தென்காசி மாவட்டம், புளியரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கு அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடந்தது. அரசியல் சார்பாக இந்தத் தேர்தல் நடப்பதில்லை என்ற போதிலும், அதிமுக ஆதரவாளரான சரவணன் என்பவரும், திமுக ஆதரவாளரான குருமூர்த்தி என்பவரும் வேட்பாளர்களாகக் களமிறங்கியதால் இந்தத் தேர்தலில் அரசியல் சாயம் ஏற்பட்டது.
Also Read: ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்... கழகத்துக்குள் நடந்த களேபரங்கள்!
மொத்தம் உள்ள 12 வார்டுகளில் தேர்வான கவுன்சிலர்கள் சேர்ந்து துணைத் தலைவரைத் தேர்வு செய்வார்கள். இதில், அ.தி.மு.க ஆதரவாளரான சரவணனுக்கு ஆதரவாக எட்டு கவுன்சிலர்கள் இருந்ததால் அவரது வெற்றி உறுதியானதாகக் கருதப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சி ஆதரவாளரான குருமூர்த்தி தன் ஆதரவாளர்களுடன் மறைமுகத் தேர்தல் நடக்க இருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
மறைமுகத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க ஆதரவாளரான சரவணன் மனுதாக்கல் செய்தபோது குருமூர்த்தி தரப்பினர் அதைத் தடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், வாக்களிப்பதற்காக அலுவலகத்துக்குள் நுழைய முயன்றவர்களை எதிர்த்தரப்பினர் மறித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பெண் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பஞ்சாயத்து அலுவலகத்துக்குள் செல்ல முயன்றபோது அவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்தனர். தள்ளுமுள்ளு நடந்தபோது பெண் கவுன்சிலர் சகாயமேரி என்பவரின் சேலையை பிடித்து இழுத்தனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த களேபரம் காரணமாக துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதைக் கண்டித்து தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் கடையநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான கிருஷ்ணமுரளி தலைமையில் சாலை மறியல் நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவியது. போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர்.
இத்தனை களேபரங்கள் நடந்த நிலையில், பெண் கவுன்சிலர்களான சகாயமேரி மற்றும் கவிதா ஆகியோர் புளியரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் சேலை இழுத்ததாக சகாயமேரி அளித்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், கவிதா புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அ.தி.மு.க-வினர் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பெண் கவுன்சிலர் சகாயமேரி, “துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற என்னை அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் சாலையிலேயே தடுத்து நிறுத்தினாங்க. அங்கிருந்த பலரும் தி.மு.க-வினரால் வெளியூர்களில் இருந்து அழைத்து வந்தவர்களாக இருந்தாங்க. நானும் என்னோடு வந்தவங்களும் வேகமாக உள்ளே சென்றபோது தடுத்தவர்கள், அத்துமீறி என் சேலையைப் பிடித்து இழுத்து உருவினாங்க.
சாலையில் எனக்கு நேர்ந்த அவமானத்தால் நான் நிலைகுலைந்து கதறினேன். போலீஸார் வந்த பிறகே அந்த கும்பல் சேலையைக் கொடுத்தது. நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் எனக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பாக போலீஸாரிடம் புகார் கொடுத்தும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை” என்று வேதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரான ஆய்குடி செல்லப்பன் பேசுகையில், ”மொத்தம் உள்ள 12 உறுப்பினர்களில் பெரும்பான்மை எங்களுக்கு இருந்ததால் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று தி.மு.க-வினர் திட்டமிட்டிருக்காங்க. அதனால் எங்க தரப்பு வேட்பாளர் சரவணன் கொடுத்த மனுவைப் பிடுங்கி எதிர்த்தரப்பைச் சேர்ந்த குருமூர்த்தி கிழித்து வீசியுள்ளார்.
ஆனாலும் எங்கள் தரப்பினர் தொடர்ந்து தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் இருந்ததால் அவர்களை விரட்டும் நோக்கத்தில் பெண்களின் சேலையை உருவி அத்துமீறி நடந்திருக்காங்க. இது தொடர்பாக கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து குற்றம் செய்தவர்களைக் கைது செய்திருக்க வேண்டிய போலீஸார் கைகட்டி நிற்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
புளியரை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க ஆதரவாளரான குருமூர்த்தியிடம் இது பற்றி கேட்டதற்கு, “தேர்தல் நடந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். ஆனால் அவர்கள் ஏதோ திட்டத்துடன் வந்து தேர்தல் நடக்க விடாமல் செய்துவிட்டார்கள். நாங்கள் யாரையும் தடுக்கவோ சேலையை இழுக்கவோ இல்லை” என்று முடித்துக் கொண்டார்.
நடந்த சம்பவம், குறித்தும் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் காவல்துறையினரிடம் கேட்டதற்கு, “புளியரை துணைத் தலைவர் தேர்தலில் நடந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்குக் கிடைத்துள்ள வீடியோ மட்டுமலாமல் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்தும் பெண் கவுன்சிலர்கள் தெரிவித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 143 (சட்ட விரோதமாகக் கூடுதல்), 123 (பி) (சதித் திட்டம் தீட்டுதல்), 341 (சட்ட விரோதமாகத் தடுத்து நிறுத்துதல்), 201 (ஆவணங்களை அழித்தல்), 384 (அச்சுறுத்துதல்) 506(2) (கொலை முயற்சி), ஆகிய பிரிவுகளிலும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்.
இது தவிர, பஞ்சாயத்து சட்டத்தின் 71 பிரிவு ஆகியவற்றின் கீழ் குருமூர்த்தி என்பவர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி வருவதால் விரைவில் கைது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் இருக்கும்” என்று தெரிவித்தார்கள்.
source https://www.vikatan.com/news/general-news/no-action-is-taken-for-the-misbehavior-of-dmk-party-men-in-tenkasi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக