Ad

திங்கள், 3 மே, 2021

IPL 2021 : ஒரு வாரம் ஐபிஎல் போட்டிகள் நடக்காதா... BCCI போடும் புது பிளான் என்ன?!

பயோபபுளுக்குள்ளேயே கொரோனா பரவியிருக்கும் நிலையில் 2021 ஐபிஎல் தொடர்ந்து நடக்குமா என்பதில் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. வீரர்கள், வர்ணணையாளர்கள் எனப் பலர் மத்தியிலும் கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்த பல்வேறு வகையிலான திட்டங்களை தீட்டி வருகிறது.

தற்போதைய ஐபிஎல் போட்டிகள் கிளஸ்டர் கேரவேன் மாடலில் நடைபெற்று வருகிறது. அதாவது ஐபிஎல்-ன் முதல்கட்டப் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்கியது. சென்னை, மும்பை என இரண்டு மைதானங்களில் மட்டுமே போட்டிகள் மாறி மாறி ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றுவந்தன. சென்னையில் 4 அணிகளும், மும்பையில் 4 அணிகளும் முகாமிட்டு விளையாடிவந்தன. இந்த இரு இடங்களிலும் போட்டிகள் நடக்கும்வரை எந்தப்பிரச்னையும் இல்லாமல் இருந்தது.

ஐபிஎல் 2021... மும்பை இந்தியன்ஸ் ஆதரவாளர்கள்

ஏப்ரல் 26 முதல் மே 8-ம் தேதிவரை டெல்லி, அஹமதாபாத் என அடுத்த கிளஸ்டருக்குப் போட்டிகள் மாறியது. டெல்லி மற்றும் அஹமதாபாத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் நிலையில் டெல்லியில் சென்னை, மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் தங்கியிருந்து போட்டிகளில் விளையாட, அஹமதாபாத்தில் கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகள் விளையாடிவந்தன. இப்போது இங்கேதான் பிரச்னை எழுந்திருக்கிறது. அஹமதாபாத்தில் இருக்கும் கொல்கத்தா அணியில் கொரோனா பரவ, டெல்லியில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள்ளும் கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கிறது. டெல்லி மைதான ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதனால் தற்போது எல்லா அணிகளும் குழப்பத்திலும், பயத்திலும் இருக்கின்றன. மே 9 முதல் 23-ம் தேதி வரை அடுத்த கிளஸ்டரான பெங்களூரு, கொல்கத்தாவில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பெங்களூரு, கொல்கத்தா சென்று விளையாட அணிகள் தற்போது மறுப்பு தெரிவித்திருக்கின்றன. இதனால் மூன்றாவது கட்டப் போட்டிகளையும், ப்ளேஆஃப் போட்டிகளையும் மும்பையிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது.

இன்று நடைபெற இருக்கும் மும்பை - ஐதராபாத் போட்டி உள்பட இந்த வாரம் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் நடப்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. அடுத்த திங்கள் முதல் மும்பையில் மட்டுமே போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டுவருவதாகத் தெரிகிறது.

கோலி, சிராஜ்

மும்பையில் மூன்று சர்வதேச ஸ்டேடியங்கள் இருக்கின்றன. வான்கடேவில் போட்டிகள் நடக்க மற்ற இரண்டு மைதானங்களும் பயிற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. கடந்த மாதம் கொரோனா பரவல் மும்பையில் அதிகளவில் இருந்தநிலையில் தற்போது அங்கே பரவல் குறைந்துவருகிறது. இதனால் 8 அணிகளையும் மும்பையிலேயே தங்கவைத்து போட்டிகளைத் தொடர திட்டமிட்டிருக்கிறது பிசிசிஐ.

ஐபிஎல் இறுதிப்போட்டி மே 30-ம் தேதி அஹமதாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் ஜூன் முதல் வாரத்துக்கு இறுதிப்போட்டி தள்ளிப்போகும் எனத்தெரிகிறது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் மாற்றங்கள் வரும் எனத் தெரிகிறது.



source https://sports.vikatan.com/ipl/no-ipl-matches-till-this-weekend

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக