Ad

புதன், 10 நவம்பர், 2021

திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை! - நீடாமங்கலத்தில் பதற்றம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் நடேச தமிழார்வன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை சம்ப்வம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச தமிழார்வன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் பகுதியின் ஒன்றிய செயலாளராகவும், திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார். வீட்டு வசதி வாரிய உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவரின் மகன் ஸ்டாலின் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நடேச தமிழார்வான், நேற்று மாலை நீடாமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு தனது காரில் வந்து இறங்கியிருக்கிறார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள், அரிவாளால், நடேச தமிழார்வனை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பியோடிக்கிறார்கள். நீடாமங்கலம் பகுதியில் மிகவும் பிரபலமான அரசியல் பிரமுகராக வலம் வந்த நடேச தமிழார்வான் கொலை செய்யப்பட்டது, இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றமான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நடேச தமிழார்வானை படுகொலை செய்த கொலையாளிகளையும் இக்கொலைக்கு தூண்டுதலாக இருந்நவர்களையும் உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தினார்கள்.

Also Read: மயிலாடுதுறை: பெருமாள் கோயில் அறங்காவலர் நீரில் மூழ்கடித்துக் கொலை! -இராமனுஜர் பீட பட்டர் கைது

நடேச தமிழார்வானின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். முன் விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.



source https://www.vikatan.com/news/crime/communist-party-cadre-murdered-by-un-known-gang-in-thiruvarur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக