Ad

வெள்ளி, 3 ஜூன், 2022

விழுப்புரம்: குடும்ப தகராறு; இளம்பெண் உயிரிழப்பு; நீதி விசாரணை கோரும் உறவினர்கள்! - நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள வைரபுரத்தை சேர்ந்த அசோக் என்பவருக்கும், பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்த ஷர்மிளா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி 2 வருடங்களுக்கு மேல் ஆகியும், இந்த தம்பதிக்கு குழந்தை இல்லையாம். இதனிடையே கணவன் - மனைவிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி குடும்ப பிரச்னையின் காரணமாக ஷர்மிளா அவரது தாய் வீடு உள்ள பெரமண்டூருக்கு சென்றுள்ளார். 26-ம் தேதி மாலை ஷர்மிளா வீட்டிற்கு சென்ற அவரின் கணவர் அசோக், ஷர்மிளாவிடம் சமரசம் பேசி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

உயிரிழந்த ஷர்மிளா

அப்போது கணவன் - மனைவி இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது, அசோக் வெளியில் சென்ற சமயத்தில்... அன்று இரவே ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாகவும், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்படுவதாகவும் ஷர்மிளாவின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஷர்மிளாவின் குடும்பத்தினர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக திருமணமான இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், "திருமணமாகி குழந்தை இல்லாததாலும், வரதட்சணை கேட்டும் அசோக், அவரின் குடும்பத்தார் எனது பெண்ணை (ஷர்மிளா) அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். குடும்ப பிரச்னையால் அண்மையில் என் வீட்டிற்கு வந்திருந்த எனது பெண்ணை, சமரசம் பேசி அழைத்து செல்ல வந்த அசோக், பெரமண்டூர் கிராமத்திலிருந்தே அடித்து துன்புறுத்தி அழைத்து சென்றுள்ளார். என்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை. அசோக், அவரின் குடும்பத்தினர் தான் அடித்து கொலை செய்திருக்க வேண்டும். எனவே, உரிய நீதி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று 27-ம் தேதியே ஷர்மிளாவின் தந்தை வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

புகாரை பெற்ற காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் இருந்து முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறாய்வுக்கு பின்னர், உடலை பெற்ற குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உரிய முறையில் அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், "உயிரிழந்த பெண் தாக்கப்பட்டிருக்கிறார். ஆகவே, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். அசோக் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... உயிரிழந்த ஷர்மிளாவின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து விழுப்புரம் எஸ்.பி அலுவலகம் எதிரே நேற்று முந்தினம் (02.06.2022) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, புகார் மனு அளித்துள்ளனர். இதனால் விழுப்புரம் பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முந்தினம் மாலையே விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இந்த வழக்கின் நிலை குறித்து வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு பேசினோம். "174/3 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏ.எஸ்.பி சார் விசாரித்து வருகிறார். தனிப்படையும் அமைக்கப்பட்டு அசோக் என்பவரை தேடி வருகிறோம். இன்னும் ஓரிரு தினங்களில் பிடித்துவிடுவோம். உடற்கூறாய்வு முடிவு வரவேண்டியுள்ளது. அந்த முடிவின் அடிப்படையில், வழக்கின் பிரிவு மாற்றப்படலாம்" என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/relatives-protest-in-front-of-villupuram-sp-office-claiming-that-the-death-of-a-women-is-suspected

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக