Ad

சனி, 4 ஜூன், 2022

தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்? - குற்றம்சாட்டும் உறவினர்கள்... நடந்தது என்ன?!

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி (30). கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவருக்குச் சின்ன போரூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடுமையான வயிற்று வலியால் அவதி படத்தொடங்கினார் வினோதினி. மேலும், வினோதினியின் வயிறும் வீங்க ஆரம்பித்தது.

வினோதினி

தொடர் வயிற்று வலியின் காரணமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச்சென்றிருக்கிறார். அங்கு வினோதினியை பரிசோதனைசெய்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் சிறுநீர், மலம் கலந்துள்ளதாகவும்... அதனால் குடல் அழுகத் தொடங்கியிருப்பதாக கூறியதாக அவர்கள் உறவினர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காகச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வினோதினி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்படு வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாகவே வினோதினி உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், அவரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து அங்கிருந்த மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``அவர் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டார். பிரேத பரிசோதனை முடிவுகள் அடிப்படையில்தான் அவரின் இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்று கூறினார்கள்.

வினோதினி மரணம்

இதே சம்பவத்தைப் போல, கடந்த சிலதினங்களுக்கு முன்பாக, சேலத்தைச் சேர்ந்த சங்கீதா(28) என்பவருக்கு, அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு அவருக்குத் தீவிர வயிற்றுவலி ஏற்பட்டு மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு அடுத்ததாகவும் மூன்றாவதாக ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில், சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். தவறான சிகிச்சை வழங்கியதாக அந்த தனியார் மருத்துவமனைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/a-woman-died-in-a-government-hospital-and-her-relatives-were-accused-of-wrong-treatment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக