இந்திய அரசிடமிருந்து ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெறுவதுக்காக, பிரான்சின் டசால்ட் நிறுவனம், சூசேன் குப்தா என்ற இடைத்தரகருக்கு ரூ.65 கோடி லஞ்சம் வழங்கியதாக பிரான்ஸ் புலனாய்வு ஊடகமான மீடியாபார்ட் (Mediapart) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே இது சம்மந்தமான வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்திருக்கிறது.
ரஃபேல் ஒப்பந்தப் பின்னணி:
கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை, பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் போட்டுக்கொண்டார். இதன்மூலம் ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் உறுதியானது.
ஒப்பந்தம் கையெழுத்தானபோதே, இந்த ரஃபேல் விமானங்கள் மிக அதிகமான விலைக்கு வாங்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். காரணம், 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது போடப்பட்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என, 126 விமானங்கள் வாங்குவதாக ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்தபிறகு 2016-ம் ஆண்டு புதிதாக போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்ததில் ஒரு விமானத்தின் விலை 1,670 கோடி ரூபாய் என 36 விமானங்கள் மட்டுமே வாங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மேலும், இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைப்படி, டசால்ட் நிறுவனம் ஒப்பந்தத்தின் 50% தொகையை ரஃபேல் விமான உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அந்த விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனத்துக்கு வழங்காமல், விமானத் தயாரிப்பில் அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் (Reliance defence ltd) நிறுவனத்துக்கு வழங்கியது. இதையும் எதிர்க் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
மீடியாபார்ட் ஊடகம் லீக் செய்த அதிர்ச்சித் தகவல்கள்:
அந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த புலனாய்வு ஊடகமான மீடியாபார்ட், `` ரஃபேல் விமான ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமென்றால், இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது. இந்தத் தகவல் டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது!” என செய்தி வெளியிட்டு அதிரவைத்தது. அதைத்தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தத்தின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும், சந்தேகங்களும் பூதாகரமாய் வெடித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச சீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழல் வழக்கும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்று கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளும் 2019-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அரசியல் அரங்கில் அனல் தகித்துக்கொண்டிருந்த ரஃபேல் ஒப்பந்த விவகாரம், ஒன்றுமில்லாமல் அடங்கிப்போனது.
மீடியாபார்ட் ஊடகத்தின் இரண்டாவது லீக் அவுட்:
இந்த நிலையில், கடந்த 2021 ஏப்ரல் மாதம் மீண்டும் ஓர் சர்ச்சைக்குறிய தகவலை மீடியாபார்ட் ஊடகம் வெளியிட்டது. அதில், ``ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின்போது, இந்தியாவைச் சேர்ந்த ஓர் இடைத்தரகு நிறுவனத்துக்கு சுமார் 9.43 கோடி ரூபாய் (1.1 மில்லியன் யூரோக்கள்) தொகையை டசால்ட் (Dassault) நிறுவனம் வழங்கியிருக்கிறது" என கூறப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், ``டசால்ட் நிறுவனத்தின் நிறுவனத்தின் மொத்த பணப் பரிவர்த்தனை ஆவணத்தில் (balance sheet), பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு துறை (Agence Francaise Anticorruption (AFA) மேற்கொண்ட ஆய்வில், ``Gifts to Clients” என்ற கணக்கில் ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருந்தது. விசாரணையில், அந்தத் தொகை இடைத்தரகு நிறுவனத்துக்கு லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாக டசால்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது" என மீடியாபார்ட் ஊடகம் தெரிவித்திருந்தது.
மேலும், இதில் தொடர்புடைய அந்த இடைத்தரகு நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் (Defsys) என்றும், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுசேன் குப்தா இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் கிளப்பியது. இதன்காரணமாக, பிரான்ஸ் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்றது. தற்போதும் இதுகுறித்தான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
மீடியாபார்ட் ஊடகத்தின் மூன்றாவது லீக் அவுட்:
இந்த நிலையில், சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த நவம்பர் 7-ம் தேதி மீண்டும் ஒரு அதிர்ச்சித் தகவலை மீடியாபார்ட் ஊடகம் வெளியிட்டிருக்கிறது. அதில், ``ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்திய இடைத்தரகர் சுசேன் குப்தாவுக்கு ரூ.65 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது" என அதிரடியாக தெரிவித்திருக்கிறது.
மேலும், ``இந்த லஞ்சப் பணம், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையில் கைமாறியிருக்கிறது. இதுதொடர்பான ஆதாரங்கள், கடந்த 2018 அக்டோபர் மாதம் சி.பி.ஐ., அமலாக்கத் துறைக்கு கிடைத்தது. ஆனால் இரு புலனாய்வு அமைப்புகளும் லஞ்ச விவகாரம் குறித்து விசாரணை நடத்த முன்வரவில்லை” என்று மீடியாபார்ட் ஊடகம் அதிரவைத்திருக்கிறது.
யார் இந்த சுசேன் குப்தா?
சுசேன் குப்தா ஏற்கெனவே விவிஐபி-க்களுக்கான விமானம் வாங்கும் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டவர். சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையால் `அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல்' விவகாரத்தில் குற்றம் சாட்டப்படு இவர்மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது ரஃபேல் விமான ஒப்பந்தத்திலும் லஞ்சம் பெற்றிருப்பதாக சுசேன் குப்தா மீது பிரான்சின் மீடியாபார்ட் ஊடகம் குற்றம்சாட்டியிருக்கிறது.
பா.ஜ.க தலைவரின் கருத்து:
இதுகுறித்து, பா.ஜ.க மூத்த தலைவர் அமித் மால்வியா (Amit Malviya) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ``மீடியாபார்ட் தகவல்படி, கடந்த 2004 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில்தான், ரஃபேல் விமான விற்பனைக்காக டசால்ட் நிறுவனம், இடைத்தரகர் சுஷேன் குப்தாவுக்கு ரூ.65 கோடியை (€14.6 Mn யூரோ) கொடுத்திருக்கிறது. எனவே, லஞ்சப் பணத்தை முந்தைய காங்கிரஸ் அரசு தான் பெற்றிருக்கிறது. ஆனால் ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியவில்லை! பா.ஜ.க அரசு பதவியேற்றதும் அதை ரத்து செய்துவிட்டு, பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது” என கருத்து தெரிவித்திருக்கிறார்.
பா.ஜ.க-வை சுற்றிவந்த ரஃபேல் ஊழல் விவகாரம் தற்போது காங்கிரஸ் கட்சியையும் வட்டமிடுகிறது. இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
source https://www.vikatan.com/government-and-politics/news/dassault-paid-65-crores-to-middleman-for-rafale-deal-detailed-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக