வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் இன்று (07.11.2021) முதல் 11.11.2021 தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது போல, சென்னையில் நேற்று முதல் கனமழை விடாது பெய்துகொண்டிருக்கிறது. சென்னையில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது.
வானிலை ஆய்வு மையம், ``இன்று (07.11.2021) சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும் சில நேரங்களில் அதி கனமழையும் பெய்யும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்கள் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும். தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும்" என்று தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்குக் கன முதல் மிகக் கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் டிஜிபி அலுவலகம் பகுதியில் 23 செ.மீ, நுங்கம்பாக்கம் 21 செ.மீ, அம்பத்தூர் 21 செ.மீ, அயனாவரம் 18 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகம் 16 செ.மீ , விமான நிலையம் 11 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
Also Read: ரெட் அலர்ட்: `தொடரும் கனமழை... திறக்கப்படும் ஏரிகள்!'- வானிலை மையம் எச்சரிக்கை!
வரும் நவம்பர் 9-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால், வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள் 9-ம் தேதிக்கு முன்பாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 7.11.2021 வரை 334.64 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 232.8 மி.மீ விட 44 சதவிகிதம் அதிகமாகும்.
திருநெல்வேலி, கோவை, அரியலூர், திருவாரூர், விழுப்புரம், ஈரோடு, கடலூர், பெரம்பலூர் கரூர், புதுக்கோட்டை போன்ற 10 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவிகிதத்துக்கும் மேல் மிக அதிகப்படியான மழை பெய்துள்ளது. தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், அனைத்து மாவட்டங்களில் 5,160 நிவாரண முகாம்களும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 160 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சொந்த ஊர் சென்றவர்கள் 2,3 நாள்களுக்குப் பிறகு சென்னை திரும்புமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/the-meteorological-department-has-issued-a-heavy-rain-warning-for-the-next-4-days
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக