Ad

புதன், 10 நவம்பர், 2021

சசிகலா, தினகரன் அடுக்கும் விவசாயிகளின் பிரச்னைகள்... கைகொடுக்குமா டெல்டா பாலிடிக்ஸ்?!

டெல்டா மாவட்டங்களில் தங்களது அரசியல் செல்வாக்கை வளர்த்தெடுக்க சசிகலாவும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து குரல் கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள். அதிமுக-வை மீட்டெடுப்பது குறித்து மட்டுமே இதுவரையிலும் பேசி வந்த சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, இப்பகுதி விவசாயிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, நெல் கொள்முதலில் ஏற்படும் தாமதம் குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சசிகலா

``டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை பணிகள் நடந்துவரும் நிலையில், பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான நெல்மூட்டைகள் தேக்கமடைந்து உள்ளதாகவும், தொடர் மழையால் நெல் மணிகள் முளைத்துவிட்டதால், கொள்முதல் நிலைய அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் கொள்முதல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் சசிகலா.

Also Read: `பொதுச்செயலாளார் சின்னம்மா’ - அ.தி.மு.க கொடியுடன் அறிக்கை வெளியிட்ட சசிகலா தரப்பு!

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பயிர் இன்சூரன்ஷூக்கான காலக்கெடுவுக்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு அதனை கண்டுகொள்ளாமல் நவம்பர் 15-ம் தேதிக்குள் பயிர்க்காப்பீட்டுக்கு பிரிமியம் செலுத்த வேண்டும் நிர்ப்பந்தம் செய்வது சரியானதல்ல. குறுவை நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிகள், பருவமழை பாதிப்பு உள்ளிட்டவற்றால் காவிரி டெல்டா உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நடவுப்பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் நவம்பர் 15-ம் தேதிக்குள் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனைப் புரிந்துகொண்டு பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை இந்த மாத கடைசிவரை நீட்டிப்பதுடன், அதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவேண்டும். இதற்கு மாறாக, உடனடியாக பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகளை தி.மு.க அரசு நிர்பந்திப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல” என தெரிவித்திருக்கிறார்.

சசிகலாவும், டிடிவி தினகரனும் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து தீவிரமாக பேச தொடங்கியிருப்பது, டெல்டா மாவட்டங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து பேசும் அரசியல் பார்வையாளர்கள், ``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் அரசியலில் காலூண்ற விவசாயிகளின் மனதில் இடம் பிடிப்பது மிகவும் அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் பிரச்னைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார். இதனால் விவசாயிகளின் மத்தியில் ஸ்டாலினின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. இதனால் தான் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் திமுக அதிக வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றது.

டிடிவி தினகரன்

நாம் தமிழர் கட்சி கனிசமான எண்ணிக்கையில் வாக்குகளை வாங்கவும், சீமானின் விவசாயிகள் ஆதரவு வாய்ஸ் பெரிதும் கைகொடுத்தது. சசிகலாவும், டிடிவி தினகரனும் எந்நேரமும் அதிமுக-வை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருப்பதால் எந்த பலனும் இல்லை. விவசாயிகளின் பிரச்னைகளை கையில் எடுத்து, டெல்டா பாலிடிக்ஸில் புதிய ரூட்டில் பயணிப்பது நிச்சயம் இவர்களுக்கு கை கொடுக்கும்’’ என்கிறார்கள்.

Also Read: ``சசிகலா பாதை வேறு...என் பாதை வேறு!'' - டி.டி.வி.தினகரன்

ஆனால் இதுகுறித்து பேசும் அமமுக-வினர் ‘’சசிகலாவும் தினகரனும் எந்த ஒரு உள்நோக்கமும் அரசியல் எதிர்பார்ப்பும் இல்லாமல்தான், விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். இவர்கள் டெல்டாவின் மண்ணின் மைந்தர்கள். விவசாயிகளுக்காக பேசுவது என்பது இயல்பானது. இதனை அரசியலோடு முடிச்சிப் போட்டு பேசுவது சரியல்ல’’ என்கிறார்கள்.

விவசாயிகள் தரப்பில் இதுகுறித்து பேசியபோது, ‘’எங்களுக்காக உண்மையான அக்கறையில பேசுறாங்களா, இல்லை, அரசியல் ஆதாயத்துக்காக பேசுறாங்களாங்கறது போகபோக தான் தெரியும். ஆனால் வெறும் பேச்சை மட்டும் நம்பியெல்லாம் யாரு பின்னாடியும் விவசாயிகள் போயிடமாட்டோம்’’ என்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/sasikala-ttv-dinakarans-delta-politics-will-it-helps

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக