Ad

திங்கள், 31 மே, 2021

`துரைமுருகனைச் சந்தித்ததால் நிலோபர் கபிலை கட்சியிலிருந்து நீக்கினோம்!’ -கே.சி.வீரமணி விளக்கம்

கடந்த ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், கட்சியில் திருப்பத்தூர் மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்த நிலோபர் கபில், சில தினங்களுக்கு முன் அ.தி.மு.க-விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த நிலோபர் கபில், ‘‘கட்சியிலிருந்து என்னை நீக்கியதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணிதான் காரணம். நான் நீக்கப்படப் பண மோசடிப் புகார்தான் காரணம் என்றால், அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் மோசடிப் புகார்கள் இருக்கின்றன. முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதும்கூட ஊழல் புகாரை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்’’ என்று பல விவகாரங்களை வெளிப்படையாகப் போட்டுடைத்தார். இதையடுத்து, அவர் தி.மு.க-வில் இணைவதற்கான முயற்சியிலும் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலோபர் கபில்

இந்த நிலையில், நிலோபர் நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணி விளக்கமளித்திருக்கிறார். திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, ‘‘நிலோபர் கபில் மீதான ஊழல் புகார் எந்த அளவில் உண்மையென எனக்குத் தெரியவில்லை. அது போலீஸ் பார்த்துக்கொள்ளும். வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் சீட் கொடுக்காதபோதே நிலோபர் கபில் எதிர்ப்பாளராகிவிட்டார். நகருக்குள் இருக்கும் அவரின் வார்டில் அமைக்கப்பட்டிருக்கிற ஒரு பூத்தில் இரண்டு ஓட்டுகள் மட்டுமே அ.தி.மு.க-வுக்கு விழுந்திருக்கிறது. மேலும் சில பூத்களிலும் 12, 16, 31 என்ற அளவிலேயே வாக்குகள் விழுந்துள்ளன. நிலோபரின் செயல்பாடுகள் எப்படியிருந்திருக்கிறது என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

எம்.எல்.ஏ நிதி முழுவதையும் தன் சமூக மக்கள் வசிக்கும் நகரப் பகுதியிலேயே செலவழித்துவிட்டார். ‘கிராம மக்களும் எதிர்ப்பார்க்கிறாங்க. அங்கேயும் எதையாவது செய்யிங்க’ என்று நான் அப்போதே அட்வைஸ் பண்ணிணேன். அவர் செவி சாய்க்கலை. அந்த நேரத்தில், ‘நானும் அமைச்சர்; நானும் அமைச்சர்’ என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார் நிலோபர். நான் சொல்வதற்கு செவி சாய்த்திருந்தால், நல்லப் பெயர் எடுத்திருக்கலாம். வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் நின்று ஜெயித்திருக்கலாம். வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்று நினைத்து தலைமை முடிவு செய்ததால் சீட் மறுக்கப்பட்டது. மாவட்ட அமைச்சராக இருந்ததால் என்னிடமும் கேட்டார்கள். ‘வாணியம்பாடியில் நிலோபருக்கு வெற்றி வாய்ப்பு கண்டிப்பாக இல்லை’ என நானும் தலைமையிடமும் சொன்னேன்.

கே.சி.வீரமணி

மந்திரி பதவி மட்டும்தான் நிலோபரின் கண்ணுக்குத் தெரிந்தது. இதனால்தான் மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தது. கட்சியினரும் புறக்கணித்துவிட்டார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டப் பின்னர் தொண்டர்களிடம் வாங்க தி.மு.க-வுக்குப் போகலாம் என்று கூப்பிட்டிருக்கிறார். யாருமே போகவில்லை. தேர்தலுக்குப் பின் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க செயலாளர் தேவராஜியின் வீட்டுக்கே போய் சால்வைப் போட்டிருக்கிறார் நிலோபர். தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தி.மு.க அமைச்சர் துரைமுருகனின் வீட்டுக்கும் போய் அவரைச் சந்தித்துள்ளார். அப்புறம் எப்படி கட்சியிலிருந்து எடுக்காமல் இருப்போம். நிலோபரின் குற்றச்சாட்டுகளை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

2016 தேர்தலில் அவருக்கு ‘சீட்’ கிடைக்க காரணமே நான்தான். ‘ஏம்பா, உனக்கு வேற ஆள் கிடைக்கலையா?’ என்று அப்போதே அம்மா சொன்னார். நகரமன்ற தலைவராக இருந்திருக்கிறார். கொஞ்சம் வசதி வாய்ப்பும் இருக்கிறது. சீட் கொடுத்தால் செய்வார் என்று நான்தான் ரெக்கமென்ட் செய்தேன். நிலோபர் கபிலுக்கு மீண்டும் சீட் கொடுத்திருந்தால் வாணியம்பாடி தொகுதியும் கைவிட்டுப் போயிருக்கும். புதியவருக்கு, அதிலும் படித்த இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால் வாணியம்பாடி தொகுதி தற்போது மீண்டும் அ.தி.மு.க வசம் இருக்கிறது’’ என்றார் கே.சி.வீரமணி.



source https://www.vikatan.com/government-and-politics/politics/why-was-former-minister-nilofer-kabil-expelled-from-the-admk-kcveeramani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக