Ad

திங்கள், 31 மே, 2021

`தமிழகத்தில் இந்துத்துவா சித்தாந்தம் வளரப் பாடுபடுவேன்’ -வேலூர் இப்ராஹிமிற்கு பாஜக-வில் தேசிய பதவி

பிரதமர் மோடியின் ஆதரவாளரும், ‘தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத்’ என்ற அமைப்பின் தலைவருமான வேலூர் சையது இப்ராஹிம், பா.ஜ.க-வில், தேசிய சிறுபான்மைப் பிரிவுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து, இப்ராஹிமிடம் பேசினோம்.

‘‘தேசிய நீரோட்டத்தில், சிறுபான்மையின மக்களை மத ரீதியாக அல்லாமல், சம ரீதியாக இணைக்க வேண்டும் என்பதே பா.ஜ.க-வின் அடிப்படை நோக்கம். அந்த அடிப்படையில்தான் மத நல்லிணத்துக்காக இங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளை எதிர்த்து திறம்பட செயலாற்ற தேசிய செயலாளராக என்னை நியமித்திருக்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரசாரம் செய்யவும், கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் இந்த பொறுப்பு பெரிய வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.

பதவி பட்டியல்

வரும் காலத்தில் இஸ்லாமிய மக்களையும், கிறிஸ்தவ மக்களையும், இந்த சமூகத்தில் சமத்துவமான நிலைக்கு கொண்டு வர பிரசாரம் செய்வேன். பொருளாதாரம், கல்வியில் பின்னடைந்த அந்த மக்களின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு திட்டங்களையும் இலகுவாக கொண்டுப்போய் சேர்ப்பது என்னுடைய முதல் பணியாக இருக்கும். அனைத்து மாநிலங்களிலுமே மாநில வெறி ஊட்டப்படுகிறது. தேசத்தின் மீதான நம்பிக்கை, தேசப்பற்று சம்பந்தமான விஷயங்கள் பேசபட்டால் கிண்டலடிக்ககூடிய நிலை காணப்படுகிறது. அந்த நிலையை மாற்ற வேண்டும். இதற்கெல்லாம், சிறுபான்மையின மக்கள்தான் பலியாகிறார்கள்.

குறிப்பாக, பா.ஜ.க-க்கு எதிராக நின்றால்தான் பாதுகாப்பு என்ற மனநிலையில் சிறுபான்மையின மக்களை ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். அது உண்மையில்லை என்பதையும் இந்துத்துவா சித்தாந்தம் இஸ்லாமியர், கிறிஸ்துவர்களுக்கு எதிரானதொரு மாயை என்பதையும் மக்களிடம் தெளிவுப்படுத்துவோம். தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் இந்துத்துவா சித்தாந்தத்தை வளர்க்க கடுமையாகப் பாடுபடுவேன். தி.மு.க-வின் எதிர்ப்பையெல்லாம் பார்த்து அஞ்சக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. மாநில ரீதியாக தி.மு.க அடக்குமுறைகளை மேற்கொண்டால் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம். அதன்மூலம் தி.மு.க-வின் தவறான செயல்பாடுகளை மக்களிடம் விளக்குவோம்.

வேலூர் இப்ராஹிம்

சமீப காலமாக, ஜனநாயக முறையில் தவறுகளை சுட்டிக்காட்டும் பா.ஜ.க நிர்வாகிகள் குறித்து தி.மு.க அமைச்சர்கள் வரம்பு மீறி மரியாதை குறைவாக பேசுவதும் தொடர்கிறது. இது, தொடருமேயானால் ஜனநாயக ரீதியாக நாங்களும் பதிலடி தருவோம். பா.ஜ.க தான் அனைவருக்குமான கட்சி. ‘தமிழகத்தில் தாமரையே மலராது’ என்று சொன்னார்கள். ஆனால், நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கக்கூடிய வாணியம்பாடி, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில்கூட பா.ஜ.க கூட்டணியிலுள்ள அ.தி.மு.க-தான் வெற்றி பெற்றிருக்கிறது. இஸ்லாமியர்கள் மத்தியிலும் ஓர் தெளிவு வந்திருக்கிறது. ‘தி.மு.க ஓர் சிறந்த கட்சி; கடந்த காலங்களில் நன்றாக செயல்பட்டிருக்கிறார்கள்’ என்கிற எண்ணத்தில் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. பத்து ஆண்டுகளாக ஒரே ஆட்சி நீடித்துவந்த நிலையில், ஆட்சி மாற்ற மனநிலையில் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க இன்னும் அதிகமாக காலூன்றும். அதில், சிறுபான்மையின மக்களின் பங்கும் அதிகமாகவே இருக்கும்’’ என்கிறார் வேலூர் இப்ராஹிம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vellore-ibrahim-gets-national-level-post-in-bjp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக