Ad

திங்கள், 31 மே, 2021

உச்சத்தில் கோவிட் 2-ம் அலை... குழந்தைகளுக்கு ஃப்ளூ தடுப்பூசி ஏன் அவசியம்?

இந்தியாவில் கோவிட்-19 மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இந்தச் சமயத்தில் அவர்களுக்கு ஃப்ளூ தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

அதுபற்றிய சந்தேகங்களுக்குத் தீர்வளிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.அரவிந்த்.

``மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்பது கணிப்புதான். இந்தியாவில் இரண்டாம் அலைக்கு முக்கிய காரணம், பொதுமக்களில் பலர் கோவிட்-19 தொற்றுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கைவிட்டதுதான். இதுபோன்ற பெருந்தொற்றுக் காலத்தில் கட்டுப்பாடான பொது நடத்தைகளின் மூலம் இதைக் கட்டுப்படுத்துவதில் இன்னுமே சிரமம் உள்ளது. இரண்டாம் அலைக்குப் பிறகு மீண்டும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கத் தொடங்கினால் மீண்டும் அடுத்த அலை ஏற்படக்கூடும். இது பெரியவர்கள், குழந்தைகள் அனைவருக்கும் பொருந்தும்.

vaccine for children

இந்தியாவைப் பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர். குழந்தைகளுக்கு இதுவரை போடத் தொடங்கவில்லை. இரண்டாம் அலை முடிந்து மூன்றாம் அலை ஏற்படுவதற்கு சில மாதங்கள் ஆகும். அதற்குள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அநேகம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. இருந்தாலும் குழந்தைகள் ஆபத்தானவர்கள் பட்டியலில்தான் இருப்பார்கள். இரண்டாம் அலைக்குப் பிறகு, ஒருவேளை பள்ளிகள் திறக்கப்பட்டால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால் அதன் தன்மையும் குணமும் மாறும். கடந்த அலையில் வீட்டில் ஒருவருக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டது. இரண்டாம் அலையில் குடும்பம் குடும்பமாகப் பாதிக்கப்படுகின்றனர். தற்போதே அதன் பரவும் தன்மை அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த அலையில் நோயின் தீவிரம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

வைரஸ் தொடர்ச்சியாக மாற்றம் அடைந்துகொண்டே இருப்பதால் தடுப்பூசிகள் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலமாகவும் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Baby (Representational Image)

இந்தியாவில் 2 - 12 வயது குழந்தைகளுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி பரிசோதனை தற்போதுதான் தொடங்கியுள்ளது. பரிசோதனை நிறைவடைந்து அதுபற்றிய தரவுகள் இந்த ஆண்டு இறுதியில் வெளிவருவதற்கே சாத்தியம் குறைவுதான்.

அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கவிட்டனர். அதற்காக அமெரிக்காவின் ஃபைஸர் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஃபைஸர், மாடர்னா போன்ற தடுப்பூசிகளை குழந்தைகளுக்குச் செலுத்துவதற்கான பரிசோதனைகள் வெளிநாடுகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி வருவதற்கு அடுத்த ஆண்டாகிவிடும்.

ஃப்ளூ தடுப்பூசி

ஃப்ளூ என்பது மருத்துவ பெயரில் இன்ஃபுளுயென்சா என்று அழைக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் ஃப்ளூ வகையைச் சேர்ந்த காய்ச்சல்கள்தான். இந்த ஃப்ளூவைப் பரப்பும் வைரஸின் தன்மையும் ஆண்டுக்கு ஆண்டு மாறுபட்டுக்கொண்டே வரும். அதனால் ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனம் ஃப்ளூ தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தடுப்பூசியை அப்டேட் செய்வதற்கான பரிந்துரைகளை அனுப்புவார்கள். அதன் அடிப்படையில் அப்டேட் செய்யப்பட்ட தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்.

இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் அகாடமி இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ஃப்ளு தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டுப்படுத்த முடியாத ஆஸ்துமா அல்லது நுரையீரல் சம்பந்தப்பட்ட வேறு பிரச்னைகள், நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால் அவர்களுக்குத் தொடர்ந்து ஃப்ளூ தடுப்பூசி செலுத்தினால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளது.

Children

பெருந்தொற்றுக்கும் ஃப்ளூ தடுப்பூசிக்கும் என்ன தொடர்பு?

பருவமழைக் காலம் தொடங்கிவிட்டால் ஆண்டுதோறும் ஃப்ளூவினால் அதிக குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு சிறிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்றுவிடும் என்றாலும் சில குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை, வென்டிலேட்டர் உதவிகூட தேவைப்படலாம். தற்போது கோவிட் தடுப்பூசி குழந்தைகளுக்குக் கொடுக்கப்படவில்லை.

அப்படியிருக்கும் சூழலில் மற்றொரு தொற்றிலிருந்தாவது குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கலாம் என்பதற்காக ஃப்ளூ தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறதே தவிர, ஃப்ளூ தடுப்பூசிக்கும் கோவிட் தொற்றுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஃப்ளூ தடுப்பூசி எடுத்துக்கொண்டால் கோவிட் தொற்று ஏற்படுவதிலிருந்து கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்ற கருத்தும் தவறானது.

அட்டவணையில் சேர்க்க வேண்டும்!

மத்திய அரசின் பரிந்துரைகளுடன் அனைத்து மாநிலங்களுக்கும் தனித்தனி தடுப்பூசி அட்டவணை இருக்கும். அரசு மருத்துவமனைகளில் அவை இலவசமாக வழங்கப்படும். அதனுடன் இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் அகாடமி பரிந்துரைத்த ஒரு சில தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் போடப்படும்.

தமிழகத்தில் அரசின் அட்டவணையில் ஃப்ளூ தடுப்பூசி இல்லை. இதைவிட விலை அதிகமான தடுப்பூசிகள்கூட அரசின் இலவச தடுப்பூசி அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பெருந்தொற்றுக் காலத்தில் அதையும் அட்டவணையில் சேர்த்துக்கொள்வது நல்லது.

வழக்கமான தடுப்பூசிகள் எப்போது?

Pediatrician Dr.S.Aravind

ஒரு குழந்தைக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து இயல்புக்குத் திரும்ப 2 வாரங்கள் ஆகும். அதற்குப் பிறகு கூடுதலாக 2 வாரங்கள் கழித்து வழக்கமான அட்டவணைப்படி வழக்கமான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம். அதாவது, நோய்த்தொற்று ஏற்பட்டு ஒரு மாதம் கழித்து தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம்.

இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!

குழந்தை பிறந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே தடுப்பூசிகள் போடப்படும். அதற்குப் பிறகு 6, 10, 14 வாரத்திலும் சில தடுப்பூசிகள் போட வேண்டும். போலியோ, டெட்டனெஸ், டிப்தீரியா போன்ற முக்கியமான தடுப்பூசிகள் இந்தச் சமயத்தில் போடப்படும். இவற்றையெல்லாம் எந்தக் காரணம் கொண்டும் தாமதிக்கக் கூடாது.

பெருந்தொற்றுக் காலமாக இருந்தாலும் இவற்றைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மாநில அரசு நிர்ணயித்துள்ள அட்டவணையிலுள்ள தடுப்பூசிகளை எப்போதும் தவறவிடக் கூடாது.

Vaccines

Also Read: `சீக்கிரமா எல்லோரும் நல்லாகிடணும்!’ - நிவாரண நிதிக்கு ரூ.5,000 கொடுத்த குழந்தைகள் #SpreadPositivity

வளர்ந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் சிலவற்றை ஓரிரு மாதங்கள்கூட தள்ளிப்போடுவதால் பெரிய விளைவுகள் ஏற்படாது. எனவே, தடுப்பூசி வழக்கமான நேரத்தில் போட முடியாத நிலை ஏற்பட்டால்கூட அதை அப்படியே விட்டுவிடக் கூடாது.

பெருந்தொற்றுக் காலத்தில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் தாமதிக்கப்படுகின்றன. இது யாரும் எதிர்பாராத சூழ்நிலை. அதனால் தடுப்பூசியைத் தவறவிட்டதற்கு யாரும் யாரையும் குறைசொல்ல முடியாது. எனவே, மருத்துவர்கள் கடிந்துகொள்வார்கள் என்பதற்காக மருத்துவரிடம் தடுப்பூசி பற்றிய விவரங்களை மறைக்க வேண்டாம். தவறவிடப்பட்ட தடுப்பூசி பற்றி குழந்தைகள்நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அவர்கள் போடலாம் என்று தெரிவிக்கும்பட்சத்தில் தாமதித்தாலும் போட்டுக்கொள்ளலாம்" என்கிறார்,



source https://www.vikatan.com/health/healthy/why-doctors-says-flu-vaccine-should-be-given-to-children-who-are-below-5-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக