Ad

ஞாயிறு, 7 நவம்பர், 2021

ரெட் அலர்ட்: `தொடரும் கனமழை... திறக்கப்படும் ஏரிகள்!'- வானிலை மையம் எச்சரிக்கை!

வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்குக் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் விடிய விடியக் கனமழை கொட்டித்தீர்த்தது.

சென்னை கனமழை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தெப்பமாகத் தேங்கி நிற்கிறது. சில பகுதிகளில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்திருக்கிறது. அதனால், அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் பணிகளைச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாகச் செய்துவருகிறார்கள். மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், சென்னையில் அடுத்த மூன்று நாள்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சென்னையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.30 மணி வரை மட்டும் 207 மி.மீ கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இது தொடர்பாகத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப், ``கடந்த 2015-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் பகுதியில் 294 மி.மீ. மழை பெய்தது. அதன் பின் 2016, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் 150 மி.மீ மழையும், 2020-ம் ஆண்டு 162 மி.மீ மழையும், 2017-ம் ஆண்டு 183 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது. இன்று காலை 7.30 மணி நிலவரப்படி, நுங்கம்பாக்கத்தில், 207 மி.மீ மழைப் பதிவாகியிருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை கனமழை

வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, புழல் ஏரியில் நீர் முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. அதன் காரணமாக, இன்று 11 மணியளவில் உபரி நீர் திறக்கப்பட்டது. அதேபோல, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மதியம் 1 மணியளவில் தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: `தமிழகத்தில் மேலும் 4 நாள்களுக்கு கனமழை நீடிக்கும்!' - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையின் முக்கிய ஏரிகளில் தண்ணீர் திறக்கப்படுவதால், கரையோர மக்களும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும், தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்கள் குறித்த புகார்களை, 044-25619206, 044-25619207, 044-25619208 ஆகிய எண்களிலும் 1913 என்ற எண் மூலமாகவும் சென்னை மக்கள் மாநகராட்சிக்குப் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநகராட்சி புகார் எண்கள்

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் 507 இடங்களில் மின் மோட்டார்களின் உதவியோடு மழைநீர் வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.கனமழை காரணமாகச் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/meteorological-center-warns-of-heavy-rains-for-next-three-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக