``சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல்துறையினரை கைது செய்த சிபிஐ, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது" என ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மதுரை மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2018 மே 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கிய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 75 நபர்களில் 27 நபர்களிடம் விசாரணை நடத்த சம்மன் வழங்கப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், 25 பேர் நேரில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி 25 நபர்களின் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Also Read: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ விசாரணையின் நிலை என்ன? - சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி
இவ்வழக்கு சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "உயர் நீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், போராட்டத்தின்போது பொதுமக்கள் பார்க்கும்போதே 13 பேரை சுட்டுக் கொலை செய்த காவல்துறையினர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யவில்லை. அவர்களை குற்றவாளிகளாக காட்டவில்லை.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளான காவல்துறையினரை கைது செய்த சிபிஐ, தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறது. விசாரணை நியாயமாக நடைபெற மீண்டும் உயர் நீதிமன்றம் செல்ல உள்ளோம்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/sterlite-firing-case-trial-at-madurai-court-lawyer-says-cbi-enquiry-is-one-sided
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக