Ad

செவ்வாய், 14 டிசம்பர், 2021

`முதல்வர்கள் பட்டியல்... நீ, என்றும் எடுபிடி எடுபிடி எடுபிடி!’ -நிர்வாகிகள் கூட்டத்தில் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ், அண்மை மாதங்களாக மாவட்டம் தோறும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பாக பேசி வருகிறார். 'திண்ணை பிரசாரம், 60 தொகுதிகளில் வெற்றி' என்பதை மையப்படுத்தி பேசிவரும் இவர், நேற்று (14.12.2021) விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பாமக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் தலைமை தாங்கி பேசினார்.

Also Read: கவுன்சிலர் பதவிக்கு நிற்கக் கூட ஆளில்லை, நாம் ஏன் வளரவில்லை? -ஆலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் ஆதங்கம்!

அப்போது அவர், "சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 5000 பேர் கூடினார்கள், எல்லாம் விடலைப் பசங்க தான். அந்த கூட்டத்தை விழுப்புரம் மாவட்டம் மிஞ்சிவிடும் என எதிர்பார்த்தேன். ஆனால் இதுவரை நடந்ததிலேயே மிகவும் குறைவான கூட்டம் இங்கு தான். உங்களிடையே பேசுவதில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. வன்னிய மக்களுக்கு நான் வைத்துள்ள பெயர், 'ஊமை ஜனங்கள்'. 42 ஆண்டு காலமாக இந்த ஊமை ஜனங்களுக்காக நான் பேசி வருகிறேன். ஆனால், இந்த ஊமை ஜனங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

கூட்ட அரங்கு

'பெரும்பான்மைகள் ஆளவேண்டும், சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்.' என்பதை நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.

ஆனால், தமிழகத்தின் நிலைமை என்ன? தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலே ஒரே ஒரு கலெக்டர் கூட வன்னியர் கிடையாது. 91 செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை, 150 இயக்குநர்களில்... ஐ.பி.எஸ் இல்... தலா 5 பேர் மட்டுமே வன்னியர்கள். உங்களுக்காக போராடி வரும் இந்த ராமதாஸுக்கு எவ்வளவு மனசு நோகும். கால், கழுத்து, இடுப்பு வலியோடு இந்த 83 வயதிலேயே ஊமை ஜனங்களான உங்களை நான் பார்க்க வந்ததின் நோக்கம்? 'நமக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை. அதிகாரத்தில் இல்லை' அதனால் தான் உங்களை பார்த்து நிலைமையை எடுத்துக் கூறி பேசுவதற்கு வந்துள்ளேன்." என்றவர், இதுவரை விழுப்புரம் நகராட்சியில் தலைவராக இருந்தவர்களின் பெயர்களை வாசித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரே ஒரு முறை... பாஸ்கர் என்ற வன்னியர் மட்டும் விழுப்புரம் நகரத்தில் சேர்மனாக இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1952ல் நடைபெற்ற தேர்தலில் 40 இடங்களில் வன்னியர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். போதிய அளவிலான படிப்பறிவில்லாத மக்கள் இருந்த காலம்; ரேடியோ, டி.வி, செல்போன் போன்ற வசதிகள் இல்லாத காலம்; அந்த காலத்திலேயே 40 எம்.எல்.ஏ-க்கள் வன்னியர்கள் இருந்தார்கள். ஆனால், இந்தக் காலத்தில் நாம் தனியாக தேர்தலில் நின்றபோது ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை பேர் வெற்றி பெற்றோம்..!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அந்த காலத்தில் இருந்த வன்னியர்களின் உணர்வு, வீரம், மானம் எங்கே போனது. சத்திரியர்களுக்கே உண்டான குணங்கள் எல்லாம் எங்கே போனது. இது எல்லாம் விலைக்கு வாங்கக் கூடியதா..! இல்லை உடம்பிலும், குணத்திலும் ஊறியது." என்று பேசிய அவர், தமிழ்நாட்டில் இதுவரை முதலமைச்சராக இருந்தவர்களின் பெயர்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த முதலமைச்சர்கள் பட்டியலிலே வன்னியனாகிய நீ... என்றும் எடுபிடி! எடுபிடி! எடுபிடி!. அந்த காலத்திலிருந்து வன்னியனாகிய நீ... எடுபிடி தானே.

இந்த ராமதாஸ் வந்த பின்னர் தானே இப்படி வெள்ளையும் சொள்ளையுமாக சட்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த 42 ஆண்டுகளில், தண்ணீர் விட்டா கட்சியை வளர்த்தோம்..! கண்ணீர் விட்டே வளர்த்தோம். இது அந்த சர்வேஸ்வரனுக்கும் தெரியும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் நாம் ஒரு கூட்டணியில் இருந்தோம். அவர்களிடம் எங்களுக்கு 'தனி இட ஒதுக்கீடு வேண்டும்' என கேட்டபோது, "ஐய்யய்யோ... ஐய்யய்யோ... அதுல கைய வைக்க முடியாது" என்று அன்று ஆண்டவர்கள் சொன்னார்கள். 'வன்னியர்கள் சேத்துல கை வைத்தால்தான், நீங்க சோத்துல கை வைக்க முடியும்' என்று அந்த காலத்தில் நாம் சொல்வோம். அதே நிலைமை தான் இப்போதும். 'உங்களால் இட ஒதுக்கீட்டில் கைய வைக்க முடியாது என்றால்... நாங்கள் கூட்டணியில் இல்லை, தனியாக நிற்கிறோம். ஆனால் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்' என்றோம். "ராமதாஸ் சும்மாதான் சொல்கிறாரா... உண்மையாகவே சொல்கிறாரா..." என பயந்து போய்விட்டார்கள். நான் சொன்னேன், 'எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரவில்லை என்றால், உங்களுடன் கூட்டணி இல்லை, கூட்டம் இல்லை, ஊறுகாயும் இல்லை, பொரியலும் இல்லை, ரசமும் இல்லை' என்று. அப்போதுதான் நம்பினார்கள்.

சி.வி.சண்முகம் - எடப்பாடி பழனிச்சாமி

Also Read: `முதலில் பா.ஜ.க; இப்போது பா.ம.க' - தொடரும் சி.வி.சண்முகத்தின் கூட்டணி சர்ச்சை

அதற்கு பின்னர்தான் 10.5% இட ஒதுக்கீடு மட்டுமே தர முடியும் என்றனர். அதற்கும் நான் ஒப்புக் கொண்டேன். அதன் பின்னர் எம்.எல்.ஏ சீட் பற்றி பேசினார்கள். 5, 7, 8, 10, 12, 15 என தொடங்கி இறுதியாக 23... இடம் கொடுத்தார்கள். நாளை தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது என்றால், இன்றைய தினம் 10.5% இட ஒதுக்கீட்டை சட்டமாக கொண்டு வந்தார்கள். சி.வி.சண்முகம் அன்று இல்லை என்று சொன்னால்... அது சட்டமாக மாறியிருக்காது. அவரின் முயற்சி இல்லை என்று சொன்னால் நமக்கு இட ஒதுக்கீடே கிடைத்திருக்காது. ஆனால், அவர் மீண்டும் சட்டமன்றத்திற்கு போக கூடாது என இந்த விழுப்புரம் மக்கள் முடிவு பண்ணிவிட்டார்கள், அவரை தோற்கடித்து விட்டார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தில் 12 இடம் காலியாக இருந்த போது, இந்த ஊமை ஜனங்களுக்காக வன்னியர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக அன்று கெஞ்சினேன். ஆனால், ஆட்சியில் இருந்தவர்களுக்கு 1 இடம் தருவதற்கும் மனம் இல்லை. உணர்வுள்ள வன்னியர்கள்... மாற்று கட்சியிலேயே இருக்கக்கூடாது. ஒட்டுமொத்த வன்னியர்களும் என் பின்னாலே வந்தால் இவை அனைத்தும் மாறும். மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் கூட தேர்தல் நேரத்தில் ஒன்றாக பாமக-விற்கு வாக்களிக்க வேண்டும். மக்களின் நலனுக்காக 212 நாட்களில் 436 அறிக்கைகளை விடுத்துள்ளேன். அதற்கெல்லாம் இந்த ராமதாஸ் தேவைப்படுகிறான். இந்த ஊமை ஜனங்களுக்காக நான் இறுதிவரை போராடுவேன், பாடுபடுவேன். கோலூன்றி நடந்தாலும் இந்த மக்களுக்காக நான் பாடுபடுவேன்.

டாக்டர் ராமதாஸ்

ஒட்டு மொத்த தமிழக சமுதாயமே... ஒருமுறை பாமக-விற்கு வாக்களியுங்கள். தமிழ்நாட்டை உங்களில் ஒருவர் ஆளட்டும். அதற்கு பொருத்தமான வரை நான் கொடுத்திருக்கிறேன், அவர்தான் அன்புமணி ராமதாஸ். தேர்தல் நேரத்தில் விளையாடுகின்ற பணத்தினால் தான் நாம் பாழாகி போனோம். 'காசேதான் கடவுளடா...' என்பது கடவுளுக்கே தெரியுமாம். இனி இந்த காசுக்கு வன்னியர்கள் மயங்க கூடாது. முக்கியமாக பொறுப்பாளர்கள் மயங்கிவிட கூடாது. நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் நாம் போட்டியிட போகிறோம். சிந்தாமல் சிதறாமல் நாம் அனைத்து வாக்குகளையும் பெற வேண்டும். அங்கு காசுக்கு வேலை இல்லை. '10.5% இட ஒதுக்கீடு செல்லாது' என தவறான ஒரு தீர்ப்பை கூறினார்கள். நாம் அதற்கு ஸ்டே கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நமக்கு நிச்சயம் ஸ்டே கிடைக்கும். 10.5% இட ஒதுக்கீட்டை நாம் பெற்றே தீருவோம். நான் சின்ன வயதிலே வீரமாக பேசுவேன், அதுபோல இப்போது பேச முடியவில்லை. நம்மிடம் சக்தி இருக்கிறது, ஆனால் பணம்தான் இல்லை. அது கடவுளுக்கே தெரியுமாம். இனி வரும் காலம் நல்ல காலமாக இருக்கட்டும். இனி ஒரு விதி செய்வோம், அதை எந்த நாளும் காப்போம். அந்த விதி, 'ஒட்டுமொத்த வன்னியர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் பாமக-விற்கு வாக்களிப்பது; சிறுபான்மையினருக்குகிடைக்கும் நன்மைகளை வீடு வீடாகச் சென்று திண்ணையில் அமர்ந்து எடுத்து சொல்வது; அதை என்னாலும் காப்பது'. விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் வெற்றி பெற வீடு வீடாகச் சென்று திண்ணை பிரசாரம் செய்வோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/drramadoss-speech-at-the-pmk-meeting-held-at-villupuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக