Ad

சனி, 29 மே, 2021

“தலைவரே... வீட்டுக்கு சாப்பிட வாங்க” - முதல்வருக்கு விருந்து அழைப்பு!

தமிழகததின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இட்ட முதல் கையெழுத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு என்கிற திட்டமும் இடம்பெற்றிருந்தது.

ஸ்டாலினின் முதல் கையெழுத்து

தேர்தலுக்கு முன்பாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரையைத் துவக்கியபோது “ஆட்சிக்கு வந்தால்தானே மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியும்” என்கிற விமர்சனம் ஸ்டாலின் மீது வைக்கப்பட்டது. இந்த விமர்சனத்துக்கு முதல்வரான பின் பதிலடி கொடுக்க நினைத்த ஸ்டாலின், தான் பயணம் மேற்கொண்ட 39 மாவட்டங்களிலும் பெறப்பட்ட நான்கரை லட்சம் மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்கிற துறையை உருவாக்கி, இதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் துறை உருவாகிய பத்து நாட்களுக்குள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 549 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகளையும் முதல்வர் வழங்கியுள்ளார்.

சரி, நான்கரை லட்சம் மனுக்களுக்கும் நுாறு நாட்களில் தீர்வு சாத்தியமா? என்கிற கேள்வியுடன் இந்த துறையில் பணியாற்றும் அதிகாரிகளிடம் பேச்சுக்கொடுத்தோம் “தமிழகம் முழுவதுமிருந்து 72 மரப்பெட்டிகளும், 252 சிறிய பெட்டிகளிலும் பெறப்பட்ட மனுக்களை நாங்கள் முதலில் கோரிக்கையின் அடிப்படையில் துறை வாரியாக பிரித்து வருகிறோம். அடுத்தாகப் பிரிக்கப்பட்ட மனுக்களைத் தமிழக அரசின் டேட்டா என்ட்ரி துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மனுக்களை பதிவேற்றம் செய்யும் போதே, எந்த மாவட்டம், எந்த தாலுகா, எந்தத் துறை போன்ற விவரங்களையும் உள்ளீடு செய்வதால் மனுவைப் பதிவேற்றம் செய்த அடுத்த நிமிடமே சம்பந்தப்ட்ட அலுவலரின் பார்வைக்கு மனுவின் நகல் சென்றுவிடுகிறது. ஒவ்வொரு மனுக்களுக்கும் தனித்தனியான எண்களும் கணினியில் பதிவாகிவிடுகிறது. கடந்த வாரம் வரை மூன்றறை லட்சம் மனுக்களைத் துறை வாரியாகப் பிரித்து, அதில் இரண்டரை லட்சம் மனுக்களைக் கணினியில் பதிவேற்றம் செய்துவிட்டோம். இந்தப் பணிகளுக்காக 25 மாவட்டங்களிலிருந்து, சுழற்சி முறையில் அதிகாரிகள் பணியில் இருக்கிறார்கள். அதோடு சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களும் இதில் ஈடுபட்டுள்ளார்கள் ” என்கிறார்கள்.

ஷில்பா பிரபாகர் சதீஷ்

பதிவேற்றம் செய்யப்பட்ட மனுக்களில் முதியோர் ஒய்வூதியம் வேண்டும் என்கிற கோரிக்கை மனுக்களே அதிகம் உள்ளதாம். அடுத்ததாக இலவச பட்டா வேண்டிய மனுக்கள் உள்ளது என்கிறார்கள். தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்திலிருந்து 44 ஆயிரம் மனுக்களும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் சிறப்பு அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷிடம் இதுகுறித்து கேட்டபோது “ மனுக்களை துறைவாரியாக பிரிப்பதில் எங்களுக்குள்ள சிக்கலே, ஒரு சிலர் ஒரே மனுவில் மூன்று கோரிக்கைளைகூட எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு கோரிக்கையும் ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்டதாக உள்ளது. அந்த மனுவை ஸ்கேன் செய்து மூன்று துறைகளுக்கும் அனுப்பவேண்டியுள்ளது. பதிவேற்றம் செய்யப்பட்ட மனுவின் மீதான நடவடிக்கைகளை சென்னையிலிருந்தே ஆய்வுசெய்ய முடியும். துறைசார்ந்த கோரிக்கை மனுக்களைத் தவிர சில மனுக்கள் எங்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது மனுவில் “ தலைவரே எனது கல்யாணத்தை நீங்க நடத்தி வைக்கவேண்டும்” என்று எழுதியிருக்கிறார். ஒரு கட்சிக்காரர் “ எங்கள் வீட்டிற்கு நீங்கள் சாப்பிட வரவேண்டும் தலைவரே” என்று குறிப்பிட்டுள்ளார்.

பயனாளர்களுடன் ஸ்டாலின் பேச்சு

“கட்சியில் நான் இந்தப் பொறுப்பில் இருக்கிறேன், எனக்கு இந்தப் பொறுப்பு வேண்டும்” என்கிற கோரிக்கையைக்கூட மனுவாகப் போட்டுள்ளார்கள். நகர்புறங்களிலிருந்து வந்த மனுக்களில் எங்கள் பகுதிக்கு இந்தத் தேவைகள் உள்ளது என்று பொதுவான கோரிக்கைளையும் குறிப்பிட்டு மனுக்கள் வந்துள்ளன. காவல்துறையில் உள்ள தங்கள் வழக்குகளைப் பற்றி சிலர் குறிப்பிட்டுள்ளார்கள். ஆச்சர்யமாக சில மனுக்களில் “எங்களுக்கு எந்த கோரிக்கைகளும் இல்லை. உங்களுக்கு வாழ்த்துகள்“ என்றும் உள்ளது. துறை சாராத மனுக்களை எல்லாம் தனியாகப் பிரித்து நேரடியாக முதல்வரின் பார்வைக்கு அனுப்ப இருக்கிறோம். அதிகமான மனுக்களில் “வேலை வேண்டும்” என்கிற கோரிக்கையுள்ளது. அந்த மனுக்களை வேலை வாய்ப்புத்துறைக்கு அனுப்பி, அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு அவர்களது கல்வித் தகுதி, எந்தத் துறையில் பணியாற்ற விருப்பம் போன்ற விவரங்களை பெற்றுவருகிறோம்.

ஒவ்வொரு மனுக்கள் மீதும் அதிகாரிகள் இத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற காலக்கெடுவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் சுறுசுறுப்புடன் பணியாற்றுவதால் நான்கரை லட்சம் மனுக்களுக்கும் நுாறு நாட்களில் கண்டிப்பாக தீர்வு காணப்படும்“ என்கிறார் உற்சாகமாக. முதல்வரின் பொறுப்பில் இந்த துறை இருப்பதால், தலைமை செயலாளர் இறையன்பு இந்தத் துறையை நேரடியாகக் கண்காணிப்பில் வைத்திருக்கிறார்.

தலைமை செயலகம்

ஒவ்வொரு நாளும் எத்தனை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என அனைத்து ரிப்போர்டும் தினமும் வழங்கப்படுகிறது. கொரோனா கால நெருக்கடியான நிலையிலும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' மீதான மனுக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தலைமையிலிருந்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவு போய் இருக்கிறதாம். வெள்ளியன்று நேரடியாகவே இந்தத் துறை செயல்படும் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்துள்ளார். அதோடு மனு அளித்த இருவரிடம் தொலைபேசி வழியாக உரையாடி அவரது குறையை நேரடியாகவும் கேட்டறிந்துள்ளார்.

மனு அளித்தவர்கள், தங்களின் நம்பிக்கைக்கு நூறு நாட்களில் விடை கிடைக்கும் என்ற அறிவிப்பால் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் . பம்பரமாய் சுழல்கிறார்கள் அதிகாரிகள். நல்லது நடக்கட்டும்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/banquet-invitation-to-cheif-minister-mkstalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக