முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் அருகே இலங்கை தமிழர்களுக்காக புதிய வீடுகள் கட்டப்பட்டு வரும் இடத்தைப் பார்வையிட்டார். இதையடுத்து வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்த மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழக பாஜக தலைவர் சுயலாபத்திற்காக, மத்திய அரசு மூலம் பதவிகளை எதிர்பார்த்து, இப்போது தமிழக அரசு மீது குற்றம் சாட்டி அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் எனக் கூறி வருகிறார். புலி வருது புலி வருது என்று என்று கூறி பூனை கூட வராது. தமிழ்நாட்டு மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் தமிழக மக்களிடையே யாராலும் பிரிவினை ஏற்படுத்த முடியாது.
பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை முதலில் தனது முதுகை பார்க்க வேண்டும். மத்திய அரசு கூறிய எந்தத் திட்டமும் தற்போது வரை இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்கு சென்றடையவில்லை. அதேபோல் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தைக் கூட மீண்டும் பிடுங்கியது மத்திய அரசு. அதேபோல் ஒருவர் ஊழல் செய்திருந்தால் அவரை தண்டிப்பதற்கு நீதிமன்றம் உள்ளது. ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும்.
தமிழக முதல்வர் தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வு ரத்து செய்யுங்கள் என்று சொல்லவில்லை. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவ-மாணவியரின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். அதேபோல் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு தமிழகத்தில் எத்தனை நபர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். தற்போது கூட மதுரை மற்றும் தமிழகம் முழுவதும் மத்திய அரசு பல பணிகளுக்கு பணியாளர்களை அமர்த்தி உள்ளது. அதில் தமிழகத்தில் இருந்து சுமார் 15 நபர்கள் மட்டுமே பணிக்கு சென்றுள்ளனர்.
தமிழக அரசைக் குறைகூறும் அண்ணாமலை முதலில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கு சேர்ந்து விட்டதா அதேபோல் தேர்தல் சமயத்தில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா, தமிழ்நாட்டில் மக்கள் எத்தனை பேர் மத்திய அரசுப் பணிக்கு சென்றுள்ளனர் என்பதையும் பார்க்க வேண்டும். ஆகவே சுயநலத்திற்காகவும் பதவிக்காகவும் தமிழ்நாட்டு முதல்வரையும் ஆட்சியையும் குறை கூறும் அண்ணாமலை முதலில் அவரின் முதுகை பார்க்கட்டும்” என்றார்.
source https://www.vikatan.com/news/politics/let-bjp-leader-annamalai-look-at-his-back-first-says-minister-periyasamy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக