவரை இன்றைக்கும் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்டு பெரியளவில் வெற்றிபெறும் நிலையில் இல்லை. இந்த சூழ்நிலையில், சொந்தக் கட்சிக்காரர்களையே குற்றம்சாட்டிப் பேசிவருவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஏனெனில், பா.ம.க-வினர் தங்களால் முடிந்தளவு அரசியல் பணியைச் செய்துவருகிறார்கள்தான். இதற்குமேல் அவர்களாலும் செயல்பட முடியாது.

ராமதாஸ் - அன்புமணி

எனவே, வன்னியர் என்ற சாதி வட்டத்தைத்தாண்டி வெளியே கட்சியை விரிவுபடுத்தினால் மட்டுமே பா.ம.க-வின் வளர்ச்சி சாத்தியம். அதை விட்டுவிட்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு மறுபடியும் மறுபடியும் தொண்டர்களையே நோகடித்துக்கொண்டிருந்தால், அது அவர்களுக்கு கூடுதல் சலிப்பைத்தான் ஏற்படுத்தும்.கட்சிக்காக வேலை செய்யும் உற்சாகத்தையே இழந்துவிடுவார்கள். எனவே, தொண்டர்களுக்கு சுதந்திரம் கொடுத்து அதேசமயம் கண்டிக்க வேண்டிய நேரத்தில் மட்டுமே கண்டிப்பும் செய்யவேண்டும். அதுமட்டும்தான் ஆக்கப்பூர்வமான செயல்பாடாக இருக்கும்!'' என்றார் அழுத்தமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/political-critics-share-their-views-on-pmk-leader-ramadoss-attitude

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக