கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல் (27). இவர் சேலம் சங்கர் நகர், பள்ளப்பட்டி என பல இடங்களில் ஆத்தூரைச் சேர்ந்த தனது காதலரான பிரதாப் என்பவருடன் சேர்ந்து மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் சேலம் குமாரசாமிப்பட்டி மேற்கு தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 15-ம் தேதி தேஜ்மண்டல் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, சூட்கேஸில் அடைக்கப்பட்டு வீட்டிலிருந்த பரணில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தேஜ்மண்டலின் வீட்டருகே தங்கியிருந்து, அவருடைய மசாஜ் சென்டரில் வேலைபார்த்து வந்த 3 இளம்பெண்கள் தான் இந்த கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையில் தெரியவந்தது.
அதனையடுத்து அஸ்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து களத்தில் இறங்கினர். விசாரணையில் கொலையாளிகளான 3 இளம்பெண்களும் வங்கதேச நாட்டுக்கு தப்பிச் சென்றது அவர்களுடைய செல்ஃபோன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல, உயிரிழந்த தேஜ்மண்டலின் செல்ஃபோன் ஹிஸ்டரியை ஆய்வு செய்தபோது, சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் 4 பேர் தேஜ்மண்டலுடன் தொடர்பில் இருந்துவந்தது தெரிய வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட 4 போலீஸாருக்கும், உயிரிழந்த தேஜ்மண்டலுக்கு என்ன தொடர்பு என சேலம் வடக்கு சரக துணை கமிஷனர் மாடசாமி விசாரணையில் இறங்க, அதிரவைக்கும் வகையில் பல தகவல்கள் வெளிவந்திருக்கிறது.
Also Read: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; சூட்கேஸில் கிடந்த பிணம்; பெண் கொலையில் நடந்ததென்ன?
அதாவது கொலை செய்யப்பட்ட தேஜ் மண்டல் சேலம் மாநகரில் ஸ்பா என்ற பெயரில் பெரும்பாலான இடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளாராம். அஸ்தம்பட்டி பகுதியில் இருந்த ஸ்பா சென்டர்களை போலீஸார் சோதனை செய்தபோது, தேஜ்மண்டலிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவரை வழக்கில் சேர்க்காமல் போலீஸார் விட்டிருக்கின்றனர். இதற்கு கைமாறாக பல ஆயிரங்களை லஞ்சமாக பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இதுவிசாரணையில் தெரியவர, தேஜ்மண்டலுடன் தொடர்பில் இருந்ததோடு, சட்டவிரோதச் செயலுக்கு துணை போனதாக அஸ்தம்பட்டியில் அப்போது பணியில் இருந்த எஸ்.ஐ ஆனந்தகுமார், எஸ்.எஸ்.ஐ சேகர், கலைச்செல்வன் மற்றும் ஏட்டு மணிகண்டன் ஆகிய 4 பேரையும் சேலம் மாநகர கமிஷனர் நஜ்முல்கோடா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில், சேலம் மாவட்டத்திலுள்ள போலீஸார் எந்தெந்த விஷயங்களுக்கு எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என சேலம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ் பட்டியல் வெளியிட்டு அதிரடித்திருந்தார். இப்படியான நிலையில், சேலம் மாநகர போலீஸ் கமிஷனரும் தவறு செய்த காவலர்கள் 4 பேரை பாரபட்சமின்றி சஸ்பெண்ட் செய்திருப்பது பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/crime/polices-suspended-for-allowing-prostitution-business-in-salem
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக