Ad

ஞாயிறு, 7 நவம்பர், 2021

முல்லைப் பெரியாறு: பேபி அணையைப் பலப்படுத்த கேரள அரசு பச்சை கொடி... புதிய அணை திட்டம் கைவிடப்படுமா?!

முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கேரளா தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, அணையைப் பலப்படுத்தும் வரை 152 அடி நீர்மட்டம் கொண்ட அணையில் 136 அடி வரை தேக்கிக் கொள்ள 1979-இல் தமிழக அரசு ஒப்புக்கொண்டது.

அணை பலப்படுத்தப்பட்ட பிறகும் பல்வேறு காரணங்களைக் கூறி 152 அடி உயர்த்த விடாமல் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டுவந்தது. இதையடுத்து பெரும் சட்டபோராட்டத்திற்கு பிறகு 2014-இல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை நிலை நிறுத்திக்கொள்ளலாம் எனவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அணை

ஆனால் பேபி அணையை பலப்படுத்தவும் பல்வேறு காரணங்களை கூறி கேரள அரசு தடையாக இருந்து வந்தது. குறிப்பாக பேபி அணைக்கு கீழே உள்ள மரங்களை வெட்டினால் பலப்படுத்தும் பணியைத் தொடங்க முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கும் கேரள அரசு தடையாக இருந்துவந்த நிலையில் பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமலும் 125 ஆண்டுகால நடைமுறைகளை மீறி கேரள நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், கேரள அரசின் முறையற்ற நடவடிக்கைக்கு துணைபோனாதாகக் கூறி தமிழக அரசை கண்டித்தும் அதிமுக, பாஜக, நாம் தமிழர், விவசாய சங்கங்கள் பல்வேறு தொடர் போராட்டங்கள் அறிவித்திருந்தனர்.

அன்வர் பாலசிங்கம்

இதற்கிடையே தான் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்பட 4 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், முல்லைப்பெரியாறு அணையில் கேரள அரசியல்வாதிகள், அதிகாரிகள் நடைமுறையை மீறி தண்ணீர் திறந்தது குறித்து உரிய விளக்கம் அளிக்காமல், `தமிழகத்தின் அனுமதியோடு தான் தண்ணீர் திறக்கப்பட்டது’ எனக் கூறியது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Also Read: முல்லை பெரியாறு விவகாரம்: நீதிகேட்டு நடைப்பயணம் செல்லவிருக்கும் 5 மாவட்ட விவசாயிகள்!

இதுகுறித்து ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் கேட்டோம். ''தமிழக நீர்வளத்துறை அமைச்சர் பக்கத்து மாநிலத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பதில் தவறு இல்லை. அவர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து உரிய விளக்கம் அளிக்காதது ஏற்புடையதாக இல்லை. தேனி மாவட்ட ஆட்சியருடன் விவாதித்திருக்க வேண்டும். இடுக்கி மாவட்ட ஆட்சியரை அழைத்து எதனடிப்படையில் இங்கு வந்தீர்கள் எனக் கேட்டிருக்க வேண்டும். அணைக்கான அனைத்து உரிமையும் தமிழகத்துக்கு தான் உள்ளது என்றால், அவர்கள் எப்படி எந்த தகவலும் இன்றி அணைக்குள் நுழைய முடியும். விவசாயிகள், எதிர்கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளதால் அதனை முடக்குவதற்காக சம்பிரதாயமான ஆய்வையே அமைச்சர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர்கள்

பேபி அணையை பலப்படுத்துவதற்கு தடையாக இருக்கக் கூடிய 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு அனுமதியளித்தது. ஆனால் அந்தப் பகுதி பெரியாறு புலிகள் காப்பக பகுதிக்குள் வருகிறது. பிறகு எப்படி இதற்கு கேரள அரசு அனுமதியளிக்க முடியும்.

இந்த அனுமதியைத் தொடர்ந்து பேபி அணையைப் பலப்படுத்தும் பணி நடந்து முடிந்தால் முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கலாம். அவ்வாறு தேக்கினால், ஆனவச்சால் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேக்கடி ஏரிக்கான கார் பார்க்கிங் மூழ்கும், மேலும் நீர்பிடிப்பு பகுதியைச் சுற்றி ஆக்கிமிரத்து கட்டப்பட்டுள்ள 85 ரிசார்ட்களும் மூழ்கும். இதை மலையாள அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பெரும் பணமுதலாளிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கேரள அரசு புதிய அணை இடம் தேர்வு செய்து அணை கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதற்கு திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு

இந்தச்சூழலில் தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேபி அணைக்கு கீழே உள்ள மரங்களை வெட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அவருக்கு எதிரான குரல்கள் கேரளாவில் வலுவாக ஒலிக்கும். இது பினராயி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் மரங்களை வெட்டவிடமாட்டார்கள்.

இதே பினராயி தான் கடந்த 25 ஆம் தேதி சட்டமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டப்படும். அதுவே நமது இலக்கு என அறிவித்துள்ளார்.

பேபி அணைக்கு கீழே உள்ள மரங்களை வெட்டி அணையைப் பலப்படுத்தினால் கேரள அரசு புதிய அணை கட்டத் தேவையில்லை. ஆகவே கேரள முதல்வர் ரூ.1500 கோடியில் புதிய அணை கட்டும் திட்டம் இல்லை என்ற அறிவிப்பையும் வெளியிட வேண்டும்'' என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/government-of-kerala-green-flag-to-strengthen-baby-dam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக