தீபாவளிக்கு ரிலீசான `எனிமி' திரைப்படம் பார்த்தேன். அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் மாளவிகாவைக் கொலைசெய்யும் நோக்கத்தில் அவர் பொருத்திக்கொண்டிருக்கும் பேஸ்மேக்கரை ஹேக் செய்வது போல ஒரு காட்சி வருகிறது. பேஸ் மேக்கரை இப்படி ஹேக் செய்ய முடியுமா? இதுவரை அப்படியான சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்திருக்கின்றனவா?
- அரவிந்த் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.
``பேஸ் மேக்கர் என்பது ஒரு கருவி. நம் இதயம் பம்ப் செய்ய, அதில் இயற்கையிலேயே எலக்ட்ரிகல் சிஸ்டம் ஒன்று இருக்கும். சிலருக்கு இதயம் சரியாக இயங்காததன் விளைவாக, சில பிரச்னைகளுக்காக பேஸ் மேக்கர் பொருத்த வேண்டியிருக்கும். அதாவது சில நேரம் இதயம் மிக மெதுவாகச் சுருங்கி விரியும் அல்லது இயற்கையிலேயே இதயத்திலுள்ள எலக்ட்ரிகல் சிஸ்டத்தில் அடைப்பு இருக்கலாம். அதனால் அந்த எலக்ட்ரிகல் சிஸ்டம் சரியாக வேலை செய்ய முடியாமல் போவதால் செயற்கையாக பேஸ் மேக்கரை பொருத்துகிறோம்.
Also Read: Doctor Vikatan: பண்டிகை விருந்து; பலவித பலகாரங்கள்; அஜீரணத்திலிருந்து தப்பிக்க வழிகள் உண்டா?
பேஸ் மேக்கர் என்பது எலக்ட்ரிகல் கருவி என்பதால் சிலநேரம் அதை அட்ஜஸ்ட் செய்வதற்கு அதனுடன் ஒயர்லெஸ்ஸில் தொடர்புகொள்ள முடிகிறது. ப்ளூ டூத்தில் இன்டர்நெட் வழியாக தொடர்புகொள்ள முடியும். இந்தக் காரணங்களால் பேஸ் மேக்கரை ஹேக் செய்வது சாத்தியமே. ஆனால் இதுவரை அத்தகைய சம்பவங்களை மருத்துவ உலகம் கேள்விப்பட்டதில்லை.
பேஸ் மேக்கரை ஹேக் செய்து அதன் பேட்டரியை வேகமாகச் செயலிழக்கச் செய்யவோ, இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யவோ முடியும். ஆனாலும் இன்று பேஸ் மேக்கர் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவதால் இதுபோன்ற சம்பவங்களை நிச்சயம் தடுத்துவிட முடியும்.
Also Read: Doctor Vikatan: மாதத்தில் பலநாள்களில் வெள்ளை படுகிறது; பேன்ட்டி லைனர் உபயோகிப்பது தீர்வாகுமா?
ஒவ்வொருவரின் இதயநலன் சார்ந்த பிரச்னைக்கேற்பவும் வேறு வேறு புரொகிராமிங் தேவைப்படலாம். பேஸ் மேக்கர் பொருத்தப்பட்ட நபருக்கு அதன் செட்டிங்ஸை அட்ஜஸ்ட் செய்ய மருத்துவர் வெளியிலிருந்து அதை இயக்க முடியும். ஆனால் அதை ஹேக்கிங் என்று சொல்லக்கூடாது."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/can-the-pacemaker-be-hacked-as-shown-in-tamil-movie-enemy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக