தமிழ்நாட்டில் தொடர் கனமழை மற்றும் புயல் காலங்களில் மற்ற மாவட்டங்களை விட டெல்டா மாவட்டங்களில் அதிகமாக பாதிப்புகள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இங்கு மீட்பு பணிகள் மிகவும் மெத்தனமாகவும் காலதாமதமாகவும் நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் ஆதங்கப்படுவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. இக்குறையை போக்கும் விதமாக, தற்போது திருவாரூர் மாவட்ட காவல்துறை 24×7 காவல் மீட்புக் குழுக்களை உருவாக்கி, சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் உடனுக்குடன் மீட்புபணிகளை [24×7 ]மேற்கொள்ளும் வகையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரின் நேரடி கட்டுப்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் 5 காவல் மீட்புக்குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
Also Read: விடாது பெய்யும் தொடர் மழை... தத்தளிக்கும் தமிழகம்!
இதுகுறித்து பேசிய திருவாரூர் காவல்துறையினர், ‘’கனமழை மற்றும் புயலால் திருவாரூர் மாவட்டத்தில் எந்த பகுதியில் எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் இரவு-பகல் பாராமல் எல்லா நேரங்களில் காவல் குழுக்கள் தயார் நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு உதவி-ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள், ஒரு எய்ச்சர் வாகனம் என மொத்தம் 5 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 50 காவலர்கள் தனித்தனி வாகனங்கள் மற்றும் மீட்புபணி உபகரணங்களுடன் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய உள்கோட்ட தலைமையிடங்களில் தயார்நிலையில் உள்ளனர்.

இக்குழுவில் உள்ள காவல் அலுவலர்கள் அனைவரும் SDRF என அழைக்கப்படும் பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி முடித்தவர்கள். 5 காவல் மீட்புக்குழுக்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடி பார்வையில் இயங்கி வருகிறது’’ என தெரிவித்தார்கள். இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து 5- காவல் மீட்பு குழுவினரையும் மாவட்ட ஆயுதப்படையில் வளாகத்தில் ஒன்றுதிரட்டி மீட்புபணி உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீட்புபணி காவல் அலுவலர்களுக்கு கனமழை மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வது குறித்தும், மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.
source https://www.vikatan.com/government-and-politics/news/thiruvarur-police-department-formed-rescue-team
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக