Ad

திங்கள், 8 நவம்பர், 2021

நெல்லை: பணிச்சுமை, அதிகாரிகள் டார்ச்சர்?! - பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

நெல்லை மாநகர காவல்துறையில் பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர், மகேஸ்வரி. அவரின் கணவர் நுண்ணறிவுப் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். பெண் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை உட்கொண்டதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றி வருகிறார்.

காவல்துறை

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “பணியில் வேகமாகவும் திறமையாகவும் செயல்படக் கூடியவர், மகேஸ்வரி. அவர் பணியில் இருக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கவனத்துடன் செயல்படுவார். தீபாவளி போன்ற விழாக்காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தார்.

பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவில் ஆள்பற்றாக்குறை இருப்பதால் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. பாளையங்கோட்டையில் முக்கிய அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமானவை இருப்பதால் ஆள்பற்றாக்குறை காரணமாக காவல்துறையினர் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கிறார்கள்.

Also Read: ``20% காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு!" - வரவேற்பைப் பெறும் மதுரை கமிஷனரின் முயற்சி

அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக போலீஸார் சோர்வடைந்தும் மன உளைச்சலுடனும் பணியாற்றி வருகிறார்கள். அதனால் ஏற்கனவே நெல்லை மாநகர காவல்துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்ப்கெடர் அருணாசலம் என்பவர் மனஅழுத்தம் குறித்து ஆடியோ வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்.

அதன் பின்னர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் அக்டோபர் 27-ம் தேதி மன அழுத்தம் காரணமாக விஷம் அருந்தி உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினார்கள். மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரும் தற்கொலைக்கு முயன்றார். இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காவல்துறை அதிகாரிகளின் நெருக்கடியும் காரணமாகிவிடுகிறது.

சுதந்திரதினவிழா அணிவகுப்பு

இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியைப் பொறுத்தவரை கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். 2020-ம் ஆண்டு சுதந்திர தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க வந்தபோது திண்டுக்கல் அருகே வசித்த அவரது தந்தை உயிரிழந்த தகவல் வந்தது. ஆனாலும் கூட, சோகத்தை மனதுக்குள் சுமந்தபடியே அணிவகுப்பை தலைமையேற்று நடத்தி முடித்த பிறகே விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்குச் சென்றார்.

காவல்துறையில் மிகுந்த அக்கறையோடு செயல்படும் மகேஸ்வரிக்கு உயரதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். நகரப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தொடர்பாக அதிகாரிகள் டார்ச்சர் கொடுத்ததன் கரணமாகவே அவர் தற்கொலை மனநிலைக்குச் சென்றிருக்கிறார்.

நெல்லை மாநகரில் இருக்கும் காவல்துறையினருக்கு மனதளவில் நெருக்கடியை ஏற்படுத்துவதைத் தடுக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினருக்கு வார விடுமுறை கொடுக்கப்படுவதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்கள்.

இது குறித்து நெல்லை மாநகர காவல்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு, “இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பணியில் இருந்தபோது நகருக்குள் பாரம் ஏற்றிய லாரிகள் அதிகம் வந்திருக்கின்றன. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. அது தொடர்பாக அவருக்கு போக்குவரத்து பிரிவு அதிகாரி மெமோ கொடுத்துள்ளார்.

அணிவகுப்பில் மகேஸ்வரி

காவல்துறையில் தவறான செயலுக்காக மொமோ கொடுப்பது வழக்கமான நடவடிக்கை தான். ஆனால் மெமோ கொடுத்ததும் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் ஏதோ விபரீதமான செயலில் இறங்கியிருக்கிறார். இது பற்றி விசாரித்து வருகிறோம்” என்று முடித்துக் கொண்டார்.

அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/lady-inspector-tries-to-commit-suicide-and-hospitalized-in-nellai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக