'தேங்காய்'க்கு இப்போது ஏகப்பட்ட கிராக்கியாக இருக்கிறதே. அது உங்கள் திறமையினாலா? அல்லது சிபாரிசினாலா?
திறமைக்கும், சிபாரிசுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி, மக்களின் தீர்ப்பு. அவர்கள் கைதட்டிக் கொண்டிருக்கும் வரை எனக்கு அறுவடை நடந்து கொண்டேயிருக்கும்.
நகைச்சுவையைப் பொறுத்தவரை தங்களுக்கு `குரு' என்று யாராவது உண்டா?
என் தந்தைதான் என் குரு. மெட்டல்பாக்ஸ் கம்பெனியில் என் தந்தை பணியாற்றியபோது, பொழுதுபோக்குக்காக நாடகங்களில் நடித்தார். அவர் நடிப்பைப் பார்த்துத்தான் நானும் நடிகனாவதற்கு ஆசைப்பட்டேன்.
உங்கள் மனைவிக்கு நீங்கள் வாங்கித் தரும் 'நகை'யில் நாட்டமா? அல்லது உங்கள் நகைச்சுவையிலா?
என் மனைவியா! அவ ஒரு பேராசைக்காரியாயிற்றே! நகையும் வாங்கிப் போட்டுக்குவா! என் நகைச்சுவையையும் அனுபவிப்பா.
திடீரென்று உள்ளே புகுந்து சோதனையிடும் வருமான வரி அதிகாரிகள் உங்கள் வீட்டில் நுழைந்தால்?
தாராளமா என் வீட்டைத் தோண்டிப் பார்க்கட்டும். ஆனா. ஒண்ணு... எதுவும் கிடைக்கலேன்னா அவர்கள் ஏதாவது போட்டுவிட்டுப் போகணும்.
பல நகைச்சுவை நடிகர்களோடு சில படங்களில் நீங்கள் நடித்தபோது, யாருடைய பெயரை முதலில் போடுவது என்ற பிரச்னை குறுக்கிட்டதா?
நான் வளர்ந்த இடம் மாடர்ன் தியேட்டர்ஸ். அங்கு நான் பல ஒழுங்குகளைக் கற்றவன். இம்மாதிரி சில்லறைத் தகராறுகளுக்கு நான் செல்வது வழக்கமில்லை.
நகைச்சுவை நடிகர்கள் சிலர் தத்துவம் பேசுகிறார்களே, அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
தத்துவம் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லத் தவறி, பேச்சுக்குப் பேச்சு, காட்சிக்குக் காட்சி தத்துவங்களைப் பேசிக் கொண்டிருந்தால், அந்த நகைச்சுவை நடிகர்களைப் பற்றி மக்கள் தத்துவம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
நீங்கள் நடிக்க வந்தது கலைச் சேவைக்கா? வயிற்றுச் சேவைக்கா?
ரயில்வேயில் பணிபுரிந்தபோது, கலைச் சேவையை நினைத்துத்தான் திரையுலகில் நுழைந்தேன். பிறகு, வயிற்றுச் சேவை பெரிதாக இருந்தது. ஆக, தற்சமயம் கணக்குப் பார்த்தால் வயிற்றுச் சேவை 75 சதவிகிதமும், கலைச்சேவை 25 சதவிகிதமுமாக இருக்கிறது.
நீங்கள் நடித்த படங்கள் நடக்கும் தியேட்டருக்குச் சென்று ரசிகர்கள் எதை ரசிக்கிறார்கள் எனப் பார்த்ததுண்டா?
சுமார் நூறு பேரிடம், என் நடிப்பைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொண்டுதான் துணிச்சலாக நான் நேராகத் தியேட்டருக்குச் செல்வது வழக்கம்.
தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், ' சோ ' இவர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்லுங்களேன்!
எனக்குத் `தேங்காய்' என்ற பட்டத்தை அளித்தவரே தங்கவேலு அவர்கள் தான். நகைச்சுவையில் புதிய திருப்பத்தை உண்டாக்கியவர் சந்திரபாபு. நகைச்சுவை நடிகர்களையே சிரிக்க வைத்தவர் நாகேஷ். தனக்கென்று ஒரு தனிக் கொள்கையை வகுத்துக் கொள்ளாமல் எல்லாரையுமே எதிர்க்கின்ற ஒரு துணிச்சலான மனிதர் ' சோ '.
உங்களுக்குப் பிடித்த நடிகை, நடிகர் யார்?
எனக்குப் பிடித்த நடிகை, தமிழ்த் திரைப்பட நடிகைதான். அவர் பெயரைக் குறிப்பிட்டால், மற்ற நடிகைகள் எல்லாம் என்னை முறைப்பாங்க. நடிகர்கள்ளே டீன் மார்ட்டின், டேவிட் நிவன் இவங்களைப் பிடிக்கும்.
மறக்க முடியாத சம்பவம் ஏதாவது?
ஜோசப் தளியத்தின் 'இரவும் பகலும்' படத்திலே நகைச்சுவை நடிகனா முதல் முதல் ஒப்பந்தமாகி, 2000 அடி எடுத்த பிறகு எனக்கு அட்வான்சா 301 ரூபாய் கொடுத்தாங்க. அதை எடுத்துக்கிட்டுத் திருப்பதி போய்ப் பிரார்த்தனை செய்துட்டுத் திரும்பினேன். திரும்பி வந்த எனக்கு ஓர் அதிர்ச்சி. ஜோசப் தளியத் என்னைக் கூப்பிட்டு 'வியாபார நோக்கத்துக்காக நாகேஷைப் போட்டுட்டோம். நீங்க இந்தப் படத்திலே இல்லே' என்று கூறிவிட்டார். அந்தச் சம்பவத்துக்காக ஏழுமலையானையும் நிந்திக்கலை; ஜோசப் தளியத்தையும் மறக்கலை...
பல படங்களில் உங்களை மெட்ராஸ் பாஷையிலேயே பேச வைக்கிறார்களே, அது உங்களுக்குப் போரடிக்கவில்லையா?
எனக்குப் போரடித்தாலும், ரசிகப் பெருமக்களுக்குப் போரடிக்கவில்லை என்று அவர்கள் வரவேற்பில் இருந்தும், கடிதங்களிலிருந்தும் தெரிகிறதே!
பேட்டி: சுந்தரம்
(26-11-1972 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)
source https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/vikatan-vintage-thengai-srinivasans-interview-from-ananda-vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக